தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வாழ்க்கைக்கு உதவாத வா(பொ)ய்ப்பந்தல் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (பிப். 23) வெளியிட்ட அறிக்கை:
"வரும் மே மாதத்தில் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் அதிமுக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் சூழலில் அடுத்த நிதியாண்டு தொடங்குவதால், அடுத்த அரசு அமையும் வரையிலான காலத்தில் அரசின் செலவினங்களுக்குப் பேரவையின் ஒப்புதல் பெறுவதற்கான சட்டபூர்வ ஏற்பாடுதான் இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதை மறந்து நிதியமைச்சர், பேரவையில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை வரும் தேர்தலை மனதில் கொண்டு சட்டப்பேரவையைத் தேர்தல் பிரச்சார மேடையாக்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 கோடி புதிதாகக் கடன் வாங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஒரு புறம் கடன் சுமை, மறுபுறம் வருவாய்ப் பற்றாக்குறை என இந்தக் கடுமையான நிதி நெருக்கடியை எப்படிச் சமாளிக்கும் என்பதில் மௌனம் காட்டும் நிதிநிலை அறிக்கை 'பொருளாதார நிர்வாகத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்' என்று அறிவுரை கூறுவது அர்த்தமற்றது.
ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடியான ரூபாய் 12 ஆயிரத்து 110 கோடிக்கு நிதிநிலை அறிக்கை ரூபாய் 5,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அடுத்து வரும் அரசின் தலையில் ரூபாய் 7,000 கோடி கடனைச் சுமத்தியுள்ளது.
பெரும்பாலான துறைகளுக்கும் நிதி ஒதுக்கத்தை அதிகரித்திருப்பதும், ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் எனக் கூறியிருப்பதும், 'தாகத்தில் துடிக்கும் மனிதருக்கு கானல் நீரைக் காட்டி, தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள்' என்பதற்கு ஒப்பாகும்.
மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்குப் போதிய நிதி வழங்கவில்லை என்றும், நிதிக் குழுவில் நீடித்து வரும் அநீதி சரி செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டும் நிதிநிலை அறிக்கை, வரும் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கரம் கோத்து வரும் வெட்கமற்ற செயலை மக்கள் மறந்து விடுவார்கள் எனக் கருதுகிறது.
தமிழகத்தின் இயற்கை வள ஆதாரங்களையும், மனித வளத்தினையும் அந்திய முதலீட்டுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கும் வாரி வழங்கும் அரசின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கும் நிதிநிலை அறிக்கை விவசாயிகள், தொழிலாளர் நலன்களை பலியிட்டு வருவதுடன் வளர்ந்துள்ள வேலையின்மைக்கு தீர்வு காணவில்லை.
மத்திய அரசின் கொலைகாரத் தாக்குதலுக்கு ஆளாகி மடிந்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை பாதுகாக்கத் தவறிவிட்டது.
இடைக்கால நிதிநிலை அறிக்கை வாக்காளர்களைக் கவர்ந்திட பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ள வா(பொ)ய்ப்பந்தலாகும். வளமார்ந்த தமிழகத்தை உருவாக்கி, மக்கள் நல வாழ்க்கைக்கான பாதை அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.