குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலீட்டு மானியம் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை எனத் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, இது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.5 கோடி ரூபாய் வரை குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.
சென்னையில் தொழில்துறை சார்பில் இன்று நடைபெற்ற "வெற்றி நடை போடும் தமிழகம், தொழில் வளர் தமிழகம்" நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
“அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021. தமிழ்நாடு அரசின் இந்தப் புதிய கொள்கைகள், வளர்ந்து வரும் துறைகளான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளுக்குப் புதிய தொழில் கொள்கைகள் கூடுதல் ஊக்கமளிக்கின்றன. புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தினை அதிகரிக்கவும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கும் வகையிலும் தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க "தென்மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு 50 சதவீதம் சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது."
கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் 6.85 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொழிற் கொள்கையின் விளைவாக, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 6.50 லட்சம் கோடி அளவிற்கு புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் எண்ணிக்கை, தொழிற்சாலை பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்துக் கொண்டிருக்கிறது.
2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டளர்கள் மாநாடுகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 சதவீதம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
ஜெயலலிதா வழி நின்று சாதனைகள் பல படைத்து வரும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிடும் இந்தப் புதிய கொள்கைகளும் சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை கரோனா கால பொருளாதார பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க "அவசரகாலக் கூடுதல் கடன் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை தமிழ்நாட்டைச் சார்ந்த 3,66,619 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 13.5 ஆயிரம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இனிய விழாவில், தமிழக தொழில்துறை மேம்பாட்டில் ஐம்பது ஆண்டுகளாகப் பெரும் பங்கு வகித்து பொன்விழா கண்டு சாதனை படைத்துவரும் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"பொன்விழா கொண்டாட்டங்களின் அடையாளமாக, சிட்கோவின் முதல் தொழில் பூங்காவான கிண்டி தொழில் பூங்காவில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்விழா நினைவு வளைவு ஒன்று அமைக்கப்படும்" என அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
200 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டிலான 6 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கவும், 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலான இரண்டு அடுக்குமாடி தொழிற்கூடத் தொகுப்புக் கட்டிடங்கள் கட்டவும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் புதிய முத்திரை வெளியிடப்பட்டு, இணையதளம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிப்காட் நிறுவனத்தின் மூலம் மணப்பாறை, மாநல்லூர், ஒரகடம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் 3,977 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்படும் சிப்காட் புத்தாக்க மையமானது, தொழில் பூங்காக்களில் நவீன ஆய்வு மற்றும் புத்தாக்கங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, இளம் கண்டுபிடிப்பாளர்களைத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கமாக அழைத்துச் செல்வதில் பெரும் பங்காற்றும்.
இந்தப் புத்தாக்க மையங்கள், சிப்காட் தொழிற் பூங்காக்களை, உலக தரத்திற்கு மேம்படுத்த, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் முக்கிய மைல்கல்லாகும். கோயம்புத்தூர் மாநகரில் இன்று தொடங்கப்பட்டுள்ள "டைசல் உயிரி தொழில்நுட்பப் பூங்கா" மூலம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உயிரி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டிற்கு, அரசு அளித்து வரும் தொடர் ஊக்கத்திற்கு சான்றாக இந்தத் தொழில் பூங்கா அமைந்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்கும், பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தைத் தணிப்பதற்கும் அமைக்கப்பட்ட தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவின் அறிக்கையின்படி, பிற நாடுகளில் இருந்து இடம் பெயர உள்ள முதலீட்டு திட்டங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் மூலமாக 38 துறைகளின் 190 அனுமதிகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அனுமதிகள் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவற்றுக்கு உடனுக்குடன் உயர்மட்ட குழு கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
"பிரச்சினை வந்தால் முதல்வரே தலையிட்டு விரைவாகத் தீர்த்து வைப்பார்" என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர இன்று 28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 68,775 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மேலும் 28 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இன்று வெளியிடப்பட்டுள்ள, புதிய தொழில் கொள்கைகளின் அடிப்படையில், மேலும் மேம்படுத்தப்பட்ட புதிய வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையும், புதிய ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையும் விரைவில் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிறப்பான அறிவிப்புகள் சிலவற்றை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
சிறப்பான அறிவிப்புகள்
தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ரூபாய் 500 கோடியில் மூலதன நிதியம் 500 கோடி ரூபாய் உருவாக்கப்படும்.
தகுதிவாய்ந்த தொழில்களுக்கு, முதல் 4 ஆண்டு காலம் வரையில் செயல்படத் தேவையான முக்கிய அனுமதிகளுக்கு விலக்களிக்கும் "FastTN" திட்டம, வாகன உற்பத்திக்கு ஊக்கமளிக்க புதிதாக உருவாக்கப்படும் மாதிரி வாகனங்களை பதிவு செய்வது எளிதாக்கப்படும்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலீட்டு மானியம் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 50.00 லட்சம் ரூபாய் வரை எனத் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, இது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு 1.5 கோடி ரூபாய் வரை குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு மானியம் வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பாக செலுத்தப்படும் தொகையில் ஆண்டொன்றிற்கு ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக 24,000 ரூபாய்க்கு மிகாமல் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மானியமாக அரசு வழங்கும்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு 1949இல் இருந்து பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தினை மேலும் வலுப்படுத்தும் விதமாக 1000 கோடி ரூபாய் நிதியை அரசு வழங்கும்.
அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, தொழில் வளர்ச்சிக்காகப் பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்கியது எனச் சிறப்பாகச் சாதனை படைத்த பல நிறுவனங்களுக்கு Business Today விருது வழங்கப்பட்டுள்ளது. மிகுந்த அர்ப்பணிப்பாலும் அயராத உழைப்பாலும் உயர்ந்த சாதனைகள் பல படைத்துள்ள, தொழில் துறையின் ஆணிவேராக விளங்கும் தொழில் முனைவோர் பலருக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
உங்கள் அனைவரின் பங்களிப்பாலும், அரசின் சீரிய திட்டங்களாலும், அனைத்துத் துறைகளையும் போல, தொழில்துறையிலும் வெற்றி நடை போட்டு சாதனைகள் பல படைத்து வருகிறது தமிழகம். இன்று அறிவிக்கப்பட்டுள்ள தொழில் கொள்கையின் பலன்களை முழுமையாக பயன்படுத்தி தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்கி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்நேரத்தில் உங்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago