பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை; சிறப்பு டிஜிபியைப் பாதுகாக்க நினைத்தால் போராட்டத்தில் குதிப்போம்: ஸ்டாலின் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

முதல்வர் சுற்றுப் பயணத்திற்குப் பாதுகாப்புக்குச் செல்லும்போதே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் தைரியத்தை சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது அசிங்கத்தின் உச்சபட்சம், ஆணவத்தின் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வழக்குத் தொடராமல் பாதுகாக்க நினைத்தால் திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை.

''பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸை, முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும், அதிமுகவினரையும் பாதுகாக்கும் முதல்வர் பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கில 'தி இந்து' பத்திரிகையில் இன்றைய தினம் “பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது புகார்” என்று செய்தி வெளிவந்திருக்கிறது. தங்களுக்கு நேரும் அநீதியை - சந்திக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து தயங்கும் நேரத்தில் இந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது சீனியர் போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த பெண் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்.

புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை, தமிழகக் காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கண்ணியமான ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் தமிழகக் காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் “யூனிபார்மில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை” என்று உருவாகியுள்ள நிலையைப் பார்த்து அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஆனால், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலேயே அதிமுகவினரைக் காப்பாற்றிய முதல்வர், “பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி” என நடத்தி வரும் பிரச்சாரத்தைப் பொய்யாக்கி விட்டது. அதிமுக ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார். அதையும் மூடி மறைத்தார் முதல்வர்.

உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகு சிபிசிஐடியில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிலும் பாதுகாத்து, இன்றுவரை அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி காப்பாற்றுகிறார்.

அதன் விளைவு - இன்றைக்குப் பேச வேண்டும் எனத் தனது காருக்குள் அழைத்து ஒரு பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கும் தைரியத்தைக் காவல்துறையில் உள்ள சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது கேவலமானது. அதுவும், முதல்வரின் பிரச்சாரப் பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ள - அசிங்கத்தின் உச்சபட்சம் - நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு.

தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதல்வர் உருவாக்கியுள்ள இந்த இழிநிலையைத் திமுக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து - சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து - கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீஸார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயன்றால், திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்