2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும்: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்

By செய்திப்பிரிவு

2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும் என, இடைக்கால பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

"2019-20 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே, கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், 24 அன்று தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நிதியாண்டின் கடைசி வாரத்தில்தான் கணிசமான அளவில் வருவாய் செலுத்தப்படும். ஊரடங்கு காரணத்தால், 2019-20ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் எதிர்பார்த்த வருவாய் இலக்கை மாநில அரசால் அடைய முடியவில்லை. இதன் விளைவாக, 2019-20ஆம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறையான திருத்த மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்பட்ட 55 ஆயிரத்து 58.39 கோடி ரூபாய், அதாவது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 2.97 சதவீதம், 2019-20ஆம் ஆண்டு கணக்கில் 60 ஆயிரத்து 178.63 கோடி ரூபாய், அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்த ஒட்டுமொத்தப் பற்றாக்குறையை அனுமதிக்க, 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ஊரடங்கை அமல்படுத்தியதாலும், வரி நிலுவைகளைச் செலுத்துவதற்காக கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டதாலும், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மாநில சொந்த வரி வருவாயில் சரிவு ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாநில சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மதிப்பு கூட்டு வரியின் வசூலிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களின் வசூல் மீண்டும் புத்துயிர் பெற்றது. எனினும், மோட்டார் வாகன வரியின் வசூல் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. 2017-18 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான நீண்டகால நிலுவையிலுள்ள விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட்டு, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 4,321 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டுமொத்தமாக மாநில அரசின் சொந்த வரி வருவாய் 1 லட்சத்து 9,968.97 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையானது, 2020-21ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாயாக எதிர்பார்க்கப்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 530.30 கோடி ரூபாயைவிட 17.64 சதவீதம் குறைவானது.

மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 32 ஆயிரத்து 849.34 கோடி ரூபாயாக குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டுக்கான மத்திய வரியின் பங்கு 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 23 ஆயிரத்து 39.46 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய வரி வருவாய் வசூலில் ஏற்பட்ட குறைவில் ஒரு பங்கு, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டிருந்தாலும், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கு அதிகரித்து வருவதன் மூலம் மாநிலங்களுக்குப் பகிர்ந்துகொள்ளக் கூடிய மத்திய வரிகள் குறைவது முக்கியக் காரணமாகும். மத்திய அரசின் வருவாயில் மாநிலங்கள் தங்களுக்கு உரிய பங்கினைப் பெறுவதற்கு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி வீதங்களுடன் இணைத்திட மத்திய அரசை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தினால், 2020-21ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 15 ஆயிரத்து 898.81 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வரியல்லாத வருவாயும், திருத்த மதிப்பீடுகளில் 12 ஆயிரத்து 628.79 கோடி ரூபாயாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் தொடர்பான ஒதுக்கீடுகளை மத்திய அரசு குறைத்ததனால், மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் தொகை, முந்தைய கணிப்புகள்படி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையை சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு கூடுதல் கட்டணத்திலிருந்து திரும்பச் செலுத்தப்படும் கடனாகக் கருதப்படுகிறது.

2020-21 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியம் 37 ஆயிரத்து 96.69 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்டதற்கு மாறாக, 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 35 ஆயிரத்து 9.40 கோடி ரூபாயாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், மொத்த வருவாய் வரவினம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 700.62 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது, வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டிலிருந்து 17.63 சதவீதம் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.

2020-21ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய் கணக்கு குறித்த மொத்த செலவினம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 992.78 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. வருவாய் கணக்கில் கூடுதல் செலவினத்திற்காக 11 ஆயிரத்து 642.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மதிப்பீடு ஒன்று இந்த அவையின் முன் ஏற்கெனவே வைக்கப்பட்டது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, சுகாதாரம் மற்றும் நிவாரணம் தொடர்பான பணிகளுக்காக 12 ஆயிரத்து 917.85 கோடி ரூபாய் வருவாய்க் கணக்கில் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த செலவினங்கள் குறைக்கப்படாமல் இருப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது.

இந்தியாவில், 2020-21 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தடைபடாமல் வழங்கிய சில மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். அரசால் அறிவிக்கப்பட்ட செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளினால் தோராயமாக 13 ஆயிரத்து 250 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 694.69 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

வருவாய் வரவினங்களில் ஏற்பட்ட கடும் சரிவினாலும், அதிகரித்த செலவினங்களாலும், 2020-21ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வருவாய்ப் பற்றாக்குறை 65 ஆயிரத்து 994.06 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை, 2020-21ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் கணிக்கப்பட்ட 21 ஆயிரத்து 617.61 கோடி ரூபாயைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக மூலதனச் செலவினங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற சி.ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு, குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் ஏனைய உட்கட்டமைப்புத் துறைகளில் 20 ஆயிரத்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான மூலதனப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின்போது, திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும், 2020-21ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் மூலதனச் செலவினம் 37 ஆயிரத்து 734.42 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இது 2019-20ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மூலதனச் செலவினமான 25 ஆயிரத்து 631.58 கோடி ரூபாயை விட 12 ஆயிரத்து 102.84 கோடி ரூபாய் அதிகமாகும்.

