பெட்ரோல் - டீசல் விலை உயர்வு; தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் விளக்கம்

By செய்திப்பிரிவு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல என, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 23) 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இடைக்கால பட்ஜெட் தொடர்பாக, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளினால், இந்த நிதியாண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், ஏறத்தாழ 2.02 சதவீதம் 'பாசிட்டிவ் குரோத்' ஆக (Positive Growth) இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் 7.7% வீழ்ச்சி, நெகட்டிவ் குரோத் (Negative growth) இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் 5 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி இருக்கும் என தெரிய வருகிறது. மற்ற துறைகளிலும் வீழ்ச்சி இல்லாமல், 1.25% - 1.6% என்ற அளவில் வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் நிதியாண்டில் வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. அந்த வளர்ச்சி 2 சதவீதமாக குறைந்துள்ளது. அரசுக்கு வரிகளின் மூலம் வரக்கூடிய வருமானம், ஏறத்தாழ 18% குறைந்துள்ள நிலை உள்ளது. இருந்தபோதிலும், பெருந்தொற்றை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மேலும், மூலதன செலவினங்களை தொடர்ந்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம், இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பொருளாதார நடவடிக்கையாக செலவினங்களை குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தோம்.

அதன்பிறகும்கூட, இந்த நிதியாண்டில் வருவாய் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.6,000 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. முதலில் சராசரியாக 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவிருக்கும் என கணக்கிடப்பட்டது. திருத்திய மதிப்பீடுகளில் ஏறத்தாழ 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 2,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு மூலதன கணக்கில் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் ஒரு பக்கம் வருவாய் குறைந்துள்ளது. மற்றொரு பக்கம் செலவு ஓரளவுக்கு அதிகரித்துள்ளதால், வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை இரண்டுமே அதிகரித்துள்ளன.

மத்திய அரசு வழக்கமாக மாநில உற்பத்தியில் 3% நிதி பற்றாக்குறை வைத்து மாநில அரசு கூடுதலாக கடன் வாங்குவதற்கான வாய்ப்பு தருகிறார்கள். இந்தாண்டு சிறப்பு காரணங்களுக்காக, கடன் வாங்கக்கூடிய தொகை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 5% வரை கடன் வாங்க இயலும். இந்த சதவீதம், தமிழகத்திற்கு ஏறத்தாழ 95 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த நிதியாண்டை தமிழக அரசு சமாளித்துள்ளது.

அடுத்த நிதியாண்டில், இந்த 5% என்ற உச்சவரம்பு, 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கக்கூடிய தன்மை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்பும் என்கிற அடிப்படையில், வரி வசூலில் அதிகரிப்பு ஏற்படும் என்கிற கணக்கீட்டில், மேலும், இந்தாண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அடுத்தாண்டின் இடைக்கால பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள் தவிர்த்த நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, எந்தவித வரியும் விதிக்காமல் ஏற்கெனவே இருக்கக்கூடிய வரிவிகிதங்களில் வருவாயின் கணக்கெடுப்பு இரண்டுதான் இடைக்கால பட்ஜெட்.

இந்த இடைக்கால பட்ஜெட் அடிப்படையில் உடனடி செலவுகளுக்காக நிதி கோரவுள்ளோம். 60%, அதாவது 6-7 மாதங்களுக்குத் தேவையான செலவினத்தை ஏற்றுக்கொள்வதற்கான நிதியை பெற உள்ளோம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளதே?

கடன் அளவு வளரும். அதேநேரத்தில் பொருளாதாரமும் வளரும். 14-வது நிதி கமிஷன், 25 சதவீதத்திற்குள் கடனை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியது. 15-வது நிதி கமிஷன், 28-29% வரை செல்லலாம் என கூறுகிறது. மாநிலத்தின் மொத்த கடன் அளவானது அந்த குறியீட்டுக்குள் தான் இருக்கிறது. அதைத்தாண்டி போகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக கடன் வாங்குவது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு பகுதி, அதாவது, 3% என்ற கணக்கீட்டில் தான் வாங்குகிறோம். மத்திய அரசின் அனுமதியுடன் தான் கடன் வாங்குகிறோம். நாங்களாக கடன் வாங்கவில்லை. மத்திய அரசு கடன் வரம்பை நிர்ணயித்துள்ளது. அந்த வரம்புக்குள்தான் தமிழகம் இருக்கிறது. அந்த வரம்பை மீறி கடன் வாங்கிய மாநிலங்கள் இருக்கின்றன.

அந்த கடனை வாங்கி என்ன செலவுகள் செய்யப்படுகின்றன, அதனால் மாநிலத்திற்கு வளர்ச்சி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். வளர்ச்சி இருந்தால், அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வளர்ச்சி இல்லையென்றால் பிரச்சினை.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்புதான் காரணம் என கூறப்படுகிறதே?

பெட்ரோல் - டீசலுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. கடந்த மே, 2020 இல், பெட்ரோல் - டீசலுக்கான வாட் வரியை மாற்றி அமைத்தோம். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயரும்போது தமிழக அரசுக்கு வருமானம் குறையாமலும், விலை உயர்வின்போது வரியின் தாக்கம் மக்களை பாதிக்காத வகையிலும் இருக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. அதே சமயத்தில், மத்திய அரசு வரியை உயர்த்தியது. இப்போதைய உயர்வுக்கு தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல.

மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி வருவாயில் பாக்கி உள்ளதா?

தொடர்ச்சியாக வந்துவிடும் அதில் பிரச்சினையில்லை. ஆனால், வரும் வரி வருவாயின் அளவுதான் குறைகிறது. தமிழ்நாட்டுக்கு 4.189% வரி வருவாய் வர வேண்டும். இந்த நிதியாண்டில் மத்திய வரிவருவாயிலிருந்து தமிழகத்துக்கு 32 ஆயிரத்து 849 கோடி ரூபாய் வர வேண்டும் என கணக்கிட்டோம். ஆனால், 23 ஆயிரத்து 39 கோடியாக குறைத்து, மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளனர். ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

வரி வருவாய் குறைந்திருந்தாலும், கூடுதலாக கடன் பெற்று அனைத்து வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்