கனமழையால் தத்தளிக்கும் புதுச்சேரி; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததோடு, சாலைகளும் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிவர், புரெவி புயலால் புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமாகின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

புயல் மழை ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் வழக்கத்துக்கு மாறாக புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதத்தில் கனமழை பெய்தது. இதனால் பொங்கல் பண்டிகையின்போதும் மழை காணப்பட்டது. சிறிது நாட்கள் நீடித்த இந்த மழை பிறகு ஓய்ந்தது.

இதை தொடர்ந்து மெல்ல மெல்ல வெயில் அடிக்க தொடங்கிய நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து இருந்தது.

இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெயிலில் வெளியே செல்ல தயக்கம் காட்டினர். அதே நேரத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசான, அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று காலை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென பெய்ய தொடங்கிய கனமழை இன்று (பிப். 21) காலை 10 மணியைத் தாண்டியும் கொட்டியது. இதனால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஓடியது.

குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், ஈசிஆர் சாலை சிவாஜி சிலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்து ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

கனமழையால் ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், சாரம், காமராஜர் நகர் போன்ற இடங்களில் மழைநீர் சூழ்ந்து தனித்தீவு போன்று காணப்பட்டது. பாவாணர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைவெள்ளத்தால் மக்கள் நடந்து செல்லவும் முடியாமல் தவித்தனர்.

அதுபோல் பூமியான்பேட்டை, லாஸ்பேட்டை, பாக்கமுடையான்பட்டு உள்ளிட்ட புதுச்சேரியின் நகர் பகுதி முழுவதும் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

ஆங்காங்கே வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் சாலைகள் மூழ்கின. பல இடங்களில் பள்ளமும் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவையும் மூழ்கின.

பெரிய வாய்க்கால், உப்பாறு கால்வாய், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காமராஜர் சாலை, வள்ளலார் சாலை போன்ற சாலைகளில் கயிறு கட்டி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பல இடங்களில் தேங்கிய மழைநீரை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடபட்டுள்ளனர்.

அதுபோல் கிராமப்புறங்களில் பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்கள், வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பாகூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகளும் வெள்ளத்தில் மூழ்கின.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. எவரும் எதிர்பாராத நிலையில் விடிய விடிய பெய்த இந்த கனமழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. சண்டே மார்க்கெட் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

காலை 8.30 மணி நிலவரப்படி 19.2 சென்டிமீட்டர் மழை புதுச்சேரியில் பதிவாகியிருந்தது. பொதுவாக பிப்ரவரி மாதத்தில் பகலில் வெயிலும், இரவில் குளிரான சூழலும் நிலவுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு வரலாறு காணாத வகையில் சுமார் 7 மணி நேரத்தில் 19.2 செ.மீ. மழை பதிவாகி புதுச்சேரியே மழைநீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மழை வெள்ளம் சூழ்ந்துள்ள ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் நாராணசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்