திமுகவினர் தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்றனர் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 22) சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் பேசியதாவது:
"ஸ்டாலின் 2019-ல் ஊர் ஊராகச் சென்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திண்ணையில் பெட்ஷீட்டை விரித்து பொதுமக்களை சந்தித்து அவர்கள் பிரச்சினைகள் குறித்து மனுவை வாங்கினார், அந்த மனுக்கள் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
2019-ல் அதிமுக ஆட்சி, நான் முதல்வர். திமுக மனு வாங்கி என்ன செய்யும்? மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். மக்களை ஏமாற்றுகின்ற கட்சி திமுக கட்சி, திமுக தலைவர் ஸ்டாலின்.
அதேபோல, பெட்டியை நேற்றையதினம் திருப்பூரில் வைத்தார். மக்கள் அதில் குறையை எழுதி போட்ட பிறகு, பெட்டியை சீல் வைத்து, வீட்டுக்கு எடுத்துச் சென்று 3 மாதங்களில் இவர் முதல்வராகி பிறகு பெட்டியைத் திறந்து 100 நாட்களில் உங்கள் குறைகளைத் தீர்ப்பாராம்.
அப்படியானால் இவ்வளவு நாட்களாக நாட்டு மக்களையே பார்க்கவில்லை. 5 முறை திமுக ஆட்சி, ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். இவ்வளவு நாட்கள் நாட்டு மக்களின் குறைகளைக் கேட்கவில்லை. இப்போதுதான் மக்களின் குறைகளை கேட்கத் தொடங்கியுள்ளார்.
நாங்கள் மனுக்களை வாங்குகிறோமென்று மக்களை ஏமாற்றி தில்லுமுல்லு செய்து ஆட்சியை கைப்பற்றத் துடிக்கிறார். ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. ஏனென்றால் உங்கள் நாடகம் வெளுத்துப் போய்விட்டது. நாட்டு மக்கள் உங்கள் உண்மை முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறைதான் மக்களை ஏமாற்ற முடியும். மக்கள் விழித்துக் கொண்டார்கள். ஆகவே, ஏமாற்றவே முடியாது. ஸ்டாலின் மனு வாங்குவதற்கும் வேலையில்லை.
நாங்கள் 2019-ம் ஆண்டு சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் நான் தெளிவாக அறிவித்தேன். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அறிவித்து தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து, மனுக்களைப் பெற்று அதற்கு தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அதில் 5.26 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, நிராகரிக்கப்பட்ட மனுக்கள் என்ன காரணத்திற்காக நிராகரிப்பட்டது என்ற செய்தியை மனுதாரருக்கு பதிலாக அளிக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
நான், 2020 செப்டம்பர் மாதம், சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் வீட்டிலிருந்தபடியே உங்கள் குறைகளைத் தெரிவிக்க முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்க்கும் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அற்புதமான அறிவிப்பைக் கொடுத்தோம். இதற்காக உதவி மையம் எண்.1100 கொடுத்து உங்கள் குறைகளை தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களை நாடி உங்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பார். மனு போடும் வேலையுமில்லை.
ஆகவே, ஸ்டாலின் மனுவை காட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார், அதுவும் முடியாது. இப்பொழுதுதான் எடப்பாடி பழனிசாமி புத்தி வந்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்றும் சொல்கிறார். இப்போது வரவில்லை, நீங்கள் ஊர் ஊராகச் சென்று, திண்ணையில் பெட்சீட் போட்டு மனு வாங்கியதற்கு முன்பாகவே நான் சட்டப்பேரவையில் செப்டம்பர் மாதமே அறிவித்துவிட்டேன். அதை நடைமுறைப்படுத்த சிறிது காலதாமதம் ஆயிற்று. ஏனென்றால், சிலவற்றை சரி செய்ய வேண்டும்.
5 நாட்களுக்கு முன்பு நான் தலைமைச் செயலகத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டேன். இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 1100 வழியாக தங்கள் குறைகளைஅரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த விஞ்ஞான உலகத்தில், உங்கள் அலைபேசி வாயிலாக 1100 எண்ணை தொடர்பு கொண்டு எந்தப் புகாரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதிவு செய்யும்போது, அது அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்து தீர்த்து வைக்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தகம், பை, நோட்டு, சீருடை, சைக்கிள், மடிக்கணினி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில்கூட விலையில்லா மடிக்கணினி கொடுப்பதில்லை. ஒரு மடிக்கணினி 12 ஆயிரம் ரூபாய். இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கொடுத்திருக்கிறோம். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்தீர்களா?
2011-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 32 விழுக்காடாக இருந்தது, ஜெயலலிதா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சி ஏற்படுத்தியதன் காரணமாக தற்போது 49 விழுக்காடு உயர் கல்வி கற்று இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிய கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பெற்றிருக்கிறோம், இந்திய வரலாற்றில் எந்த மாநிலத்திலும் கிடையாது.