இயல்பற்ற நிலையை எதிர்நோக்குவதற்கு, அசாதாரணமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் வருவாய் கடுமையாகக் குறைந்துள்ளது. ஆனால், மக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, செலவினங்கள் அதிகரிக்கப்பட்டன. எனவே, அரசு கடன்கள் பெறுவதைத் தவிர்க்க இயலாது. இதனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனவே, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் 2 சதவீதம் கூடுதல் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அளித்த அனுமதியின்படி, இந்த அரசு கடன் பெற்றுள்ளது. வணிகம் மேற்கொள்வதை எளிதாக்குதல் மற்றும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் ஆகிய இவ்விரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு நிறைவேற்றியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிதிகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இது குறித்த கூடுதல் கடன் பெறுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தால் அனுமதிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்குப் பதிலாக, கடனாக 7,608.38 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும். இந்தக் கடன், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு மேல்வரியிலிருந்து மத்திய அரசால் திருப்பிச் செலுத்தப்பட இருப்பதால், மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின் ஒரு பகுதியாக இது கருதப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், 2020-21ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.99 சதவீதமாக, அதாவது 96 ஆயிரத்து 889.97 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 15-வது நிதிக்குழு பரிந்துரைக்கும், திருத்தப்பட்ட 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமைச் சட்டத்திற்கும் ஏற்ப உள்ளது.

2020-21ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்திருந்த வருவாய் வரவினங்கள் மீண்டெழும் என்று 2021-22ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 45 ஆயிரத்து 395.50 கோடி ரூபாயாகவும், மதிப்புக்கூட்டு வரி வருவாய் 56 ஆயிரத்து 413.19 கோடி ரூபாயாகவும், மொத்த வணிக வரி வருவாய் 1 லட்சத்து 2,477.14 கோடி ரூபாயாகவும் இருக்கும் என 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மாநில ஆயத்தீர்வை வருவாய் 9,613.91 கோடி ரூபாயாகவும், மோட்டார் வாகன வரி வசூல் 6,581.75 கோடி ரூபாயாகவும், முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டண வருவாய் 14 ஆயிரத்து 879.37 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 641.78 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரியல்லாத வருவாய் 15 ஆயிரத்து 648.42 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நிதிப்பகிர்வு 2021-22ஆம் ஆண்டில், சிறிய அளவில் குறைந்துள்ளது. எனவே, மத்திய வரிகளில் தமிழ்நாட்டின் பங்கு 27 ஆயிரத்து 148.31 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறைக்கான மானியமாக எதிர்பார்க்கப்பட்ட 2,204 கோடி ரூபாய் உட்பட, மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியம் 40 ஆயிரத்து 553.45 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்த வருவாய் வரவினம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 991.96 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம், ஓய்வூதியங்கள், வட்டித்தொகை மற்றும் திட்டம் சார்ந்த செலவினங்கள் அனைத்துக்கும் 2021-22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான வருவாய் செலவினங்கள் உள்ளபடியான நிலவர அடிப்படையில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 409.26 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2021-22ஆம் ஆண்டுக்கான வருவாய்ப் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417.30 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்புதலளிக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றுவதற்காக, 2021-22 ஆம் ஆண்டின் மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவினங்களில் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், மூலதனச் செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து 43 ஆயிரத்து 170.61 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாது. பொருளாதாரத்தில் எந்த ஒரு பாதகமான தாக்கமும் ஏற்படாமல் இருப்பதற்காக, இந்தப் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைக்க வேண்டும். 2021-22ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை அளவை உயர்த்தி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.94 சதவீதம், அதாவது 84 ஆயிரத்து 202.39 கோடி ரூபாயாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2021-22ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறைக்கு நிதி வழங்கும் வகையில், அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்தக் கடன் அளவான 85 ஆயிரத்து 454 கோடி ரூபாயில், நிகரக் கடன் தொகையாக 84 ஆயிரத்து 686.75 கோடி ரூபாய் திரட்டப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் அன்றைய நிலையில், ஒட்டுமொத்தக் கடன் 4 லட்சத்து 85 ஆயிரத்து 502.54 கோடி ரூபாயாகவும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் அன்றைய நிலையில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 189.29 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவினங்களின் நிலையைத் தக்கவைக்க 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் அதிக அளவில் கடன் தேவைப்படும் என்பதை அறிந்து, 15-வது நிதிக்குழு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதத்தை மாற்றியமைத்தது. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிதி மேலாண்மை உத்தியின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 2020-21ஆம் ஆண்டில் 28.90 சதவீதம் வரையும், 2021-22ஆம் ஆண்டில் 28.70 சதவீதம் வரையும், 2022-23ஆம் ஆண்டில் 29.30 சதவீதம் வரையும் மற்றும் 2023-24ஆம் ஆண்டில் 29.31 சதவீதம் வரையும் இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்றைய நிலையில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் விகிதம் 24.98 சதவீதமாகவும், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 அன்றைய நிலையில் 26.69 சதவீதமாகவும் இருக்கும். அவை, 15-வது நிதிக்குழுவின் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவையே ஆகும்".

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்