தேர்தல் எதிரொலி: வேலூர் - சித்தூர் இடையிலான உளவுத் தகவல்கள் பரிமாற்றம்: ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு

By வ.செந்தில்குமார்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பணப்பரிமாற்றம், குற்றவாளிகள் பதுங்கல் தொடர்பாக வேலூர், சித்தூர் மாவட்டங்கள் இடையிலான உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ள இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தையொட்டி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்துடன் சுமார் 65 கி.மீ தொலைவு எல்லையை வேலூர் மாவட்டம் பகிர்ந்துள்ளது.

எனவே, இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.19) மாலை நடைபெற்றது. சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), ஹரிநாராயணன் (சித்தூர்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செல்வகுமார் (வேலூர்), செந்தில்குமார் (சித்தூர்), சித்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் முரளி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஷேக் மன்சூர் (குடியாத்தம்), காமராஜ் (வேலூர் பொறுப்பு), ரேணுகா (சித்தூர்), சித்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிஷாந்த், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச்சந்திரன் (வேலூர் மாவட்ட தேர்தல்), ரவிச்சந்திரன் (காட்பாடி), ஸ்ரீதரன் (குடியாத்தம்), சுதாகர் ரெட்டி (சித்தூர்) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரவுடிகள் சித்தூர் மாவட்டத்தில் தஞ்சமடைவார்கள் என்பதால் அவர்களை கைது செய்யவும், தமிழக எல்லைக்குள் கள்ளச்சாராயம் எடுத்து வருவதை தவிர்க்கவும், இரு மாநிலங்களில் குற்றவாளிகள் மீதான நிலுவையில் நீதிமன்ற கைது ஆணைகளை நடைமுறைப்படுத்தவும் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பணப் பரிமாற்றத்தை தடுக்க அதிகளவில் சோதனை நடத்தவும் ஆலோசனை நடந்தது.

சோதனைச்சாவடிகள் அதிகரிப்பு:

இந்தக்கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் எல்லை மட்டும் தமிழகத்துடன் சுமார் 120 கி.மீ தொலைவுக்கு உள்ளது.

இதில், 65 கி.மீ தொலைவு வேலூர் மாவட்டத்துடன் தொடர்புடையது. தற்போது 6 சோதனைச் சாவடிகள் இருக்கிறது. இதை 9 ஆக உயர்த்தப்பட உள்ளது. மேலும், சித்தூர் மாவட்டத்தில் இருந்து 15 வழித்தடங்கள் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் உள்ளது. அங்கெல்லாம் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

வருவாய்த் துறை, காவல் துறை, கலால் துறையுடன் வனத்துறையும் இணைந்து சோதனைகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு ஒன்று ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜானி மற்றும் வசூர் ராஜா ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்த தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டது. தேர்தலின்போது ஆந்திர மாநில எல்லைகள் வழியாக பணப் பரிமாற்றத்தை தடுக்க தீவிரமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மரம் கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் அவர்கள் மீதான நிலுவையில் உள்ள நீதிமன்ற கைது நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு மாவட்ட அதிகாரிகள் இடையிலான தொடர்பை தேர்தலுக்குப் பிறகும் தொடரவும் முடிவு செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தனர்.

உளவுத் தகவல்கள் பரிமாற்றம்:

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இரண்டு மாவட்டங்கள் இடையில் கஞ்சா கடத்தல், கள்ளச்சாராயம், மதுபாட்டில் கடத்தல், பணம் பதுக்கலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குற்றவாளிகள் எல்லை தாண்டி வருதை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இரண்டு மாவட்ட அதிகாரிகள் மத்தியில் உளவு தகவல்களை பரிமாறிக்கொள்ளப்படும். சோதனைச் சாவடிகள் மற்றும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பை அதிகரிக்கப்படும். வேலூர், சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள கவுன்டன்யா வனப்பகுதி வழியாக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்