வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் - கேஸ் சிலிண்டர் விலை உயர்வைச் செய்திருக்கும் பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், திமுக சார்பில் வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.17) வெளியிட்ட அறிக்கை:
"ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50-க்கு கண்ணைக் கட்டும் அளவுக்கு உயர்த்தி, சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு 'அதிர்ச்சி'ப் பரிசை அளித்துவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பர் மாதத்தில், தலா 50 ரூபாய் வீதம், இரு முறை 100 ரூபாய் அதிகரிப்பு, பிப்ரவரி மாதத்தில் இரு முறை 75 ரூபாய் அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
2011-ல் திமுக ஆட்சியிலிருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 63.37 பைசாதான். டீசல் விலை 43.95 பைசா மட்டுமே! அந்த விலையை எதிர்த்தே போராட்டம் நடத்திய அதிமுகவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.19 ரூபாய். டீசல் விலை 84.44 ரூபாய்.
முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் மீது 20 லட்சம் கோடி ரூபாய்க்குக் கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால், அதிமுக அரசு, அதுவும் முதல்வர் பழனிசாமி, கரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் அதிகரிக்கும் வகையில் 'வாட்' வரி விதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்வுக்கு மற்றொரு காரணம்!
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையால், இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் பட்ஜெட் துண்டு விழுந்து, இந்த அரசுகள் உருவாக்கிய துயரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த விலை உயர்வுகளால், காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம்போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்துக் கட்டணம் உயருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 சதவீதம் குறைந்த நிலையிலும், அந்த விலைக் குறைப்பின் பயனில் ஒரு பைசாவைக் கூட மக்களுக்கு மத்திய பாஜக அரசு அளிக்கவில்லை, தனது கஜானாவிலேயே தக்கவைத்துக் கொண்டது. போதாக்குறைக்கு, கரோனா காலத்தில் கூட வருவாயைப் பெருக்க, பெட்ரோல், டீசல் மீது கலால் வரி போட்டு, 39 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மத்திய பாஜக அரசு.
இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூல் எங்குபோனது என்பதும், இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது!
ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்குப் போடும்போது, அதில் 18 ரூபாய் 'செஸ்' வரி சாலை மேம்பாட்டுக்குப் போகும்போது, எதற்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது? இதில் 'ஃபாஸ்டேக்' இல்லை என்றால், மூன்று மடங்கு வசூல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை வேறு! மோடி அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு என்பது தெளிவாகத் தெரிகிறது.
மத்திய பாஜக அரசு விதித்துள்ள கலால் வரியை மட்டும் குறைத்தாலே, பெட்ரோல், டீசல் விலை பெருமளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
தினமும் பெட்ரோல், டீசல் விலை போட்டி போட்டுக் கொண்டு பந்தயக் குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையோ தாவிக்குதித்துச் செல்கிறது.
மக்கள் அல்லல்படும் இதுபோன்ற சூழலில் கூட நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், 'பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு, அரசின் பரிசீலனையில் இல்லை' என்று கைவிரித்திருப்பது, மக்களைப் பற்றிய கவலை மத்திய அமைச்சருக்கும் இல்லை! மத்தியில் பாஜக அரசுக்குத் தலைமை வகிக்கும் பிரதமருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 414 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ரூபாய் 787.50 ஆக உயர்ந்ததுகூட தங்கள் கண்ணுக்குத் தெரியாதது போல் பாஜகவினர் ஆட்சி செய்து, மக்களை வாட்டி வதைத்து வருவது கவலையளிக்கிறது.
எனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அதிமுக - பாஜக அரசுகளைக் கண்டித்தும், கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பாஜக அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திமுகவின் சார்பில் பிப்ரவரி 22-ம் நாள் (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டும் அனைவரையும் திமுகவின் சார்பில் அழைக்கிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago