அவசரக் கோலத்தில் திறக்கத் தயாராகும் மதுரை ‘பெரியார் பேருந்து நிலையம்’: தரத்தை ஆய்வு செய்யுமா ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு பணிகளை முடியாத நிலையில், அதனை அவசரக் கோலத்தில் திறக்க மாநகராட்சி ஏற்பாடுகள் செய்து வருகிறது.

அதற்கு முன் கட்டுமானத் தரத்தையும், திட்டத்தால் குறிப்பிடப்படி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளதா? என்பதையும் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆலோசனைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை உள்பட 10 நகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நடக்கிறது. மதுரையில் இந்தத் திட்டத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்படுகிறது.

அதன் அருகில் ரூ.41.96 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தில் பேருந்து நிலையத்தில் பழங்காநத்தத்தில் இருந்து வாகனங்கள், பேருந்து நிலையத்திற்குள் வராமல் மேம்பாலம் அமைத்து அதன் வழியாக செல்லும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு யாரோ கொடுத்த நெருக்கடியிலோ அந்த மேம்பாலம் திட்டம் கைவிடப்பட்டது. அதுபோல், ஏராளமான மாற்றங்கள் ஆரம்பத்தில் இருந்த திட்டவடிவமைப்பில் மாற்றப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் கட்டுமானப் பணி தற்போது தாமதமாகுவதால் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பேருந்து நிலையம் இல்லாமல் தினமும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலால் நாள் முழுவதும் பெரியார் பேருந்து நிலையம் பகுதிகள் ஸ்தம்பிக்கிறது. அதனால், பேருந்து நிலையம் கட்டுமானப் பணியை முடித்துத் திறக்க வேண்டும் என்று பல்வேறு பொதுநல அமைப்புகள் வலியுறுத்தின.

அதனால், மாநகராட்சி தற்போது அவசர கோலத்தில் பெரியார் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டுள்ளது. பேருந்து நிலையம், திட்டமிடப்பட்டபோது பொதுமக்களை கவரும் வகையில் மிக பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கும் பேருந்து நிலையத்தைப் பார்க்கும்போது ஏதோ பழைய பேருந்து நிலையம் போலவே உள்ளதாக மதுரைவாசிகள் கூறுகின்றனர்.. கட்டுமானப் பணிகள் அவசரக் கோலத்தல் நடப்பதால் அதன் தரமும் கேள்விக்குறியாகியுள்ளதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

அதனால், பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாநகராட்சி ஆணையாளர், எம்.பி, எம்எல்ஏ-க்கள் உள்ளடக்கிய ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆலோசனைக்குழு நேரடியாக ஆய்வு செய்து அதன் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் எழுந்துள்ளது.

அதுபோல், ஆரம்பத்தில் வரைபடத்தில் குறிப்பிட்டப்படிதான் பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகள் நடக்கிறதா? என்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பேருந்து நிலையத்தில் பல்லடுக்கு வாகனக் காப்பகம் அமைக்கப்படுகிறது. இந்தக் காப்பகம் அமைத்தால் தற்போது போல் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் நெரிசல் ஏற்படாது என்றும், மீனாட்சியம்மன் கோயில் சாமி தரிசனம் செல்வோர் மற்றும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்கச் செல்வோர் வாகனங்களை இங்கு நிறுத்திச் செல்வார்கள் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், பல்லடுக்கில் 1,421 இரு சக்கர வாகனங்களும், 110 நான்கு சக்கர வாகனங்களும் மட்டமே நிறுத்த முடியும். ஆனால், பேருந்து நிலையத்தில் 120 கடைகள் அமைவதால் அந்தக் கடைகளுக்கு வருவோரும், பேருந்து நிலையம் வருவோர் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும்.

அதுவே பற்றாக்குறையாகி அவர்கள் பேருந்து நிலையப் பகுதிகளையும் பார்க்கிங்காக பயன்படுத்தும் நிலை ஏற்படும். அதனால், பெரியார் பேருந்து நிலையத்தில் தற்போது அமையும் பல்லடுக்கு வாகன காப்பகம் போதுமானதாக இல்லை.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் சு.வெங்கடேசன் எம்.பி தலைமையில் திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டியதோடு ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழு கூட்டத்தை கூட்ட வைத்தனர்.

அந்தக் கூட்டத்திலும் எம்.பி.,. சு.வெங்கடேசன், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மீது பல்வேறு சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

ஆனால், தற்போது பெரியார் பேருந்து நிலையம் அவசரக் கோலத்தில் நடக்கும் நிலையில் பேருந்து நிலையம் பணிகள் தரத்தை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் எம்.பி சு.வெங்கடேசனும், திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜனும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அவர்கள் பேருந்து நிலையத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE