அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுகதான் என, முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் கோவை பேரூர் செட்டிப்பாளையத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பிரம்மாண்ட திருமண மேடையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த ஜோடிகளுக்கு அவரவர் மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த விழாவில் முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
"திருமணமானவர்கள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் உயர்வடைவார்கள். தங்கள் வீட்டில் ஒருவருக்கு திருமணம் எப்படி நடைபெறுமோ அப்படி சீர்வரிசை வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெறும். அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமண மேடையே சாட்சி.
தமிழகத்தில் திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் போன்ற திட்டங்களுக்கு மொத்தம் ரூ.6,010 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. உழைக்கும் பெண்களுக்கு இதுவரை 2.98 லட்சம் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்க தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முழுவதும் நிறைவேற்றிய கட்சி அதிமுக. 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால், கடைசிவரை அந்த நிலத்தைக் காட்டவே இல்லை. வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் கட்சி திமுக.
சிறப்பான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதால்தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் அவிநாசி - அத்திக்கடவு திட்ட இரண்டாம் கட்ட விரிவாக்க பணி விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாடு தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதால் தொழில் முனைவோர் தொழில் செய்வதற்காக ஆர்வமாக தமிழகம் வருகின்றனர்".
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. ஜெயலலிதா நடத்திய ஆட்சியை அடிபிறழாமல் அப்படியே நடைமுறைப்படுத்தும் முதல்வராக பழனிசாமி இருக்கிறார். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்படும் வரியானது மத்திய அரசுக்கு செல்கின்றது. இதில், காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் திமுக பெற்றுக் கொடுக்கவில்லை. ஒரு மருத்துவக் கல்லூரியை பெறுவதற்கே அலைய வேண்டி இருக்கும் நிலையில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு பெற்று கொடுத்து இருக்கின்றது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சாதனைகளை தொண்டர்கள் வீடு, வீடாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றுபட்டு உழைத்து ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். மணமக்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்" என்றார்.
ஸ்டாலின் கனவு பலிக்காது
விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "2011 -ல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது கோவை மண். கரோனா காலத்திலும் முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று மக்களை சந்தித்தார். அப்போது வீட்டைவிட்டு மு.க.ஸ்டாலின் வெளியே வரவில்லை.
பயிர்கடன்களை ரத்து செய்து விவசாயிகளின் கோரிக்கையினை இந்த அரசு நிறைவேற்றி இருக்கின்றது. தான் சொல்வதை முதல்வர் அறிவிக்கிறார் என ஸ்டாலின் சொல்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது எதுவுமே செய்யாதவர் ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலினுக்கு ஏதாவது தெரியுமா? இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட உறுதுணையாக இருந்தது திமுக. என்றைக்கும் மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் பின் வழியாக வந்து தலைவர் பதவியை பிடித்தவர் ஸ்டாலின். முதல்வர் பழனிசாமி அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர். அவர் மீண்டும் முதல்வர் ஆவது உறுதி" என்றார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago