திமுகவின் 11 -ம் மாநில மாநாட்டை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 19) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"மக்களாட்சி என்கிறோம் ஜனநாயகத்தை! மத்தியிலும் மாநிலத்திலும் நடப்பதோ மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சி. அதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் தொடரும் விலை உயர்வே பானை சோற்றுக்குப் பதச் சோறாக இருக்கின்றது.
மத்தியில் ஆட்சி செய்கிறது பாஜக அரசு. எந்த பாஜக? ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏறத்தாழ 400 ரூபாய் அளவில் சமையல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இருந்தபோது, காலி சிலிண்டர்களைத் தூக்கிக்கொண்டு சாலையில் இறங்கி கண்டனப் போராட்டம் நடத்தியது இதே பாஜக தான். இப்போது, அந்த பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை என்ன தெரியுமா? ரூ.787.50. இது 800 ரூபாய் வரையிலும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. இதுதான் இல்லத்தரசிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள அதிர்ச்சிப் பரிசு.
திமுக ஆட்சியின்போது 2011-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.63.37பைசா. டீசல் விலை ரூ.43.95 பைசா. அதற்கே அதிமுக கூப்பாடு போட்டுத் திரண்டார்கள். இன்றைக்கு பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ.91.19 பைசா. டீசல் ரூ.84.44 பைசா. பெட்ரோலியத்துறைக்கு மத்திய அரசுதானே பொறுப்பு என்று நினைக்கலாம். உண்மைதான்!
மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு கலால் வரி விதித்து பெட்ரோல் விலையை உயர்த்தியது என்றால், அதன் மீது கூடுதல் சுமையாக பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.25 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.50 பைசாவும் வாட் வரி விதித்து, விலையேற்றத்திற்குத் துணை நின்றுள்ளது.
இந்த நிலை நீடித்தால், விரைவில் பெட்ரோல் விலை 'செஞ்சுரி' அடிக்கும். டீசல் விலையும் அதே அளவுக்கு உயரும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைக் கடக்கும். இதுதான் 'அச்சே தின்' என்கிற மோடி அரசின் நல்ல நாளா? 'வெற்றி நடை போடும் தமிழகம்' என அரசுப் பணத்தை அள்ளி இறைத்து வெற்று விளம்பரம் கொடுக்கும் அதிமுக அரசின் சாதனையா? விலையேற்றச் சுமையினால் வாகனங்களைப் பயன்படுத்த முடியாமல், மக்கள் அனைவரும் நடந்துதான் சென்றாக வேண்டும் என்பதைத்தான் 'வெற்றி நடை' என்று எகத்தாளத்துடன் கிண்டல் செய்கிறாரா முதல்வர் பழனிசாமி?
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதால், ஜனநாயகத்தின் அடித்தளத்தைத் தகர்க்கும் மத்திய பாஜக அரசும், மாநிலத்தை ஆளுகின்ற அதிகார மமதையால் மக்களை ஏமாற்றும் பழனிசாமி அரசும் திமுகவை நோக்கி 'பொது எதிரி' என்கிறார்கள். உண்மையில், இந்த இரண்டு கட்சிகளும் அதன் ஆட்சிகளும்தான் பொதுமக்களின் எதிரிகள். திமுகவோ ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் தோழன். அவர்களின் துயரங்களில் தோள் கொடுக்கும் இயக்கம். அதனால்தான், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு எதிராகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் மக்கள் திரளுடன் பிப்ரவரி 22 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடைபெற இருக்கிறது.
திமுக நடத்துகின்ற போராட்டங்கள் மக்களின் நலனுக்கானது என்பதாலும், மக்கள் விரோத அரசுகளுக்கு எதிரானது என்பதாலும் அண்மைக்காலமாக அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்து ஒருங்கிணைந்த போராட்டமாக நடத்துகிறோம். பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டமும் அனைத்து மக்களின் பங்கேற்புடன் நடைபெறுகிற போராட்டமாக அமையட்டும்.
குறிப்பாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மகளிர், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சரக்கு வாகன போக்குவரத்துத் துறை சார்ந்தோர், பெட்ரோல் விலை உயர்வால் அதிகம் அல்லல்படும் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக முடங்கியுள்ள வணிகர்கள், நுகர்வோர் என அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து எழுச்சிமிகு போராட்டமாக வடிவெடுக்கட்டும்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு குறைந்தாலும், கலால் வரிவிதிப்பு எனும் நுகத்தடியால் மத்திய அரசும், வாட் வரி எனும் சாட்டையால் மாநில அரசும், மக்களை மாடுகளைப் போல நினைத்து வதைக்கும் கொடுமையை எதிர்த்துக் களம் காண்போம். வரிகளை ரத்து செய்து, விலை குறைத்திட வழி வகுப்போம். மக்களைக் காத்திட, நம்மை எத்தனை களங்கள் அழைத்தாலும் அத்தனை களங்களையும் சந்திப்போம்.
ஆட்சி செய்த காலம் முழுவதும் மக்களை மறந்து, மாநில உரிமைகளை அடமானம் வைத்து, நிறைவேறாத திட்டங்களுக்கு பணம் ஒதுக்கி, அரசாங்க கஜானாவைக் கொள்ளையடிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறது. அதுவும்கூட, திமுகவின் சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் தலைப்பில் ஒவ்வொரு தொகுதி மக்களிடமும் நான் நேரடியாகக் குறை கேட்கத் தொடங்கி, பொதுமக்களும் கோரிக்கை மனுக்களைக் குவியச் செய்தபிறகுதான், ஆள்வோருக்கு ஞானோதயம் வருகிறது.
விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் மறுத்த பழனிசாமி அரசு, திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து என்றதும் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுகிறது; அதுவும் அரை குறை அறிவிப்பு. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் குறைகளைத் தீர்த்துவைப்போம் என்ற உங்களில் ஒருவனான என்னுடைய உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்து லட்சக்கணக்கான மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தபிறகு, குறை தீர்ப்புக்கான 1100 என்ற எண்ணை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார். அதுவும்கூட, ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அரைகுறையாக முடங்கிப்போன குறை தீர்ப்புச் செயல்பாடுதான்.
சொந்தப் புத்தி இல்லாமல், திமுகவும் மு.க.ஸ்டாலினும் சொன்ன பிறகு, புத்தி வந்து அவசர அறிவிப்புகளை வெளியிடும் 'காலி கஜானா' அதிமுக அரசிடம் இனியும் ஏமாந்திட தமிழக மக்கள் தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாகக் காண்கிறேன். சொல்வது திமுக! அறிவிப்பது அதிமுக என்றாலும் இன்னும் சில மாதங்களில் அதைச் செயல்படுத்தப்போவதும் திமுகதான் என்ற திடமான முடிவுடன் தமிழக மக்கள் இருக்கிறார்கள்.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றிடும் பெரும் பொறுப்பு திமுகவிடம் இருக்கிறது. இந்த மாபெரும் மக்கள் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான், கருணாநிதியின் தொண்டர்களான உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பையும் எதிர்பார்க்கிறேன்; ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.
'இலக்கு 200 தொகுதி' என்கிற லட்சியத்தை உங்களை நம்பி அறிவித்தேன். அது 234 தொகுதிகளாகவும் அமையப்போகிறது என்கிற வகையில் எழுச்சியைக் காண்கிறேன். திமுகவின் வெற்றியைத் தட்டிப்பறித்திட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைத்து வித நூதன மோசடிகளிலும் மனசாட்சியின்றி ஈடுபடுவார்கள்.
அவர்களின் கொட்டமடக்கிட, நம் ஜனநாயக அறவழிப் போர்ப்படை ஆயத்தமாக இருக்க வேண்டும்; மிகுந்த கவனத்துடன் காரியம் ஆற்ற வேண்டும். அந்த ஆயத்தப் பணிகளுக்கான பாசறையாக, பாடி வீடாக, தீரர் கோட்டமாம் திருச்சியிலே திமுகவின் 11-வது மாநில மாநாடு மார்ச் 14 ஆம் நாள் மகத்தான முறையிலே நடைபெறவிருக்கிறது. திமுக தேர்தல் களம் காணக் காரணமாக அமைந்தது, 1956-ல் திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாடு. அண்ணாவும், தலைவர் கருணாநிதியும், மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய நெடுஞ்செழியனும், க.அன்பழகனும் இன்னும் பல தலைவர்களும் இன்றில்லை. ஆனால், தலைவர்கள் ஊட்டிய கொள்கை உணர்வுடன் ஆலமரமாகத் தழைத்திருக்கிறது திமுக.
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கருணாநிதி நமக்கு இன, மொழி உணர்வையும், போராட்டக் குணத்தையும் வழங்கியிருக்கிறார்; நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்திருக்கிறார். தலைவர் கருணாநிதியும் க.அன்பழகனும் இல்லாத முதல் மாநில மாநாடு என்கிற சுவடே தெரியாமல், அவர்களின் அடியொற்றிப் பயணிப்போம். 11 ஆம் மாநில மாநாட்டை மகத்தான வெற்றி பெறச் செய்வோம். அதில் தீட்டப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி, தலைவர் கருணாநிதியின் அரசை விரைவில் தமிழகம் காண ஆயத்தமாவோம். மலைக்கோட்டை மாநகரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டின் வெற்றியை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கச் செய்திடுவோம்!".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago