தமிழகத்தின் கடன் சுமையை உயர்த்தியதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை: வைகோ விமர்சனம்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டால் எந்தப் பயனும் இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று (பிப். 23) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுக அரசின் இறுதி நிதிநிலை அறிக்கையை இடைக்கால நிதிநிலை அறிக்கை என்ற பெயரில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த 2016-17ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது தமிழகத்தின் கடன் அளவு ரூ.2.47 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது, 2021 இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் கடன் சுமையை உயர்த்தியதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் 'சாதனை' என்பதற்கு நிதிநிலை அறிக்கையே சான்றாக உள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41 ஆயிரத்து 417.30 கோடி என்றும், 2021-22இல் நிதிப் பற்றாக்குறை ரூ.84 ஆயிரத்து 202.39 கோடி என்றும், நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியாது என்றும் அறிவித்துவிட்டு, பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரித்து இருப்பதாகக் கூறுவது கானல் நீராகவே காட்சி தருகிறது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகரித்து மக்கள் மீது பெரும் சுமை ஏற்றப்படுகிறது. இதற்குத் தீர்வு காணவோ, பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரி, கலால் வரியைக் குறைக்கவோ எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயிலிருந்து மாநிலத்திற்கு உரிய பங்கு கிடைப்பது இல்லை என்று நிதி அமைச்சர் வருத்தப்படுகிறார். இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நியாயப்படுத்துகிறாரா?

'மத்திய அரசுடன் சுமுகமாக இருப்பதால் நாங்கள் கேட்பதை எல்லாம் பாஜக அரசு செய்கிறது' என்று கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வரிப் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது பற்றியும், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு செய்து வரும் துரோகம் பற்றியும் ஏன் வாய் திறக்கவில்லை?

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டபோதே இது தேர்தலுக்கான அறிவிப்பு என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது. தற்போது இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் வெறும் 5,000 கோடி ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அந்த அறிவிப்பின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

கரோனா கொடுந்துயரத்தால் வாழ்வாதாரங்களை இழந்த லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வேலையை இழந்த தொழிலாளர்களின் நலனைப் பற்றி அதிமுக அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

மூடப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வதற்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை.

கரோனா பெருந்தொற்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆளாகி துன்பத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில், கரோனா தடுப்பூசித் திட்டத்திற்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி அரசு கை கழுவி உள்ளது ஏற்கத்தக்கது அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்றி நிலைகுலைந்துபோய், மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேற்றப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி 90 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு இருப்பது உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீர்குலைக்கச் செய்யும்.

ஆட்சியின் அந்திமக் காலத்தில் உள்ள அதிமுக அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்