காவேரி – குண்டாறு இணைப்பு; 100 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

By செய்திப்பிரிவு

காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உப வடி நிலத்தில் உள்ள நீர்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை:

இந்த காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் நடைபெறுவதற்கு நிலம் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அரசின் சார்பாக மனமார்ந்த, உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டம் நிறைவேற வேண்டும் என்று சொன்னால், அதற்கு அடித்தளமாக விளங்குவது நிலம் தான். அந்த நிலத்தை மனமுவந்து கொடுத்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுகின்ற அற்புதமான திட்டத்திற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

ஜெயலிதா இந்த திட்டத்தை நிறைவேற்றட வேண்டும் என்று எண்ணினார்கள். அவருடைய காலத்திலே நிறைவேற்ற முடியாமல் போனாலும், அம்மா அவர்களின் வழியில் நடைபெறுகின்ற அம்மாவின் அரசு, என்னென்ன திட்டங்களை அம்மா அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினார்களோ, கனவு கண்டார்களோ, அந்த திட்டங்களை எல்லாம் எங்களுடைய அரசு இன்றைக்கு வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். வரலாறு படைத்து கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு என் வாழ்நாளில் ஒரு பொன்னான நாள் ஆகும். நான் எத்தனையோ அரசு விழாவிற்கு சென்று இருக்கின்றேன். ஆனால் இன்றைய தினம் இந்த அற்புதமான விழாவிலே கலந்து கொள்வதிலே என் வாழ்நாளில் நான் பிறந்த பயனை அடைந்திருகிறேன் என்று எண்ணுகின்ற அளவிற்கு என் மனம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. ஒவ்வொருவருக்கும் வாழ்நாளிலே ஒரு மகிழ்ச்சியான நாள் இருக்கும். அந்த மகிழ்ச்சியான நாள் இந்த பொன்னாள் இந்நாள் என்று மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவன். மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும் விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவர். உங்களுடைய அமைச்சரும் விவசாய குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவர். அதேபோல, இந்த திட்டத்தினால் பயன்பெறுகின்ற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆகவே, விவசாய குடும்பத்திலே பிறந்த நாங்கள், முதலமைச்சராக, துணை முதலமைச்சராக, அமைச்சர்களாக

இருக்கின்றோம். அதனால் விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற போது உண்மையிலே மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இது வரலாற்று சிறப்புமிக்க நன்னாள்.

தமிழகத்தில் இருக்கின்ற துறைகளில் மக்கள் அதிக அளவு பயன்பெறுகின்ற துறை என்று சொன்னால் அது பொதுப்பணித் துறை தான். ஏன் என்று சொன்னால், நீர் மேலாண்மை. நீர் மிக மிக முக்கியம். நீரில்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது. அந்த நீரை பக்குவமாக சேமித்து, உரிய முறையிலே வழங்குவது பொதுப்பணித் துறையாகும். அந்த துறை முதன்மை துறையாக விளங்கி கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட துறையின் மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகின்றோம். ஒரே காலக்கட்டத்தில் 14,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை தமிழகத்தில் 14,400 கோடி ரூபாயில் பொதுப்பணித் துறை திட்டத்தை யாரும் நிறைவேற்றிய நிலை இல்லை. இப்போது தான் முதல்முறையாக நிறைவேற்றுகின்றோம். இவ்வளவு பெரிய திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள்.

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேறுமா, நிறைவேறாத என்று பலபேர் சந்தேகத்தில் இருந்தார்கள். ஏன் என்றால் 100 ஆண்டு காலமாக இந்த திட்டத்தை மாவட்ட மக்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். 100 ஆண்டு கால கனவு திட்டத்தை இன்றையதினம் மாண்புமிகு அம்மாவின் அரசு நிறைவேற்றி இருக்கிறது. நம்முடைய நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது விவசாயம். சுமார் 65 சதவிகித மக்கள் வேளாண்மையை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் வேளாண்மை தான் பிரதான தொழில். விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அதிகமாக பயன்பெறுவது இந்த வேளாண் தொழிலில் தான். தமிழகத்தில் 65 சதவிகிதம் உள்ள வேளாண் பெருமக்களுக்கு தேவைப்படுவது நீர். நீர் இருந்தால் தான் இந்த 65 சதவிகித மக்களும் பயன்பெறுவார்கள். அப்படிப்பட்ட நீரை மாண்புமிகு அம்மாவுடைய அரசு சேமித்து, சிறப்பாக கையாண்டு இந்திய அளவில் 2019-20ல் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்று தேசிய விருதை நாம் பெற்றிருக்கின்றோம். ஒரு சொட்டுநீர் கூட வீணாகாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தான் நம்முடைய அரசின் நோக்கம். என்னுடைய அரசின் இலட்சியம். அதை நிறைவேற்றுவதற்காக நம்முடைய பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் தலைமை பொறியாளர் முதல் அனைத்து பொறியாளர்களும் சிறப்பான முறையில் செயல்பட்டார்கள். அதனால் தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற நிலையை நாம் அடைந்திருக்கின்றோம்.

நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம். நாம் அண்டை மாநிலங்களை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை. அண்டை மாநிலங்களில் அணைகள் நிரம்பிய பிறகு தான் நமக்கு தண்ணீரே திறந்து விடுவார்கள்.

கர்நாடகத்திலிருக்கும் அணைகளெல்லாம் நிரம்பினால் தான் மேட்டூர் அணைக்கே தண்ணீர் வரும். ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான், எங்களுடைய அரசு நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி நீரை முறையாக சேமித்து வைத்து, சேமித்து வைத்த நீரை முறையாக வேளாண் பெருமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதனை எங்களுடைய அரசு இன்றைக்கு வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து தூர்வாரப்படவில்லை. அந்த மேட்டூர் அணையை தூர்வாரியதும் அம்மாவின் அரசுதான். அதேபோல, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக குடிமராமத்துத் திட்டம் என்ற அற்புதமான திட்டத்தின் மூலம், பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரப்பட்டு வருகிறது. குடிமராமத்துத் திட்டத்திற்கு எங்களுடைய அரசு 1,417 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 6,211 ஏரிகள் பொதுப்பணித் துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல, உள்ளாட்சித் துறை மூலமும் சிறிய ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை தூர்வாரப்பட்டு, அதன் மூலமாக அங்கே பெய்கின்ற மழைநீரை அங்கேயே சேமித்து வைத்து நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, நதிகள் மற்றும் ஓடைகள் குறுக்கே தடுப்பணை கட்டி பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்படுகிறது. பல்வேறு தடுப்பணைகளை நாங்கள் கட்டிக் கொண்டிருக்கின்றோம்.

காவேரியை ஒட்டி பெரிய, பெரிய நகரங்கள் இருக்கின்றன. அந்த நகரத்திலிருந்து வெளியேறுகிற அசுத்த நீர் காவேரியில் கலக்கின்றது. அதை தடுத்து நிறுத்தி அங்கே சுத்திகரித்து நதியில் விடவேண்டும். அதற்காக """"நடந்தாய் வாழி காவேரி"" என்ற அற்புதமான திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். பாரதப் பிரதமர் அதனை குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறச் செய்திருக்கின்றார். அதற்கு மத்திய அரசிற்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் குறிப்பிடுகிறார், நீங்கள் வைத்த எந்தக் கோரிக்கையாவது மத்தியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கிறார்? மத்தியிலிருந்து என்ன திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு இது ஒன்றே சாட்சி. நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றிருக்கின்றது. நடந்தாய் வாழி காவேரி என்ற அற்புதமான திட்டத்தை எங்களுடைய அரசு செயல்படுத்துகின்றபோது இந்த நதி சுத்தம் செய்யப்படுகிறது. தூய்மையான நீர் கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்குக் கிடைக்கும். ஆகவே, இந்தத் திட்டத்தையும் நாங்கள் தான் நிறைவேற்றித் தருவோம்.

அதற்கும் மேலாக, கோதாவரி-காவேரி திட்டத்தையும் மாண்புமிகு அம்மாவின் அரசு தான் நிறைவேற்றித் தரும். அதேபோல, காவேரி ஆற்றின் குறுக்கே நாங்கள் தடுப்பணை கட்டிக் கொண்டிருக்கின்றோம். நஞ்சை-புகளூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் அங்கேயும் ஒரு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய அரசு நீர் மேலாண்மையில் எந்தளவுக்கு அக்கறை கொண்டு நீரை சேமித்து வைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறேன்.

எங்களுடைய அரசு துரிதமாக மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எந்தத் திட்டமும் அண்ணா திமுக அரசில் நடைபெறவில்லையென்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இந்தத் திட்டங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இவையெல்லாம் சாட்சிகள். யாரும் இதனை மறைக்க முடியாது.

அதேபோல, முக்கொம்பில் புதிய கதவணை கட்டிக் கொண்டு இருக்கிறோம். ஏற்கனவே அங்கே இருந்த கதணை பழுதடைந்த காரணத்தால் ரூபாய் 387 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, விரைவாக அந்தப் பணி முடிக்கப்பட்டு, மீண்டும் அம்மாவின் அரசு அமைந்து, நாங்களே துவக்கி வைப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, ரூபாய் 2,639 கோடி மதிப்பீட்டில் கல்லணை கால்வாய்த் திட்டத்திற்கு பாரதப் பிரதமர் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இப்படி பல திட்டங்களை நிறைவேற்றி, இப்போது தமிழகத்திலேயே மிகச் சிறந்த அரசு அம்மாவின் அரசு என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியின் வாயிலாக நாங்கள் வெற்றிகரமாக காட்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்தப் பணியை கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுத்தக் கூடியவர்.

எள் என்றால் எண்ணெய்யாக இருக்கக் கூடியவர். நான் இந்தத் திட்டத்தை எந்த இடத்தில் துவக்கி வைத்தால் சரியாக இருக்கும் என்று எண்ணியபோது அருமை சகோதரர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தேன். அதற்கு காரணம் இந்தப் பணியை அவரிடத்தில் கொடுத்தால் சிறப்பாக அந்தத் திட்டம் நடைபெறும். இந்தத் திட்டத்தைப் பற்றி 6 நாட்களுக்கு முன்புதான் தெரிவித்தேன். இந்தத் வரலாற்று சிறப்புமிக்க காவேரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை உங்களுடைய மாவட்டத்தில் நாங்கள் ஆரம்பிக்க வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தருவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், என் வாழ்நாளில் இதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன், ஒரு அரிய வாய்ப்பை நீங்கள் எனக்கு

தந்திருக்கிறீர்கள் என்று சொல்லி ஒரே வாரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதா ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் பல்வேறு வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்த மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்று நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றோம். இந்த மாவட்டத்தில், மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அம்மா இருக்கின்ற காலத்திலே அரசு மருத்துவக் கல்லூரி வழங்கி, அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு நானே நேரடியாக வந்து திறந்து வைத்தேன். மேலும் பல் மருத்துவக் கல்லூரி வேண்டுமென்று கோரிக்கை வைத்தீர்கள். அதையும் நிறைவேற்றித் தந்திருக்கின்றோம். அதேபோல அம்மா இருக்கின்றபோதே, இந்த மாவட்ட மக்களுடைய கோரிக்கையை ஏற்று, வேளாண் பெருமக்கள் நிறைந்த இந்தப் பகுதியில், வேளாண்மை கல்லூரி வேண்டுமென்று கேட்டீர்கள், அதையும் நிறைவேற்றித் தந்திருக்கின்றோம். ஐ.டி.ஐ கல்லூரியை விரைவாக திறக்கவிருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டையில் துணை முதலமைச்சர் முயற்சியால் உங்களுடைய அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பிரம்மாண்டமாக 2,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன, விரைவில் திறக்கவிருக்கின்றோம். அதுபோல, புதுக்கோட்டை-இலுப்பூர் புறவழிச்சாலை அமைக்கின்ற பணியும் நடைபெறுகிறது. விராலிமலையில் புதிய தாலுகா அலுவலகம் கொண்டு வந்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு தான். அதேபோல, இலுப்பூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் கொண்டு வந்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு தான். அதோடு, இந்த மாவட்டத்தின் மண்ணின் மைந்தர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 74 அம்மா மினி கிளினிக்குகளை திறந்து தமிழகத்திலேயே அதிகமான மினி கிளினிக்குகள் திறக்கப்பட்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் என்ற சாதனையை படைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் நிறைந்த பகுதிகளில் 2,000 அம்மா மினி கிளினிக் தொடங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம்.

விராலிமலையில் ஜல்லிக்கட்டு விழாவை நானே நேரடியாக வந்து தொடங்கி வைத்தேன். உங்கள் மண்ணின் மைந்தர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஜல்லிக்கட்டில் பெயர் பெற்றவர். கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அவருடைய காளை வென்று பரிசு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அமைச்சர் உங்களுடைய அமைச்சர். அதன் நினைவாக இங்கே அற்புதமான காளை வடிவிலான சிலை அமைக்கப்பட்டு அதை நானே நேரில் வந்து திறந்து வைத்தேன்.

இந்தப் பகுதியில் தொழிற்சாலைகளை நிறுவி இந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் அன்பு சகோதரர் விஜயபாஸ்கர் அவர்கள் எண்ணி, தனியார் ஐடிசி பிஸ்கட் தொழிற்சாலை கொண்டு வந்து, அங்கு

ஏறத்தாழ 2,400 பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார். ஒரு நாடு செழிக்க வேண்டும், வளர வேண்டும், பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டுமென்று சொன்னால் தொழில்வளம் பெருக வேண்டும், வேளாண்மை சிறக்க வேண்டும். அந்த இரண்டும் பெருகியிருக்கும் மாவட்டம் உங்களுடைய புதுக்கோட்டை மாவட்டம், அதற்கு அச்சாணியாக இருப்பவர் உங்களுடைய மாவட்ட அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள்.

இந்தியாவிலேயே 11 அரசு மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் பெற்ற மாநிலம் தமிழ்நாடு, அதற்கு அடித்தளமாக விளங்கியவர் மட்டுமல்ல, எந்த வேலையாக இருந்தாலும் அதைத் திறம்பட செயல்படுத்தக் கூடியவர் சகோதரர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள்.

ஜெயலலிதா அரசு வேளாண் பெருமக்களுக்கு அனைத்து வழிகளிலும் நன்மை செய்து வேளாண் பெருமக்களைக் காக்கின்ற அரசு. வறட்சி, புயல், கனமழை என பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்த அரசு அம்மாவின் அரசுதான். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் செய்தது கிடையாது. 2016 தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா, நான் முதலமைச்சரானவுடன் விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்வேன் என்று அறிவிப்பு கொடுத்தார்கள், ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்தார்கள். அதே வழியில் வந்த அம்மாவின் அரசு வேளாண் பெருமக்களின் துயரங்களை, வேதனைகளை துடைக்கின்ற அரசாக இருந்து விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனை ரத்து செய்திருக்கிறது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனை ரத்து செய்தது அம்மாவின் அரசு.

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து, வெகு நாட்களாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை என்னிடம் நேரில் அழைத்து வந்து, இதற்கு நீங்கள் நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று உங்கள் மாவட்ட அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுள் தெரிவித்தார்கள்.

அவரும், விவசாய பெருங்குடி மக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் உதவியோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசு அம்மாவின் அரசு. இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் திரு.ஸ்டாலின் தான் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதை ரத்து செய்தது அம்மாவின் அரசு.

தமிழ்நாடு முழுவதும் சென்று அம்மாவின் அரசை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டு, ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். எங்கள் ஆட்சி காலத்தில் செய்த திட்டங்களை

நான் உங்களுக்கு கூறுகிறேன். ஆனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்களை எங்காவது திரு.ஸ்டாலின் குறிப்பிடுகிறாரா? அதிமுக அரசைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை எல்லாம் செயல்படுத்தியுள்ளோம், செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை தொடங்கியதற்குகூட அவர் அவதூறு பேசி வருகிறார்.

மக்களின் 100 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி-குண்டாறு திட்டத்தை எங்கள் அரசு நிறைவேற்றி கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளது. இதற்கு அச்சாணியாக விளங்கியவர் நம்முடைய முன்னாள் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்கள். உலக வங்கியோ அல்லது வேறு பிற வங்கிகளோ நிதி உதவி அளிக்காவிட்டாலும், முழுக்க, முழுக்க மாநில நிதியிலிருந்து இத்திட்டத்தை நிறைவேற்றலாமென்று மரியாதைக்குரிய முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் தெரிவித்தார்.

அதேபோல பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் அவர்களும், தலைமை பொறியாளர் அவர்களும், இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். உங்களுடைய கனவு திட்டமான இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று தெரிவித்து, இத்திட்டம் நிறைவேற உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்