நாட்டில் முதல் விமான அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் (பிப்.18) 110 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
உலகின் எந்த மூலையில் இருப்போரிடமும் தற்போது நாம் செல்போன், கணினி மூலம் நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஆனால், இத்தகைய வசதிகள் இல்லாத காலகட்டத்தில் தொலைவில் இருப்போரிடம் தகவல்களைப் பரிமாறுவதற்கு அஞ்சல் துறைதான் பாலமாகச் செயல்பட்டது.
‘நலம், நலம் அறிய ஆவல்’ என்ற வார்த்தை முதல், மனிதனின் அத்தனை உணர்வுகளையும் அஞ்சல் துறைக் கடிதங்கள்தான் தாங்கிச் சென்றன. அஞ்சல் துறையின் இந்தச் சேவை, ‘வாட்ஸ்அப்’, ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ என தற்போது முன்னேற்றங்கள் வந்த பிறகும் இன்னமும் தவிர்க்க முடியாத ஒரு துறையாகவே செயல்படுகிறது. இத் துறையில் நாட்டில் முதல் விமான அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் (பிப்.18) 110 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
இதுகுறித்து முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் கூறியதாவது:
நாட்டின் முதல் விமான அஞ்சல் சேவை அலகாபாத்தில் 1911-ம்ஆண்டு, பிப்.18-ல் தொடங்கப்பட்டது. அதேநாளில் அலகாபாத்தில் கும்பமேளா நடந்தது. அதனால், இந்த சேவையின் தொடக்க நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
கடிதங்களைச் சுமந்து சென்ற இந்த சிறப்பு விமானம், யமுனை நதிக் கரையோரம் உள்ள ஒரு மைதானத்தில் இருந்து மாலை 5.30-க்கு நதியைக் கடந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள நைனி ரயில்வே சந்திப்பில் தரையிறங்கியது. இந்த விமானத்தை மெஸ்ஸிய ஆரி பீக்கே என்ற 23 வயது பிரெஞ்ச் விமானி ஒருவர்தான் இயக்கினார்.
இந்த முதல் விமான அஞ்சல்சேவையில் மொத்தம் 6,500 கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், மோதிலால் நேரு, இங்கிலாந்தில் படித்த தனது மகன் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதமும் சென்றது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடிதங்கள் மீது ‘முதல்வான் அஞ்சல்’ என்ற சிறப்பு முத்திரை இடப்பட்டிருந்தது. மேலும், கடிதங்களை எடுத்துச் செல்லும் விமானத்தின் புகைப்படமும் அதில்பொறிக்கப்பட்டிருந்தது. அப் போது, வான் அஞ்சலுக்காகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படவில்லை. அதன் பிறகு வான் அஞ்சல் சேவையைச் சிறப்பிக்கும் வகையில் 1961-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அவை50 பைசா, 15 பைசா, 3 ரூபாய் மதிப்புடையவையாக இருந்தன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கியத்துவம் பெற்ற விமான அஞ்சல் சேவை
மதுரை கோட்ட அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முன்பு வெளிநாடுகளுக்கும், தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கும் அனுப்ப வேண்டிய கடிதங்கள் மட்டுமே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து அரசு, தனியார் விமானங்கள் அதிக அளவு இயக்கப்படுவதால் அஞ்சல் சேவை கடிதங்கள் மட்டுமல்லாது பெரும்பாலான விரைவுத் தபால்களும் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால், சென்னைக்கு செல்லக்கூடிய விரைவுத் தபால்கள் மறுநாளே சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைகின்றன.
இரவு செல்வதாக இருந்தால் மட்டும் ரயில்களில் தபால்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதனால், முன்பைவிட விமான அஞ்சல் சேவை தற்போது அதிக அளவு அஞ்சல் துறையால் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago