கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்; புதிய திட்டமாக முதல்வர் தொடங்கி வைப்பது மக்களை ஏமாற்றவா? - ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை பத்து ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது அதனையே புதிய திட்டமாக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பது மக்களை ஏமாற்றவா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 20) மாலை, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - பேருந்து நிலையம் எதிரில், தேன்மலர் பள்ளி அருகில் நடைபெற்ற, திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதன்பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:

"உங்களது கோரிக்கைகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கோரிக்கைகள். இவற்றுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.

ஆனால், தினந்தோறும் தனது பிரச்சாரத்தில் இதனைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. ஸ்டாலின் ஊர் ஊராகப் பெட்டியை தூக்கிக் கொண்டு போகிறார் என்று சொல்லி இருக்கிறார். பெட்டி என்றாலே பழனிசாமிக்கு பணப் பெட்டிதான் நியாபகத்துக்கு வருகிறது. அவருக்கு 24 மணிநேரமும் பணத்தில் தான் குறியாக இருப்பார். அதனால் அதே நினைப்பாகத்தான் இருப்பார். இது பணப்பெட்டி அல்ல, பழனிசாமி! மக்களின் மனப்பெட்டி; மக்களின் மனசாட்சிப் பெட்டி! உங்களது மனக்கோட்டையை உடைக்கப் போகிற பெட்டி இதுதான். வாக்குப்பெட்டிக்கு முன்னதாகவே பழனிசாமியின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போடப் போகும் பெட்டி இதுதான்.

கோட்டையில் உட்கார்ந்து இருக்கும் பழனிசாமி, இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பதற்கு ஆதாரமே இந்தப் பெட்டிதான். பழனிசாமி ஒன்றும் செய்யாதவர், என்பதை உணர்த்தும் பெட்டி தான் இந்தப் பெட்டி தான். இந்தப் பெட்டி திறக்கப்படும் போது, அதிமுக ஆட்சி என்பது இதில் வைத்து மூடப்படும் என்பதை மறந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஆட்சி முடிய இன்னும் மூன்றே மாதம் தான் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அத்துடன் பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் வானத்தை தொடும் அளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார் பழனிசாமி.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கப் போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் என்ன செய்தார்? அடுத்த நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை தரப்போகிறாராம். கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்தார்?

2030-ம் ஆண்டு தமிழக உற்பத்தித் துறை பங்குகளை 30 சதவிகிதம் ஆக்குவோம் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. 2021 ஆம் ஆண்டு என்ன நிலைமை? அதைச் சொல்லுங்கள்! 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது 19.64 சதவீதம். இன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பாதியாக குறைந்துவிட்டது. 9.10 சதவீதம் தான். திமுக ஆட்சியில் 2009-2010 ஆகிய ஒரே ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்பது 28.66 சதவீதமாக இருந்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இப்போது இல்லை.

திமுக ஆட்சியில் உபரி நிதி இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் பற்றாக்குறை தான் இருக்கிறது. பழனிசாயின் ஒரே சாதனை என்ன என்றால், தமிழகத்தின் கடனை அதிகப்படுத்தி சாதனை செய்துள்ளார். 2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக மாற்றிவிட்டார். குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிகமாக வாங்கி இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி, 2017-ம் ஆண்டு 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி, 2018-ம் ஆண்டு 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி, 2019-ம் ஆண்டு 3 லட்சத்து 97 ஆயிரம் கோடி, 2020-ம் ஆண்டு 4 லட்சத்து 56 ஆயிரம் கோடி என்று கடன் தொகை அதிகமாகி வந்துள்ளது. அதாவது, கடன் வாங்கி கஜானாவுக்கு கொண்டு வருவது, வந்த பணத்தை தனது சம்பந்திக்கு பழனிசாமி டெண்டர் கொடுப்பது, வேலுமணி தனது பினாமிகளுக்கு டெண்டர் கொடுப்பது என்று இறங்கி உள்ளார்கள். கடன் வாங்கிய பணத்தை வைத்து ஏதாவது புதிய தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார்களா என்றால் இல்லை!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கான இடத்துக்கும் உத்தரவாதம் தராத ஆட்சியாக பழனிசாமி ஆட்சி இருகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை, என்.எல்.சி, பாரத மிகு மின் நிலையம், வருமானவரித் துறை, உளவுத் துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருவதையே புள்ளிவிவரங்கள் சொல்கிறது. தெற்கு ரயில்வேயின் அடிப்படை தொழில்களுக்கான வேலைவாய்ப்பில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

நெய்வேலி நிறுவனத்தை உருவாக்க நிலம் கொடுத்தவர்கள் அதனைச் சுற்றி உள்ள கிராமத்து மக்கள். ஆனால், அவர்களுக்கு வேலைகள் கிடைப்பது இல்லை. வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலையில் சேர்க்கப்படுகிறார்கள். சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சமீபத்தில் 42 பேரை தேர்வு செய்தனர். அவர்களில், ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை! இதுதான் தமிழ்நாடு. பேரில் தான் தமிழ்நாடு என்று இருக்கிறதே தவிர, தமிழர்களுக்கு வேலை மறுக்கும் நாடாக இருக்கிறது.

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசும் உருவாக்கவில்லை. மத்திய அரசுப் பணிகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவில்லை. இது தான் பழனிசாமியின் அரசாங்கம். திமுக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஏற்கெனவே இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து அதை மினி கிளினிக்குகளாக மாற்றி வரும் பழனிசாமி, நாளைய தினம் ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கப் போகிறார். அதுவும் திமுக தொடங்கிய திட்டம் தான். அதை மீண்டும் தொடங்கி தனது திட்டம் போல காட்ட நினைக்கிறார். இதைப் போல தரமற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கப் போவதாகவும் அதற்கு பழனிசாமி அடிக்கல் நாட்டப் போவதாகவும் அதிமுக அரசு விளம்பரம் செய்கிறது.

ஏற்கெனவே திமுக அரசால், முதல்வர் கருணாநிதியால் 25.6.2008 ஆம் நாள் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. செயல்பாட்டில் இருக்கும் திட்டத்தை பழனிசாமி இப்போது புதிய திட்டம் போல பச்சை பெயிண்ட் அடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

29.5.2007 ஆம் நாள் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசும் போது, ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்துக்குள் உள்ள நதிகளை இணைக்கும் போது அதற்கான நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை அந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டு, அப்படி திட்டங்கள் தீட்டப்பட்டால் மத்திய அரசு நிதி வழங்கும் என்று தீர்மானம் போடப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். 22.2.2008 ஆம் நாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் பதில் அனுப்பினார். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். 20.3.2008 அன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல்வர் கருணாநிதி, 'வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவிரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்' என்று அறிவித்தார்.

முதல் கட்டமாக 165 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தார். திட்டப் பணிகளை திருச்சியில் வைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. அடுத்து வந்த அதிமுக ஆட்சி ஒவ்வொரு முறையும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் என்று சொல்லுமே தவிர பத்தாண்டு காலமாக எதுவும் செய்யவில்லை. கடந்த பட்ஜெட்டில் 700 கோடி ரூபாயை ஒதுக்கினார்களே! என்ன செய்தார்கள்? எதுவும் இல்லை!

3,620 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப் போவதாகச் சொன்னார்களே! செய்தார்களா? இல்லை! இந்தச் சூழ்நிலையில் இப்போது மறுபடியும் காவிரி என்றும் குண்டாறு என்றும் பழனிசாமி பேசுகிறார். ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டத்தை பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு, ஆட்சி முடிய இரண்டு மாதம் இருக்கும் நிலையில் 7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்குவது யாரை ஏமாற்றுவதற்கு? என்பதுதான் என்னுடைய கேள்வி".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்