புலிகள் சரணாலயமாகும் மேகமலை: தேயிலை சாகுபடியை தொடருவதில் சிக்கல்

By என்.கணேஷ்ராஜ்

மேகமலை வனப்பகுதி புலிகள் சரணா லயமாக அறிவிக்கப்பட்டுள் ளதால் கட்டுப்பாடுகள் அதிகரித்து இழந்த மழைவளத்தை மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு தேயிலை சாகுபடியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்லுயிர் வளம் மிக்க உலகின் எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சிமலையும் ஒன்று. கன்னியாகுமரியில் இருந்து கேரளா, கர்நாடம், வழியாக குஜராத் வரை இந்த மலை 1600 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் வெள்ளிமலை, வருசநாடு, மேகமலை ஆகிய இடங்களில் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இதில் மேகமலை வன உயிரின சரணாலயம் 626 சதுர கி.மீ. பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதிகளாக அமைந்துள்ளது. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

மேகமலையில் 8 புலிகள் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 14 புலிகளாக உயர்ந்திருப்பது தெரிய வந்தது. எனவே மேகமலை சரணாலயத்தையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும் ஒருங்கிணைத்து புலிகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த தேசிய புலிகள் காப்பக ஆணையம் தற்போது இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி மேகலை-வில்லிபுத்தூர் வனப் பகுதி நாட்டின் 51-வது புலிகள் காப்பகமாக மாறி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மலைகள் மனிதர்கள் நடமாட்டம், சுற்றுலாப் பயணிகளின் வருகை, வேட்டையாடப்படும் விலங்குகள், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு, வெட்டப்படும் மரங்கள் போன்றவற்றினால் மழைப்பொழிவு வெகுவாக குறைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டிருந்த மூலவைகை தற்போது சில மாதங்கள் மட்டுமே நீரோட்டம் இருக்கும் நிலைக்கு மாறி விட்டது. மேலும் ஏராளமான ஆக்கிரமிப்பாளர்கள் வனப்பகுதியை ஆக்கிரமித்து ரசாயன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மண்வளம் பாதித்துள்ளதுடன், தேனீ உள்ளிட்ட உணவு சங்கிலிக்கான உயிர்களையும் வெகுவாய் அழித்து விட்டது. வெள்ளிமலை, மேகமலை பகுதி ஊற்று மற்றும் மழைப்பொழிவு மூலவைகையாக பெருக்கெடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது மழைப்பகுதியில் குறைந்துவரும் மழையினால் இம்மாவட்டங்களின் எதிர்கால நீர்வளம் வெகுவாய் பாதிக்கும்நிலை உள்ளது.

இந்நிலையில் புலிகள் காப்பக உத்தரவு வனப்பகுதியின் தன்மையை மீட்டெடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேகமலையைப் பொறுத்தளவில் நிலச்சரிவு மண்டலமாக உள்ளது. மழைநேரங்களில் மண்சரிவு பல பகுதிகளிலும் ஏற்பட்டுவருகிறது.

தற்போது தேசிய புலிகள் காப்பக அமைப்பு கட்டுப்பாட்டிற்குள் வருவதால் சுற்றுலாப் பயணிகள், வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

தேயிலை தோட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு வெளியேற்றும் நடவடிக்கைள் துவங்கும். இழந்த வனத்தின் வளமையை மீட்பதற்கான அனைத்து திட்டங்களும் இதன் மூலம் செயல் படுத்தப்படும்.

இது குறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் கூறுகையில், தேயிலைத் தோட்டங்களில் ரசாயனப் பயன்பாடு, மரங்கள் அழிப்பு போன்றவற்றினால் இப்பகுதியில் மழைகுறைந்து விட்டது. சிலப்பதிகாரத்தில் பொய்யாக்குளக்கொடி என்று வைகையைவற்றாத ஜீவநதியாக குறிப் பிடப்பட்டுள்ளது. தற்போது சில மாதங்கள் மட்டுமே நீரோட்டம் உள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக மாஞ்சோலை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இவை வரும் 2028-ம் ஆண்டுக்குள் அகற்றப்பட உள்ளன. தேக்கடி புலிகள் சரணாலயத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநிலை வெள்ளிமலை, மேகமலை பகுதியிலும் ஏற்படும். கடுமையான வனச்சட் டங்களை செயல்படுத்துவதின் மூலம் இப்பகுதி அடர்வனங்கள் அதிகரித்து மழைப் பொழிவு உயரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்