வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கான ரூ.1,330 கோடி டெண்டருக்கு தடை கோரி வழக்கு: இன்று வரை இறுதி செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவு

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ரூ.1,330கோடி மதிப்பிலான டெண்டருக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இன்று உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டரை இறுதி செய்யக் கூடாது என தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் காமராஜர்துறைமுகம் மூலமாக ரூ.1,330 கோடிமதிப்பிலான 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கடந்த ஜன.18–ம் தேதி வெளியிட்டது. டெண்டர் நேற்று (பிப்.23) இறுதி செய்யப்படவிருந்த நிலையில் அதற்கு தடை விதிக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் நிலக்கரி நிறுவனம் சார்பில் திருமலைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘ரூ.2 கோடிக்கு அதிகமான டெண்டர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என வெளிப்படையான டெண்டர் சட்டத்தில் விதிகள் உள்ளன. ஆனால் ரூ.1,330 கோடி மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த டெண்டரை எளிதாக எடுக்கும் வகையில் விதிகளை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மாற்றியுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்க முடியாமல், வெளிநாட்டு நிறுவனங்களை நேரடியாக அனுமதிக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இந்த டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள காரணத்தால் இந்த டெண்டருக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்படவுள்ளது.

நிலக்கரி வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டருக்கு தடை கோரி வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. இதுதொடர்பாக அவர் பொதுநல வழக்கு மட்டுமே தொடர முடியும்’’ என்றார்.

அப்போது மனுதாரர் தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ‘‘இந்த டெண்டர்,விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் நிறுவனம் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் இந்தடெண்டரில் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. பிப்.23 அன்று ரூ.1,330 கோடி மதிப்பிலான டெண்டரை இறுதி செய்துவிட்டால் அதன்பிறகு வழக்கு தொடர்ந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த வழக்கில் நாளை (இன்று) உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை டெண்டரை இறுதி செய்யக் கூடாது’’ என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்