உழைக்கும் கரங்கள் தேர்ந்தெடுக்கப்போவது யாரை..?- சூடுபிடிக்கிறது என்எல்சி தொழிற்சங்கத் தேர்தல்; நெய்வேலியில் உச்சகட்ட வாக்கு சேகரிப்பில் தொழிற்சங்கத்தினர்

By ந.முருகவேல்

நெய்வேலி என்எல்சி இந்தியா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, தொழிற் சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருட்டைப் பகலாக்கிய குண்டு பல்பை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த போது அவருக்கு எதிராக தொழிலாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கண்டுபிடிப்புக்கு இவ்வளவு எதிர்ப்பா!’ என்ற கேள்விகள் எழாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

12 மணி நேரம் கடுமையான உழைப்புச் சுரண்டலில் சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு, எடிசனின் கண்டுபிடிப்பு, ‘இரவையும் பகலாக்கி மேலும் உழைப்புச் சுரண்டலுக்கு வழி வகுக்குமே!’ என்ற அச்சம். அதன் காரணமாக அன்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து தான் 19-ம் நூற்றாண்டின் முதலில் தொழிற்சங்கங்கள் உருவானபோது தொழிலாளர்களை நிர்வாகிகளாகக் கொண்ட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பணி வழங்குவோரின் சுரண்டல் நேர்மையற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஒருமித்த குரல் எதிரொலித்தன. இதன் மூலமாக பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டு, தொழிலாளர்கள் நல்லதொரு ஊதியத்தை, நியாயமான பணிச் சூழலை, பணி பாதுகாப்பை நிலை நிறுத்த முடிந்தது.

அன்று, தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த பல்புக்கு இன்று வரை உயிரோட்டம் அளிக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி இந்தியா) தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க, உரத்த சிந்தனையுள்ள தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

என்எல்சி நிறுவனத்தின் உழைக்கும் கரங்களின் உரிமைக் குரலை உரக்க ஒலிக்கும் குரலை தேர்வு செய்யும் வாக்கெடுப்புத் வரும் 25-ம் தேதி நெய்வேலியில் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்ட, நெய்வேலியிலோ தங்கள் தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரத்தை நிலை நாட்ட நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான வாக்கெடுப்புக்கான இந்தத் தேர்தலில் 7,434 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்களிக்கவுள்ளனர். தொமுச, சிஐடியு, அதொஊச, எச்எம்எஸ்,தொழிலாளர் விடுதலை முன்னணி, பாட்டாளித் தொழிற்சங்கம், ஏஐடியுசி உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் போட்டியில் உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான இந்தத் தேர்தலில், 51 சதவீத தொழிலாளர்களின் வாக்குகளை பெறும் தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் களின் முகமாக நிர்வாகம் அங்கீகரிக்கும். அவ்வாறு 51 சதவீதத்தை எந்தவொரு தனிச் சங்கமும் பெறாத பட்சத்தில் அதிகபட்ச வாக்குகள் பெற்ற தொழிற்சங்கம், அதற்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற தொழிற்சங்கம் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை 51 சதவீதத்தை எட்டும் பட்சத்தில் 2 சங்கங்களாகவோ அல்லது 3 சங்களாகவோ அங்கீகாரம் பெற்று உரிமைக் குரல்களாக வலம் வரும்.

உழைக்கும் கரங்களின் உன்னதமான வாக்குகளைப் பெற தொழிற்சங்கங்களுக்கு இடையே நிலவும் போட்டியால் அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. கடந்த இரு தேர்தல்கள் மூலம் இந்த விளையாட்டுகள் அரங்கேறிய போது தொழிலாளர்களும் அதற்கு உடன்பட்டு, கிடைத்தது வரை லாபம் என்ற மனப்போக்கிற்கு மாறியதன் விளைவு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஊழியரின் வாரிசுக்கு வேலை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல உரிமைகளை இழந்து நிற்கின்றனர்.

தொழிற்சங்கங்களுக்கு அடிப்படை பலமே தொழிலாளர்கள் தான். 18 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்த இந்நிறுவனத்தில் சற்றேறக்குறைய 7,500 ஆயிரம்நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே உள்ள னர். மாறாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம், 7 தொழிற்சங்கங்க கூட்டமைப்பு நிறு வனத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேரு வோருக்கும் வாரிசுகளுக்கும் பழகுநர்பயிற்சி முடித்தவர்களுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுத் தந்தனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறினாலும் கணிசமான அளவில் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே இருந்தது.

காலப் போக்கில் முதல் மற்றும் 2-ம் நிலை தொழிற்சங்க நிர்வாகிகளின் சில செயல்களால் ஒப்பந்த வேலைக்கு ஆள் அமர்த்துவது, ஒப்பந்த அடிப்படை யில் வாகனம் இயக்க அனுமதி, ‘அவுட்சோர்ஸிங்’ என்பது நிறுவனத்தின் கொள்கை முடிவு என நிர்வாகம் கூறியபோது அதை எதிர்க்க முடியாமல் போனது ஆகிய காரணங்களால் இன்று நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 7,500 ஆக குறைந்திருக்கிறது.

என்எல்சிக்காக வீடு, நிலம் வழங்கியோருக்கு முதலில், ‘நிரந்தர வேலை’ என்ற நிலையில் இருந்து, ‘ஒப்பந்த அடிப்படையிலான வேலை’என இறங்கி, இன்று, ‘அந்த வேலையும் இல்லை’ என்றாகி, ‘ தொழில் முனைவோருக்கான பயிற்சி அளிக்கிறோம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் தொழிற்சங்கங்கள் பலவீனமடைந்துள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நிரந்தர தொழிலாளி’, ‘ஒப்பந்த தொழிலாளி’ என்ற பாகுபாடு தொழிலாளர்களின் ஒருமித்த போராட்டத்திற்கு வைக்கப்பட்ட வேட்டாக மாறி, கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் முனை மழுங்கிய கத்தியாகி விட்டது நெய்வேலிவாசிகள் அனைவரும் அறிந்ததே.

இந்த தருணத்தில் வரும் 25-ம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

வாக்குகளைப் பெற சில தொழிற் சங் கத்தினர் அளிக்கும் அன்பளிப்புகளை பெறும் தொழிலாளர்களோ, ‘எங்களிடம் சந்தா பிடிக்கின்றனர், சங்கச் செலவுக்கு அவ்வப்போது பணம் பிடிக்கின்றனர், அதை ஈடு செய்யவே தொழிற்சங்கத்தினர் கொடுக்கும் அன்பளிப்புகளை பெறுகி றோம் என நியாயம் கற்பித்தாலும், எங்களுக்கான உரிமையை விற்க மாட்டோம்’ என்கின்றனர் திடமாக!

அரசுகள், அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பணி வழங்குவோர் ஆகியோரிடையே ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில், மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி அமைப்பதற்குப் பணி வழங்குவோருடன் சேர்ந்து ஓர் உடன்பாட்டை மேற்கொண்டிருக்கிறது.

கரோனா காலத்தைப் பயன்படுத்தி நடைமுறையில் இருக்கும் அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் நீக்குவது, அவற்றுக்குப் பதிலாக 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வருவது, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் வரைவு ஆகியவை குறித்து முன்கூட்டி ஆலோசிப்பதில் இருந்து தொழிற்சங்கங்களை விலக்கி வைப்பது ஆகியவற்றில் இப்போதைய அரசு உறுதியாகவே இருக்கிறது.

இவ்விஷயத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பெரும்பாலானபரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டி ருக்கிறது. எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத நாடாளுமன்றச் சூழலும் இந்தமுடிவுகளுக்குச் சாதகமாக ஆகியி ருக்கிறது.

இந்த இக்கட்டான தருணத்தில் நடை பெறும் இத்தேர்தலில் தொழிலாளர்கள், தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட்டு கடந்த காலங்களில் உழைக்கும் வர்க்கம் பெற்றுத் தந்த உரிமைகளை பாதுகாக்க சாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு, நெஞ் சுரமிக்க, ஆற்றலுடைய, சீர்தூக்கி பார்க்கும் பார்வை கொண்ட, பொருளாதாரம் அறிந்த, தொழிலாளர் சட்டம் புரிந்த தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

கடந்த காலங்களில் உழைக்கும் வர்க்கம் பெற்றுத் தந்த உரிமைகளை பாதுகாக்க சாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டு, நெஞ்சுரமிக்க, ஆற்றலுடைய, சீர்தூக்கி பார்க்கும் பார்வை கொண்ட, பொருளாதாரம் அறிந்த, தொழிலாளர் சட்டம் புரிந்த தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்