பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்;  சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது: கோவையில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள், சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலினிடம் இருந்தும் தப்ப முடியாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (பிப். 20) காலை, கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை ரோடு, சங்கம்பாளையம் - ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற, கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதன் பின்னர், ஸ்டாலின் பேசியதாவது:

"உங்களது நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் உயிரோடு இருக்கும் வரை நிச்சயமாகக் காப்பாற்றியே தீருவேன்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, 'இது பொல்லாத ஆட்சி என்பதற்கு பொள்ளாட்சியே சாட்சி' என்று சொல்லி வந்தேன். அது இப்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்துக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வந்தது ஆளும் கட்சி. நாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று முதல்வர் பழனிசாமி சொன்னார். பொள்ளாச்சி ஜெயராமன் அவதூறு வழக்குகள் எல்லாம் போட்டார். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது?

பொள்ளாச்சி சம்பவமே அதிமுக பிரமுகர்களால் தான் நடத்தப்பட்டது என்பதை நாம் சொல்லவில்லை, சிபிஐ சொல்லி விட்டது. அருளானந்தம், பாபு, கரோன்பால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அருளானந்தம் என்பவர் அதிமுக மாணவரணி செயலாளராக இருக்கிறார். 'ஊழல்மணி'யான வேலுமணியின் கைத்தடியாக வலம் வந்துள்ளார்.

வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் பங்கெடுத்துள்ளார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுடன் இவர் இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயராமனுடன் இருந்துள்ளார். ஜெயராமன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அவரோடு அருளானந்தம் உள்ளார். அதிமுகவின் சுவரொட்டிகளில் அருளானந்தம் படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், கைதாகி இருக்கும் பாபு, கரோன்பால் ஆகிய இருவரும் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி ஊராட்சித் தலைவரும் அதிமுக பிரமுகருமான ரெங்கநாதனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இவர்கள் படங்களும் சமூக வலைதளங்களில் வந்தது. இப்படி கைதான மூவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நாடகம் ஆடியது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், இத்தகைய கொடூரர்கள் தப்பி விடக் கூடாது என்பதற்காகத் தான் திமுக மகளிரணி சார்பில் ஆரம்பத்திலேயே பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நான் அறிக்கை வெளியிட்டேன்.

இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகர் 'பார்' நாகராஜன் என்பவரைச் சுட்டிக்காட்டி நான் அறிக்கை கொடுத்தேன். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். வேலுமணியின் பேரைச் சொல்லித்தான் போலீஸை இப்போதும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார். இந்த தகவலை நான் சொன்ன பிறகுதான் 'பார்' நாகராஜனை அதிமுகவை விட்டு நீக்கினார்கள். அவரைக் கட்சியை விட்டு நீக்கினார்களே தவிர கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை. அதனால் தான், தன்னைக் கட்சியை விட்டு நீக்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவகலத்துக்கு போய் நின்று கொண்டு துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் 'பார்' நாகராஜன். பழனிசாமி ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு இருக்கிறது.

பெண்களை வைத்து ஆபாசமாக வீடியோக்களை இந்த கும்பல் எடுத்துள்ளது. இது காவல் துறைக்கு முதலிலேயே தெரியும். அந்த வீடியோக்களை வைத்து பணம் வசூல் செய்தது. இதனையும் நான் அப்போதே திமுக பொதுக்கூட்டத்தில் சொன்னேன். இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாண்டியராஜன் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார். பொள்ளாச்சி துணை எஸ்.பி. ஜெயராம் மாற்றப்பட்டார். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் மாற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் உள்ள தடயங்களை மறைப்பதற்காக, அழிப்பதற்காக சிபிசிஐடி விசாரிக்கும் என்று சொல்லி அதிமுக அரசு சதி வேலையில் இறங்கியது.

சாட்சிகளை அழிப்பதுடன், சாட்சிகளை பயமுறுத்தும் செயல்களிலும் அதிமுக அரசு ஈடுபட்டது. பொதுவாக இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்ட மாட்டார்கள். அவர்களது பெயரைச் சொல்வது கூட சட்டமீறல் தான். ஆனால், அதிமுக அரசின் உத்தரவில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் சொல்கிறார். அவர் பிரச்சினைக்குரிய நபர்கள் நான்கு பேரை அடையாளம் கண்டு அடித்துவிடுகிறார். இந்த நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்திலும் ஒப்படைக்கிறார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என புகார் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதியவில்லை. அனைவரையும் விடுவித்துவிட்டனர். இது தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சட்டம் ஒழுங்கின் லட்சணம்!

நடவடிக்கை எடுக்காத போலீஸார் என்ன செய்தார்கள் என்றால், இந்த புகாரை அப்படியே குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் அதிமுக பிரமுகர் 'பார்' நாகராஜன் வருகிறார். அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்குகிறார். இது தொடர்பாக தரப்பட்ட புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எடப்பாடி பழனிசாமியின் போலீஸ்!

பிரச்சினை பெரிதாகிவருவது தெரிந்ததும், மூன்று பேரை போலீஸ் கைது செய்து கணக்கை முடிக்கப் பார்க்கிறது. இதில் சம்பந்தப்பட்ட முக்கியமானவராக திருநாவுக்கரசை கைது செய்யவில்லை. நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் திருநாவுக்கரசுவை கைது செய்தது போலீஸ். அந்த அறிக்கை வெளியிடாமல் போயிருந்தால் பொள்ளாச்சி கொடூரம் அப்போதே ஊத்தி மூடப்பட்டு இருக்கும்!

இது பற்றி பழனிசாமியிடம் நிரூபர்கள் கேட்டபோது, 'அதிமுகவினருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டார்.

இதோ இன்று சிபிஐ கைது செய்து இருப்பதே அதிமுகவினரைத் தான். இது தான் பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமா? பெண்களை பாதுகாக்கும் அரசாங்கம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பதற்கு பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா?

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட வார இதழ் பத்திரிகையை ஹரீஷ் என்பவர் போனில் மிரட்டுகிறார். யாரைச் சொல்லி மிரட்டுகிறார் தெரியுமா? பழனிசாமி பேரைச் சொல்லி மிரட்டுகிறார். இது தான் பெண்களை பாதுகாக்கும் அரசாங்கமா?

சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் அவர்களிடம் இது தொடர்பான ஆவணங்களை தராமல் இழுத்தடித்த பழனிசாமி அரசு தான் பெண்களைக் காப்பாற்றும் அரசா?

இந்தவாரம் அந்த வார இதழில் ஒரு செய்தி வந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒரு கார் பிடிபட்டிருக்கிறது. அந்தக் கார் எண் TN 02AS 0222 என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்தான் பாலியல் குற்றவாளிகள் சுற்றி வந்திருக்கிறார்கள். இளம்பெண்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள வார இதழ், அந்தக் கார் அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா என்பவரது பெயரில் இருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டிருக்கிறது.

தைரியமிருந்தால் என்மீது வழக்குப் போடுங்கள். உங்களுக்குத் துணிவிருந்தால் இவற்றை நான் பேசுவதற்காக என்மீது நீங்கள் வழக்குப் போட வேண்டும். அந்த வழக்கைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நான் கருணாநிதியின் மகன். எதையும் ஆதாரத்துடன்தான் பேசுவேன். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த ஒவ்வொரு 'ராஜா'க்களும், அவர்களது கூஜாக்களும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரம் இருப்பதால் சில 'ராஜா'க்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை தாமதமானால், நியாயம் கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அந்த 'ராஜா'க்களின் வேடம் கலைந்துவிடும். அப்போது சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலினிடம் இருந்தும் அவர்கள் தப்ப முடியாது என்பதை உறுதியாகச் சொல்கிறேன்.

'பெண்கள் நலன் காப்பதிலும் அதிகாரம் அளித்தலிலும் வெற்றி நடை போடும் தமிழகம்' என்று வெட்கமில்லாமல் பழனிசாமி ஒரு பக்க விளம்பரம் கொடுத்த அதே நாளில் தான் அதிமுக பிரமுகர்கள் பாலியல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்கள். இதன் பிறகும் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் பழனிசாமி.

பெரியார் தான் சொன்னார்: 'மானத்தை பற்றிக் கவலைப்படக்கூடிய ஆயிரம் பேருடன் போராடலாம். ஆனால், மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் போராட முடியாது' என்று சொல்வார். அப்படித்தான் நமது நிலைமை இருக்கிறது!

அதிமுக பிரமுகர் வைத்த பேனரால் விபத்துக்கு உள்ளாகி சென்னையில் சுபஶ்ரீ என்ற பெண் உயிர் இழந்தார். அதிமுக பிரமுகர்கள் வைத்த பேனரால் விபத்துக்கு உள்ளாகி கோவையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் தனது காலை இழந்தார். நீட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் அனிதா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பழனிசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதில் ஜான்சி, ஸ்னோலின் ஆகிய இருவர் பெண்கள்! சேலம் எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வயதான மூதாட்டிகளைக் கூட கைது செய்தார்கள்.

மதுவுக்கு எதிராக போராடிய மகளிர் மீது தாக்குதல் நடத்தினார்கள். மாற்றுத்திறனாளிப் பெண்கள் தங்கள் கோரிக்கைக்காக போராடியதற்காக கைது செய்து ஊருக்கு வெளியே விட்டுவிட்டு வந்தார்கள். தங்களது கோரிக்கைக்காக போராடிய ஆசிரியைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். மாணவிகளை அடித்து உதைத்தார்கள். இப்படி எல்லா இடங்களையும் பெண்களை, மகளிரை பழிவாங்கிய அரசு தான் பழனிசாமி அரசு.

மகளிர் சுய உதவிக்குழுவை வளர்க்கவில்லை. அவர்களுக்கு கடன்கள் தரவில்லை. பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லை. இதில் பழனிசாமி அரசு அக்கறை செலுத்தவே இல்லை.

ஒருவேளை ஜெயலலிதா மீதான கோபத்தை, சசிகலா மீதான கோபத்தை தமிழ்நாட்டு பெண்கள் மீது பழனிசாமி காட்டுகிறாரா என்று தெரியவில்லை. ஜெயலலிதா என்ற பெண்ணால், சசிகலா என்ற பெண்ணால் தான் நீங்கள் பதவிக்கு வந்தீர்கள். இன்று அதிகாரத்தை அனுபவிக்கிறீர்கள். இவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள். இன்று முதல்வராக இருக்கிறீர்கள். நாளைய தினம் முன்னாள் முதல்வர் என ஆகப் போகிறீர்கள். ஆனால், உங்களது ஆட்சியில் மகளிருக்கு செய்தது என்ன? கொடுத்தது என்ன? கஷ்டமும் கண்ணீரும் தான். ஆனால், மகளிரை மதிக்கும் ஆட்சி என்று பேசி வருகிறீர்கள்.

அதிமுக என்ற கட்சிக்கு 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு போட்டீர்களே? அதில் ஒரு பெண் உண்டா? இல்லையே? பிறகு எதற்காக பெண்களை ஏமாற்றுகிறீர்கள்? வாய்க்கு வந்ததைப் பேசி மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். அந்தக் காலம் முடிந்துவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதோ இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்துள்ளார்கள் என்றால் இது ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தின் வெளிப்பாடு.

இந்தக் கோபம், தேர்தலின் போது அதிமுக ஆட்சியை தூக்கி எறியும். அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் பெண்கள், மகளிர், குழந்தைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தும் ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்படும்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்