தஞ்சாவூரில் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரத்தில் வனத்துறை அலுவலர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மேலஅலங்கம் அகழி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராஜா(29). இவரது மனைவி புவனேஸ்வரி(26). இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில், பிப்.6-ம்தேதி மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில், கடந்த 13-ம்தேதி மதியம் வீட்டிலிருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்றுவிட்டு வந்தபோது, வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணாததால், வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் மேற்கூரையில் ஒரு குழந்தையை ஒரு குரங்குவைத்திருந்ததாகவும், இதைக்கண்ட புவனேஸ்வரி மற்றும் அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு குரங்கு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மற்றொரு குழந்தை வீட்டின் அருகில் உள்ள கோட்டை அகழியில் இறந்து கிடந்தது. இதனால் அந்தக் குழந்தையையும் குரங்கு தூக்கிச் சென்று குளத்தில் வீசி இருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் சந்தேகித்தனர். இதையடுத்து, அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் திரிந்த 20 குரங்குகளை நேற்று வனத்துறையினர் கூண்டுகளை வைத்துப் பிடித்தனர். அவற்றை திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் கொண்டு சென்றுவிட உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
வனத் துறையினர் சந்தேகம்
இதற்கிடையே, குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் வனத்துறை அலுவலர்கள் சந்தேகங் களை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வனத் துறை அலுவலர் இளையராஜா கூறியதாவது: நம் பகுதியில் உள்ள குரங்கு குட்டிகளின் எடை 400 முதல் 500 கிராம்தான் இருக்கும். குட்டிகளை குரங்கு தூக்கி கொண்டு செல்லும்போது, குட்டியை தாய் குரங்கு பிடித்து இருக்காது. குட்டிதான் தாயை இறுக்கமாக பிடித்து இருக்கும்.
இந்நிலையில், குரங்குகள் தூக்கிச் சென்றதாக கூறப்படும் குழந்தைகளின் எடை 1.5 கிலோ இருக்கும்பட்சத்தில், குரங்குகள் மேற்கூரைஓட்டின் வழியாக இறங்கி, குழந்தையை தூக்கிக்கொண்டு சுமார் 5 அடி உயர சுவர் வழியாக ஏறிச் செல்ல வாய்ப்பு இல்லை.
அப்படி குரங்குகள்தான் குழந்தையை தூக்கிச் சென்றன என்றால், குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளது இவ்விவகாரத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இதுதொடர்பாக, வனத் துறையில் மூத்தவர்களிடம் கேட்டபோது, இச்சம்பவம் அரிதான விஷயம் என கூறுகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவதால், விசாரணையை பல்வேறு கோணத்தில் நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago