திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகிலுள்ள பிச்சாண்டார்கோயில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திரசோழனின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
உத்தமர்கோயில் என்றும் பிச்சாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில் இந்திய தொல்லியல் துறையால் 1902-ம் ஆண்டில் படியெடுக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் மகனான முதலாம் ராஜாதிராஜனின் 30-வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இருந்தது. இந்த கல்வெட்டே இந்த கோயிலின் பழமையான கல்வெட்டு என கருதப்பட்டிருந்தது.
கோயிலும் அந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என ஒரு கருத்து இருந்தது. இந்த கல்வெட்டில் கூட இந்த ஊரின் பெயர் உத்தமர்கோயில் என்று இல்லை. ஆனால், திருமங்கையாழ்வார் தம் பாசுரத்தில் ‘‘பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை’’ எனப் பாடுகிறார்.
எனவே, இத்தலத்தின் பெயர் திருக்கரம்பனூர் எனவும் இங்குள்ள பெருமாள் பெயர் உத்தமர் எனவும் அறிய முடிகிறது. பின்னாளில் வைணவர்களால் இவ்வூரின் பெயர் ‘‘உத்தமர் கோயில்’’ என்றே அழைக்கப்பட்டு வந்து அப்பெயரே இன்றும் நிலைத்து விட்டதை அறியலாம்.
ஆனால், பிச்சாண்டார்கோயில் என்ற மற்றொரு பெயர் எப்போதிலிருந்து அழைக்கப்பட்டது என்ற சான்றுகள் இல்லாமல் இருந்தது.
இந்த கோயிலில் குடமுழுக்கையொட்டி, திருப்பணி செய்யப்பட்டபோது அகற்றப்பட்ட பிற்கால கட்டுமானங்களுக்கு அடியில் கல்வெட்டுகள் மிகவும் அழுக்கடைந்து வீணாகும் நிலையில் இருந்ததை, உத்தமர்கோயில் செயல் அலுவலர் ஜெய்கிஷண், யாதும் ஊரே யாவரும் கேளிர் அமைப்பிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பின் பார்த்திபன், இளையராஜா சோழசேனை வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த தங்கவேல், சீதாலட்சுமி, சேதுராமன் ஆகியோர் அந்த கல்வெட்டை தூய்மை செய்தனர்.
அப்போது, இங்கு முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டு முதலாம் ராஜேந்திரனின் 16-வது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். அதாவது 1028-ம் ஆண்டு. இந்த கல்வெட்டிலிருந்து இக்கோயில் இவராலேயே கட்டப்பட்டது என உறுதியாக கூறலாம்.
இந்த கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பு, ஈழம், வங்காளதேசம், கலிங்கம், பாண்டிய, சேர நாட்டு, சாளுக்கிய நாட்டு படையெடுப்பின் வெற்றிகளை கூறி, அதன்பின் இந்த ஊர் ராஜாஸ்ரிய வளநாட்டு, பாச்சில் கூற்றத்து, திருக்கரம்பனூர் என்றும், இக்கோயிலிலுள்ள சிவன் மூலஸ்தானத்து ‘‘பிச்சதேவர்’’ என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கோயிலின் இறைவன் பெயர் ‘‘பிச்சதேவர்’’ என அறியலாம். பிச்சதேவர் என்றால் பிக் ஷாடனரை குறிக்கும். மேலும், இக்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்கள் குறித்தும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஊரிலுள்ள சிவன்கோயிலை சைவர்கள் பிச்சாண்டார்கோயில் என்றும், வைணவர்கள் உத்தமர்கோயில் என்றும் அழைத்து வந்ததை அறியலாம். காலப்போக்கில் இவ்வூரின் ஆதிபெயரான திருக்கரம்பனூர் மறைந்து இன்று இப்பெயர்களில் அழைத்து வரப்படுகிறது என அறிய முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago