புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு எதிர்க்கட்சிகளை குறை சொல்ல நாராயணசாமிக்கும், திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்தவித தகுதியும் இல்லை என, அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்எல்ஏ, உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 23) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரோத காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருந்த நாராயணசாமியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து, உண்மைக்குப் புறம்பான சில கருத்துக்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து, மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காக வழக்கமான பொய்யை கூறி வருகிறார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு இல்லாத காரணத்தால், வாக்கெடுப்பு நடக்கும் போதே, அதில் கலந்துகொள்ளாமல் சபையை விட்டு வெளியேறிய காங்கிரஸ்-திமுக உறுப்பினர்களின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நாராயணசாமி, துணைநிலை ஆளுநரிடம் நாங்கள் பதவி விலகுவதாக கடிதம் அளித்தார். சட்டப்பேரவையில் எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு சபையில் பேச பேச்சுரிமை வழங்கப்பட்டது. யாரும் குறுக்கிடவில்லை. அடுக்கடுக்கான பொய்யான தகவல்களை கூறினார். சபையைவிட்டு வெளியே வந்து சபாநாயகர் முறையான வாக்கெடுப்பை நடத்தவில்லை, சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டார் என்று கூறினார்.
சபாநாயகர் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் தானே? உங்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரிக்க யாரும் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது என்று சபாநாயகர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.
நாராயணசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவில்லை. எப்பொழுது ஆளும் அரசில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்களோ, கூட்டணி கட்சியான திமுக அரசைக் குறைகூறியதோ அப்போதே நாராயணசாமி வெளியேறியிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் பதவி விலகிய போதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற தைரியத்தோடு நாராயணசாமி இருந்தார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் 14 பேரும் சபையில் இருந்தோம். காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு சரியான பாடம். காங்கிரஸ்-திமுகவில் உழைப்பவர்களுக்கு எந்த தேர்தலிலும் முறையாக சீட்டு வழங்குவதில்லை. காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எதிர்க்கட்சிகளை குறைசொல்ல நாராயணசாமிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித தகுதியும் இல்லை.
உங்கள் கட்சியில் நீங்கள் சீட் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் ராஜினாமா செய்துவிட்டு சென்றனர். அதற்கு எதிர்க்கட்சியினர் என்ன செய்ய முடியும்? அதிமுகவுக்கு குறுக்குவழியில் ஆட்சி அமைக்க துளியும் விருப்பமில்லை. அப்படி இருந்திருந்தால் 3 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருப்போம். அதிமுக தலைமை அதற்கெல்லாம் உடன்படாது.
நாராயணசாமி நாம் என்ன செய்தோம், கடந்த 30 ஆண்டுகளில் அரசியலில் எத்தனை பேரை பழிவாங்கியிருப்போம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாராயணசாமி என்ன விதைத்தாரோ அதைத்தான் அறுவடை செய்துள்ளார். அவர் செய்த தவறுகள் தான் தற்போது அவரை திருப்பி அடித்துள்ளது. தொடர்ந்து துரோகத்தையே செய்தவர். அவர் தற்போது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்களின் செயல்படாத தன்மையால் புதுச்சேரியின் வளர்ச்சி 10 ஆண்டுகாலம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் எண்ணத்தை காங்கிரஸ் மற்றும் திமுகவில் இருந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா மூலம் நிருபித்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நாவடக்கம் தேவை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்களோ, அதை கூறி வாக்கு கேளுங்கள்.
எதிர்க்கட்சியினரை பற்றி குறைகூறி வாக்கு கேட்க வேண்டாம். 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முதல்வர் நாராயணசாமியும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களுக்கு ஆட்சியமைக்க உரிமை கோர விருப்பம் இல்லை. தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி மலரும் போது புதுச்சேரியிலும் அதிமுக ஆட்சி மலரும்".
இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago