ஜெயலலிதா பிறந்த நாள்; அதிமுகவைக் காக்க தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா பிறந்த நாளன்று, அதிமுகவினர் தங்கள் வீடுகளில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டுமென, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாகத் தொண்டர்களுக்கு இன்று (பிப்.22) எழுதிய கடிதம்:

"எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வழிகாட்டுதலின்படி, அந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு வகுத்துக் கொடுத்த பாதையில் இன்றுவரை அதிமுக அடிபிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உள்ள மக்கள் இயக்கங்களில் நம் எழுச்சிமிக்க அதிமுக மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பேர்பட்ட இயக்கத்தைத் தாய்போல் சீராட்டி, பல இன்னல்கள் வந்தபோதும் காவல் தெய்வமாகக் காப்பாற்றி, ஈடு இணையில்லாத வீரியமும், உயிரோட்டமும் உள்ள ஓர் இயக்கமாக நம் கைகளில் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும், அவரின் புனித ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அவரின் ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலிருந்துதான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்குத் தெரியும்.

நம் விசுவாசமானது ஜெயலலிதாவுக்கும், அவரது கண்ணுக்குக் கண்ணாய் இருந்த இந்த இயக்கத்திற்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கும் மக்களுக்கும்தான் சொந்தம்! விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாதது ஜெயலலிதாவிடம் நாம் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் கொண்ட இந்த விசுவாசம் என்பதை நாம் அறிவோம்.

இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையைச் சந்திக்க உள்ளோம். இதில், நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோத்துக் கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசைமாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.

ஜெயலலிதா: கோப்புப்படம்

இந்தக் குறிக்கோளோடு அதிமுகவினர் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 - மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் ஜெயலலிதாவின் பிறந்த நாள்! இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் 'என் இல்லம் அம்மாவின் இல்லம்' என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உறுதிமொழி:

'உயிர் மூச்சுள்ளவரை ஜெயலலிதாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன்! இது ஜெயலலிதா மீது ஆணை!'

ஜெயலலிதாவின் பிள்ளைகளாகிய நாம் மக்களுக்காக என்றும் ஓடி ஓடி உழைப்போம்! இன்னும் இன்னும் பல நன்மைகளை ஊருக்கெல்லாம் கொடுப்போம்! வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி! வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம்! இது உறுதி! உறுதி! உறுதி!

அன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே".

இவ்வாறு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்