தமிழகத்துக்கு நிதிக்குறைப்பு; போராடிப் பெறும் நிலை: மத்திய அரசை இந்த ஆண்டும் விமர்சித்துள்ள இடைக்கால பட்ஜெட் 

By செய்திப்பிரிவு

15-வது நிதிக்குழு மற்றும் மத்திய-மாநில நிதி உறவுகள் குறித்து இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிதிக்குழு மானியத்தில் 14-வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதி சரி செய்யப்படாமல் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ் இன்று இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் இந்த ஆண்டும் மத்திய அரசின் நிதிக்கொள்கை குறித்து கடும் விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது.

நிதி அறிக்கையின் அப்பகுதி:

''2021-22 முதல் 2025-26 வரையுள்ள காலத்திற்கான 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான குறிப்பாணை 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிக்குழுவினால் அளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், தமிழ்நாடு போன்று சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை அமைந்துள்ளது.

இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பதுடன் முந்தைய நிதிக்குழுக்களில், குறிப்பாக 14-வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்யவில்லை.

மத்திய அரசிடமிருந்து, மாநிலத்திற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. 14-வது நிதிக்குழுவில், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து, 15-வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் 4.189 சதவீதமாக ஓரளவிற்கு உயர்ந்து, தற்போது இறுதி அறிக்கையில் 4.079 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2020-21ஆம் ஆண்டின் தமிழ்நாட்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறை மானியமான 4,025 கோடி ரூபாயை வழங்க முதன்முறையாக இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

இது நமது மாநிலத்திற்குத் தொடர்ந்து உதவுகின்ற வகையில் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இறுதி அறிக்கையில் 2021-22ஆம் ஆண்டில், வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தைக் குறைத்து 2,204 கோடி ரூபாய் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகை, முதலாவது ஆண்டிற்கு மட்டும்தான் (2021-22) வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மொத்த உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை, 2020-21ஆம் ஆண்டில் 5,344 கோடி ரூபாயிலிருந்து 2021-22ஆம் ஆண்டில் 3,979 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 13-வது நிதிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட 5,455.90 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்பு மானியத்தைவிட, 14-வது நிதிக்குழுவின் ஐந்தாண்டு காலத்திற்கான உள்ளாட்சி அமைப்பு மானியம் மும்மடங்கு அதிகரித்து 17,009.74 கோடி ரூபாயாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதனை ஒப்பிடுகையில், 15-வது நிதிக்குழு 2021-22ஆம் ஆண்டிலிருந்து 2025-26ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கான உள்ளாட்சி அமைப்பு மொத்த மானியமாக 21,246 கோடி ரூபாயைப் பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மானியங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவில் அதிகரிக்கப்பட்டதையே காட்டுகிறது.

14-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தொகையை விட, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியத் தொகை 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது, 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 8,232.31 கோடி ரூபாயிலிருந்து, 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 7,187 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளன.

ஏனென்றால், 15-வது நிதிக்குழுவால், தேசிய நகர்ப்புற மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், தேசிய ஒட்டுமொத்த மக்கள்தொகை மற்றும் பரப்பளவில், தமிழ்நாட்டின் மக்கள்தொகை மற்றும் பரப்பளவின் விகிதாச்சாரத்தை தவறான அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளின் மானியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு போன்ற நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முந்தைய நிதிக்குழுவால், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒட்டுமொத்த மானியத் தொகையில், நிபந்தனையில்லாத மானியத்தின் பங்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 90 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மானியங்கள் செயல்திறன் மானியமாகவும் ஊக்க மானியமாகவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்படும். முந்தைய அனுபவத்தினால், உண்மையில் இந்த மானியங்கள் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுமா என்ற ஐயம் உள்ளது.

14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியம் மற்றும் 2,029.22 கோடி ரூபாய், செயல்திறன் மானியம், மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்த அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, 2019-20ஆம் ஆண்டுக்கான உரிய அடிப்படை மானியம் 3,796.81 கோடி ரூபாய் இவ்வாண்டில்தான் பெறப்பட்டுள்ளது.

2017-18 முதல் பெரும்பாலான மாநிலங்களுக்கு 14-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட செயல்திறன் மானியம் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. செயல்திறன் மானியத்திற்காக சுட்டிக் காட்டப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் தமிழ்நாடு பூர்த்தி செய்து, அதன் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தது. 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய ஒட்டுமொத்தச் செயல்திறன் மானியங்களையும், மேலும் காலதாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கான மானியத்தை மத்திய அரசிடமிருந்து உரிய நேரத்தில் பெறுவதற்குத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

14-வது நிதிக்குழு பரிந்துரைத்தது போல் அல்லாமல், மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் பரிந்துரைத்துள்ளது. நீதித்துறை மற்றும் புள்ளியியல் துறை உட்பட ஆளுகை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், சுகாதாரம், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வேளாண்மை மற்றும் ஊரக உட்கட்டமைப்பு உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளுக்காக தமிழ்நாட்டிற்கு 4,784 கோடி ரூபாய் செயல்திறன் ஊக்கத்தொகையையும், மானியங்களையும் 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், மத்திய நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்ட குறிப்பாணையில், துறைகளுக்கான குறிப்பிட்ட மானியங்களைப் பொறுத்தவரையில், ‘நடைமுறையில் உள்ள மற்றும் புதிய மத்திய அரசால் பொறுப்பேற்கும் மற்றும் மத்திய துறை திட்டங்களை வடிவமைக்கும்போதும், செயல்படுத்தும்போதும், ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட துறைகளை மத்திய அரசு உரியவாறாக கருதிப் பார்க்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய துறை மற்றும் மத்திய அரசால் பொறுப்பேற்கப்பட்ட திட்டங்களுக்கான அவர்களின் பங்கிற்குப் பதிலாக, 15-வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மானியங்களைப் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுநாள் வரை பின்பற்றப்பட்ட நடைமுறையிலிருந்து இது பெருமளவில் விலகுவதாக அமையும்”.

இவ்வாறு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்