கடந்த இரண்டு வருடங்களில் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளோம். புதிய தாலுகாக்கள் உருவாக்கியுள்ளோம். தலைவாசல் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று புதிய தாலுகா உருவாக்கியுள்ளோம். தலைவாசல் கூட்டு ரோட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா, நானே அடிக்கல் நாட்டினேன், இன்றைய தினம் நானே திறந்து வைக்க உள்ளேன்.
ஸ்டாலின் நேற்றையதினம் திருப்பூரில் பேசும்போது, பழனிசாமி கடைசி நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு திட்டங்களை அறிவிக்கிறார், அவர் போட்ட திட்டங்கள் எதையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்கிறார். நானே தலைவாசலில் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தேன், அந்தக் கால்நடைப் பூங்காவுக்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினேன், இப்போது நானே நேரடியாக வந்த அந்த கால்நடைப் பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறேன்.
எங்கள் அரசாங்கம் சொல்வதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு கால்நடைப் பூங்கா என்பது சாதரண விஷயம் அல்ல, மிகப்பெரிய பூங்கா, இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா. சுமார் 1,000 கோடியில் 1,600 ஏக்கரில் இந்த கால்நடைப்பூங்கா அமையப்பெறும் போது, சேலம் மாவட்டம் மட்டுமல்ல, அருகில் உள்ள கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பயன்பெறும். விவசாயிகளுக்கு அந்த கால்நடைப்பூங்காவிலே பயிற்சி அளிப்போம். ஆக விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். உங்கள் ஆட்சியில் இது போன்ற திட்டம் ஏதும் கொண்டுவந்தீர்களா?
2011 முதல் 2021 வரை ஜெயலலிதா அரசு 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி அமைக்கும்போது 2011-ம் ஆண்டில் மருத்துவம் பயில வெறும் 1,945 இடங்கள் தான் இருந்தன. ஆனால், அவர் எடுத்த முயற்சியினால் அது 3,060 ஆக உயர்த்தப்பட்டது. ஜெயலலிதா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் 5,300 பேர் மருத்துவம் படிக்கின்ற சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறது எங்கள் அரசு. 2006-2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தமிழ்நாடு முழுதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்தபோது, நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமென்று கூறினார். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்த காரணத்தினாலே தொழில்கள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்குச் சென்றன, வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டன. விவசாயிகளின் பம்புசெட் எல்லாம் இயங்க முடியவில்லை. விவசாயிகள், விவசாய தொழிலாளிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இந்த பாதிப்புகளை எல்லாம் சரி செய்து மூன்றே ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்கினார்.
அதே வழியில் வந்த அதிமுக அரசு திறமையான நிர்வாகத்தின் மூலமாக, உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து, தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் புதிய புதிய தொழில்கள் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஸ்டாலின் குறிப்பிடுகின்றார், 'எடப்பாடி பழனிசாமி மந்திரவாதியா என்று', நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல. செயல்வாதி. சொல்லுகின்றதை செய்கின்ற செயல்வாதியாக இருக்கின்றேன்.
2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி லட்சக்கணக்கான தொழில் முதலீட்டை ஈர்த்தார். அவர் வழியில் வந்த அதிமுக அரசும் 2019-ம் ஆண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். அதன் மூலம் ரூ.3 லட்சத்து 5,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி 304 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று கூறுகிறார், எங்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.
சொன்ன உடனே தொழிற்சாலை வந்துவிடாது, தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம் வாங்க வேண்டும், நிதியினை வங்கி மூலம் பெற வேண்டும். நிறைய அனுமதிகள் பெற வேண்டும் இதையெல்லாம் பெற்ற பிறகுதான் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.
திமுக என்றாலே அது ஒரு அராஜக கட்சி, ரவுடி கட்சி. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருகின்றது, நான் உங்களில் ஒருவனாக இருக்கின்றேன், சட்டத்தின் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிமுகவில் தான் பெண்களைக்கொண்ட பூத் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும், எந்த கட்சியிலும் கிடையாது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கட்சி அதிமுக.
ஸ்டாலின், மூன்று மாதம் கழித்து முதல்வராகி விடுவாராம், முதல் கையெழுத்து போடுகிறாராம். தேர்தலே அறிவிக்கவில்லை, வேட்பாளர்கள் களம் காணவில்லை, வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை அதற்குள் எப்படி இவர் முதல்வர் ஆவார்? எப்படி வேகமாக இருக்கிறார் பாருங்கள். இது வேகம் அல்ல, 10 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் கோரப் பசியில் இருக்கின்றார்.
திமுகவினர் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றார்கள். அவர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடிக்க வேண்டும்".
இவ்வாறு முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago