புதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட நாராயணசாமி மக்களிடம் செல்லட்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை:
"யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசின் நிர்வாகம் மத்திய அரசின் பிடியில் உள்ளது. மக்கள் தேர்தலில் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சட்டப்பேரவையையும், அமைச்சரவையையும் உருவாக்கினாலும் கூட, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேச ஆட்சி, உள்துறை அமைச்சகத்தின் மற்றும் மத்தியில் உள்ள ஆட்சியின்கீழ் இயங்க வேண்டிய நிலையே நீடிப்பது ஒரு அரசியல் முரண்நகை. பல கட்சிகள், பலமுறை போராடியும் புதுச்சேரி மாநிலத்திற்குத் தனி மாநிலத் தகுதி இல்லாதது முதலாவதான அரசியல் குறைபாடு ஆகும்!
மத்திய பாஜக அரசின் தொடர் தொல்லைகள்!
இதன் விளைவை புதுச்சேரி மாநில மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த ஓர் அரசு, சுதந்திரமாக இயங்க முடியாத தொடர் முட்டுக்கட்டை, இந்த நான்கரை ஆண்டுகளிலும் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மூலம் மத்திய பாஜக அரசு நாளொரு வண்ணமும் நடத்திக் காட்டி, எல்லையற்ற தொல்லைகளைக் கொடுத்தது!
மக்கள் நலத் திட்டங்களை மாநில அமைச்சரவை நினைத்தாலும், திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாத தடைகளும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டு, அவற்றை அகற்றுவதிலும், எதிர்கொள்வதற்குமே நாராயணசாமி தலைமையில் இருந்த அமைச்சரவைக்கு நேரம் சரியாக இருந்த ஒரு 'கெட்ட வாய்ப்பான' அரசியல் நடைபெற்றது அங்கு.
வெளிச்சத்திற்கு வந்த வித்தைகளும், வியூகங்களும்!
பொதுத் தேர்தலுக்குமுன் புதுவையில் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டுமென்று மத்திய பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சி திட்டமிட்டுச் செயலாற்றிய வித்தைகளும், வியூகங்களும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டன!
1. மூன்று நியமன எம்எல்ஏக்களை ஆளும் அமைச்சரவை பரிந்துரைப்பதற்கு மாறாக, மத்தியில் உள்ள ஆட்சி மூலமே அவர்களை பாஜக ஆதரவாளர்களாக நியமனம் செய்தது முதல் காட்சியாகும்!
2. மத்தியப் பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, குதிரை பேரம் நடத்தி, ஆட்சியைப் பிடித்த அதே முறையை புதுச்சேரியில் நடத்திக் காட்டிட, சாம, பேத, தான, தண்டம் முறைகளை அரசியல் அச்சுறுத்தல்களாகவும், நாக்கில் தேன் தடவியும், கையில் 'பசை' தடவியும் இதுவரை ஆளுங்கூட்டணியிலிருந்து 5 பேரை பதவி விலகச் சொல்லி, நாராயணசாமி அமைச்சரவையை ஆட்டம் காணச் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற அரசியல் 'அஸ்திரத்தை' வீசினர்!
புதுச்சேரியில் காவி ஆட்சியை எப்படியும் நிறுவிடவோ அல்லது அதன் கொத்தடிமைகளைக் கொண்டு அரசியல் கச்சேரி நடத்திடவோ திட்டமிட்டு, இன்று பலத்தை நிரூபிக்க கெடு கொடுத்தார், புதிய பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
இதில் மிகவும் வெட்கமும், வேதனையும்பட வேண்டியது திமுகவுக்கும் ஒரு களங்கம் ஏற்படும் வண்ணம், கட்டுப்பாடு காக்காமல் பதவி விலகியுள்ளார் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்!
இதுதான் ஜனநாயகப் படுகொலை!
முந்தைய பிரெஞ்சு இந்தியாவின் பகுதியிலிருந்த புதுச்சேரி மாநிலத்தில் இப்படி திடீர் திடீர் ராஜினாமாக்களின் அரங்கேற்றம் எப்படிப்பட்ட திட்டமிட்ட நாடகம் என்பதற்கு மூலகாரணம்பற்றி ஒரு வார ஏடு வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின், அதைவிட ஜனநாயகப் படுகொலை வேறு இருக்கவே முடியாது! மேலும் 3 மாதங்களில் எதுவும் செய்யாத அரசாக இருப்பதைவிட, எதிர்க்கட்சியாகவே இருப்பது மேலானது!
வீதிக்கு வந்து நீதிகேட்பதுதான் ஒரே வழி!
எப்படியாயினும் நாராயணசாமி தலைமையில் உள்ள அமைச்சரவை பதவி விலகி மக்களிடம் நீதி கேட்டு, மக்களைச் சந்திப்பதும், ஒருங்கிணைந்த மதச்சார்பற்ற, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளோடு புதுச்சேரியில் மக்கள் பிரச்சினைகளில், இந்த 2, 3 மாதங்களில் தொடர் பிரச்சாரம் செய்வதும், இந்தப் பதவி வெறி பச்சோந்திகளின் முகமூடிகளைக் கிழித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கட்சி மாறிகளைத் தோற்கடிப்பதன் மூலம் நல்ல பாடம் கற்பித்து, புதிய வலுவுள்ள ஜனநாயகத்தை அனைத்து முற்போக்குச் சக்திகளின் துணையோடு, தன்முனைப்புக்கு சிறிதும் இடம்தராது, தொடர்ந்து அரசியலைத் தூய்மைப்படுத்தி, ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூக நீதியையும் சமதர்மத்தையும் காப்பாற்ற தன் சகாக்களுடன் கடுமையாகப் போராடி வீதிக்கு வந்து நீதி கேட்பதுதான் ஒரே வழி!
மக்களை நம்புங்கள், பச்சோந்தி அரசியலை புதுச்சேரியில் குழிதோண்டிப் புதைக்க பொதுவானவர்கள் துணை நிற்கட்டும்!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago