என்னைப் போல் விவசாயி அல்ல ஸ்டாலின்; அப்பா முதல்வர் என்பதால் வசதியாக வளர்ந்தவர்; மக்கள் துயர் தெரியாத தலைவர்: முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

ஸ்டாலினின் அப்பா முதல்வராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார், ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தார்கள், எம்எல்ஏ ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய துயர் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் ஸ்டாலின். நான் அப்படியல்ல, உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து படிப்படியாக வந்தவன் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.2.2021) திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:

“பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு. ஜெயலலிதா இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென்று தெரிவித்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர் வழியில் செயல்படும் அரசு தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தந்துள்ளது.

2006 ஆட்சியில் அப்போதிருந்த திமுக தலைவர் கருணாநிதி நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாகச் சொன்னார். எத்தனை பேருக்கு நிலம் கிடைத்தது? அப்படி மக்களை ஏமாற்றுகின்ற கட்சிதான் திமுக. நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். அதிமுக அரசு உங்களுடைய அரசு.

ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெண்களை அழைத்து அமரவைத்து ஒரு திண்ணையில் பெட்ஷீட்டைப் போட்டு அமர்ந்து உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதென்பதை நீங்கள் மனு மூலமாக பெட்டியில் போட்டால், அதைப் பூட்டி, சீல் வைத்து நான் வீட்டிற்குக் கொண்டுசென்று, 3 மாதத்தில் நான் முதல்வராக ஆகிவிடுவேன், 100 நாட்களில் உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார். அதற்கு ரசீதும் கொடுக்கிறார்.

நாங்கள் கேட்கிறோம், 5 முறை திமுக ஆட்சி இருந்ததே, நீங்களும் துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தீர்கள். உங்களுக்கு வயது 70 ஆகிவிட்டது, 70 ஆண்டுகாலமாக ஏன் இந்த மக்களைக் கண்டுகொள்ளவில்லை? ஏன் இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை? பிரச்சினை தீர்ப்பதற்குத்தானே துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆக ஆக்கினார்கள்.

ஆட்சியில் இருக்கும்போது மக்களை கவனிக்க மாட்டார்கள், மக்களின் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக, வாக்குகளைப் பெறுவதற்காக ஊர் ஊராக வந்து பொய் பேசி, நாடகமாடி, உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற கட்சி திமுக. நான் எதுவும் பொய் பேசவில்லை.

நான் உங்களைப்போல கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வாழ்ந்து வாழ்கின்றவன், இன்றைக்கும் நான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே, மக்களின் துன்பங்கள், பிரச்சினைகைளை நன்கு அறிந்தவன். எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து, நாங்கள் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறோம்.

ஸ்டாலின் அப்படியல்ல. அவரது அப்பா முதல்வராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார், எம்எல்ஏ சீட் கொடுத்தார்கள், எம்எல்ஏ ஆனார், துணை முதல்வரானார். மக்களுடைய கஷ்டம் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர்.

நான் அப்படியல்ல. உங்களைப் போல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கட்சியில் கிளைக் கழகச் செயலாளராக தொடங்கி, படிப்படியாக உயர்ந்து எம்எல்ஏ ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சராகி, முதல்வர் ஆகியுள்ளேன். கட்சியிலும் அப்படித்தான் பதவி கிடைத்திருக்கிறது. ஆகவே, உழைத்தால் அந்த உழைப்பின் அருமை தெரியும். உழைக்காமலிருந்தால் அந்த அருமை தெரியாது, கஷ்டம் தெரியாது, பிரச்சினை தெரியாது, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாது.

மேடையில் மிட்டா மிராசுதாரரா உட்கார்ந்திருக்கிறோம்? திமுக ஆட்சியில் எங்களைப் போல் இருப்பவர்கள் யாராவது இந்தப் பதவிக்கு வரமுடியுமா? விடுவார்களா? கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி. குடும்பம்தான் ஆட்சிக்கு வர முடியும், வேறு யாரையும் ஆட்சிக்கு வர விடமாட்டார்கள், அதிகாரத்திற்கும் வரமுடியாது. தமிழ்நாடு முழுவதும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

எல்லா மீட்டிங்கிலும் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர்தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். வேறு யாராவது வந்தால் கட்சியைக் கைப்பற்றி விடுவார்கள் என்று பயம். அதிமுகவில் அப்படியில்லை. நான், எம்எல்ஏ, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் வருவார்கள், மேடையிலிருக்கும் அனைவரும் உங்களைச் சந்தித்து உங்களுடைய எண்ணங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள்.

இது மக்களுடைய அரசாங்கம். நான் முதல்வர் என்று எப்போதும் எண்ணியதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்றீர்களே, நீங்கள் தான் முதல்வர். நீங்கள் போடுகின்ற உத்தரவைச் செயல்படுத்துகின்ற பதவி முதல்வர் பதவி. ஸ்டாலின் அப்படியில்லை. மூன்று மாதத்தில் முதல்வராகி விடுவாராம். எப்படி முடியும்? தேர்தல் அறிவித்து, மக்கள் ஓட்டுப் போடவேண்டும், எண்ண வேண்டும், பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவேண்டும், அப்போதுதான் வரமுடியும்.

முதல்வர் பதவி, கடையில் கிடைக்கும் பொருளா, பொட்டலம் கட்டி வாங்குவதற்கு? மக்களால் தேர்ந்தெடுக்கின்ற பதவி. அதை மறந்து அவர் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களைச் சந்தித்து, என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்தோம் என்று சொல்கிறோம், இன்னும் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்கிறோம். மக்கள் அதை நம்புகிறார்கள், மக்கள் வாக்களிக்கிறார்கள்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்