மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:
“நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், ரோகிணி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன்பால் குர்ஜார், “நீதிபதி ரோகிணி ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட பணிகளை நிறைவு செய்வதற்கான பதவிக் காலம் ஜூலை 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் பரிந்துரை விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.