ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்ய 24 மணி நேர இலவச சேவை: மனித நேயத்துடன் உதவும் மதுரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் அடக்கம் செய்ய ஆளில்லாத ஆதரவற்றவர்களின் சடலங்களை இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்ய உதவி வருகிறார். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்து மனித நேயத்தை தலைநிமிரச் செய்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் தினமும் விபத்து, கொலை, சிகிச்சை பலன் அளிக் காமல் இறப்பு என சராசரியாக 15-க்கும் மேற்பட்டவர்களின் சடலங் களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் உறவி னர் இல்லாத ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்ய பண உதவி, பொருள் உதவிக்கு ஏற்பாடு செய்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன்.

இவர், கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதர வற்ற, ஏழைகளின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்து அடக்கம் செய்துள்ளார். விபத்து, கொலை நடக்கும் இடங்களில் சடலங்களை அப்புறப்படுத்தவும், உயிருக்குப் போராடுபவர்களை சற்றும் யோசிக்காமல் அவர்களை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று போலீஸாருக்கு உதவுகிறார். இவரது இந்த சேவையால், பலர் மரணத்தின் வாயிலுக்குச் சென்ற நிலையில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்ட தால் உயிர் தப்பி உள்ளனர்.

எந்த பிரதிபலனும் பாராமல் இவர் செய்யும் உதவி, மதுரை போலீஸார், அரசு மருத்துவர்கள், பணியாளர்களுக்கு பேருதவியாக உள்ளது. அதனால், நகரில் 22 காவல் நிலைய போலீஸாரும், புறநகரில் 13 காவல் நிலைய போலீஸாரும் எங்கு விபத்து, கொலை நடந்தாலும் 108- சேவைக்கு போன் செய்கிறார்களோ இல்லையோ, உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிகிருஷ்ணனுக்கு தகவல் சொல்கின்றனர். போலீஸார் அங்கு செல்வதற்குள் ஹரி அந்த இடத்தில் ஆம்புலன்ஸுடன் ஆஜ ராகி, அவர்களுடைய பாதி வேலையை முடித்துவிடுகிறார். இவரது சமூக சேவையைப் பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் சுதந்திர தினவிழா, குடியரசு தின விழாவில் விருதுகளை வழங்கி உள்ளார். ரோட்டரி சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் இவரை அழைத்து பாராட்டி விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “என்னோட சொந்த ஊர் திருச்சி சங்கிலியாண்டபுரம். அங்கு ஆரம் பத்தில் பேக்கரி கடை நடத்தி வந்தேன். மதுரையைச் சேர்ந்த தாய் மாமா மகள் ஜெயந்தியை (36) திருமணம் செய்தேன். 1998-ம் ஆண்டு பிரசவத்துக்கு மதுரை வந்த மனைவியை பார்க்கச் சென்ற இடத்தில் மாமா இறந்துவிட்டார். அதனால், மனைவி, குழந்தையுடன் மதுரையிலேயே இருந்துவிட்டேன்.

குடும்ப வருமானத்துக்கு மதுரை அரசு மருத்துவமனை பிணவறை வாசல் எதிரே டீக்கடையைத் தொடங் கினேன். கடை வருமானம் மூலம் கடனில்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை சென்றது. பிணவறை முன் இருப்பதால் எங்கள் கடை முன் தினமும் ஒரே கூட்டமும், அழுகையாகவும் இருக்கும். அப்போதெல்லாம் இப்போதுபோல அரசின் இலவச ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. தனியார் ஆம்பு லன்ஸ்காரர்கள் நிறைய பணம் கேட்பார்கள். ஒரு சடலத்தை அடக்கம் செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை செலவாகும்.

பலர் அடிக்கடி எங்களிடம் அடகுக் கடை எங்கிருக்கிறது எனக் கேட்பார்கள். எதற்கு எனக் கேட் டால், உடலை அடக்கம் செய்யவும், எடுத்துச் செல்லவும் பணமில்லை என்பார்கள். சிலர் அடகு வைக்கக் கூட எதுவும் இல்லாமல் நிற்பார்கள். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.

அப்போது நாமே ஆம்புலன்ஸ் வாங்கி இல்லாதவர்களுக்கு இலவசமாகவும், இருக்கிறவர்களிடம் நியாயமான வாடகை வாங்கினால் என்ன என நினைத்து பழைய ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கினேன். அன்று முதல் இன்று வரை, ஆதர வற்றவர் சடலங்களை அடக்கம் செய்யவும், ஏழைகள் சடலங்களை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லவும் இலவசமாக சேவை செய்கிறேன் என்றார்.

குடும்ப உறவுகள் ஒதுக்கிய சோகம்

ஹரிகிருஷ்ணன் மேலும் கூறுகையில், மது குடித்து விட்டு பஸ்நிலையம், கழிப்பறைகளில் எலிகள் கடித்த நிலையில், ஈக்கள் மொய்க்க இறந்து கிடப்பார்கள். விஷம் சாப்பிட்டு, தூக்கிட்டு பூட்டிய அறைகளில் அழுகிக் கிடக்கும் சடலங்களை தயக்கமின்றி எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வேன். அதனால் எனது உறவினர்கள், இவன் நம்ம குடும்பத்துக்கே இல்லாத தொழிலை செய்கிறான் என இழிவாகப் பேசி ஆரம்பத்தில் ஒதுக்கி வைத்தனர். எல்லோரும் என்னை பாராட்டுவதைக் கண்டு இப்போது பேசாதவர்கள் கூட பேசுகிறார்கள். ஒதுங்கிய சொந்தங்கள் நெருங்கி வருகின்றன.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் பிளஸ் 1 படிக்கிறார். 2-வது மகள் 6- ம் வகுப்பு படிக்கிறார். மனைவி டீக் கடையை பார்த்துக் கொள்கிறார். நான் ஆம்புலன்ஸ் வண்டிகளை பார்த்துக் கொள்கிறேன். இப்போது நான்கு ஆம்புலன்ஸ் வைத்துள்ளேன். குடும்ப வருமானத்துக்குக் குறைவில்லை. மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்