சென்னை வந்த பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் கரங்களை தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார். இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒப்புக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? அது என்ன அரசியல் மேடையா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று மாலை, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்துள்ளார். இனி அடிக்கடி வருவார். தேர்தல் வரப்போகிறது. அதனால் வரத்தான் செய்வார்.
காவிரி - குண்டாறு திட்டத்தைப் பிரதமர் தொடக்கி வைப்பார் என்று தமிழக அரசு சொன்னது. இதனைப் பார்த்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிர்ச்சி அடைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
2009-ம் ஆண்டு திமுக அரசால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டம் தான் காவிரி குண்டாறு திட்டம். அதை மறுபடியும் எதற்காகப் பிரதமர் தொடக்கி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டார். பிரதமரையே ஏமாற்றுவதற்கு பழனிசாமி திட்டமிட்டு இருந்தார்.
துரைமுருகன் அறிக்கைக்குப் பிறகு அந்தப் பெயரை நீக்கிவிட்டார்கள். மெட்ரோ திட்டத்தின் விரிவாக்கத்தை தொடக்கி வைத்துள்ளார் பிரதமர். அது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கனவுத் திட்டம்.
இன்றைக்கு சென்னையில் மெட்ரோ ரயில் ஓடுகிறது என்றால் அதற்கு அவர் தான் காரணம். அன்றைய தினம் துணை முதல்வராக இருந்த நான் இப்பணிகளை என்னுடைய நேரடி பார்வையில் அதை செயல்படுத்தினேன். நிதியுதவி பெறுவதற்காக தலைவர் என்னை ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
கருணாநிதி பெயரையோ திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதையோ பிரதமர் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சென்னை மாநகர மக்களுக்கு, தமிழக மக்களுக்கு இது யாரால் வந்தது என்று தெரியும்.
ஆனால் இந்த விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியின் கையையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் கையையும் தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.
வலது பக்கம் பிடித்திருந்ததும் ஊழல் கை! இடது பக்கம் பிடித்திருந்ததும் ஊழல் கை! சென்னை வந்த பிரதமர் ஊழல் கறை படிந்த கரங்களை தூக்கி பிடித்துக் காட்டி இருக்கிறார். இதன் மூலம் பிரதமர் என்ன சொல்கிறார்.
இவர்கள் செய்த தவறுகளுக்கு நானும் பொறுப்பு என்று ஒப்புக் கொள்கிறாரா? நான் சொல்வதைத் தான் இவர்கள் செய்கிறார்கள் என்கிறாரா? என்ன சொல்கிறார் பிரதமர்?
2 பேரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறீர்களா? அது என்ன அரசியல் மேடையா? என்பதுதான் நான் எழுப்பும் கேள்வி. 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருப்பது அதிமுக அந்தக் கட்சியின் முதலவராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
இப்போதைய முதலவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு - உச்ச நீதிமன்ற தடையால் சிபிஐ விசாரணை தடைபட்டுள்ளது. துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
இவை அனைத்தையும் தொகுத்து 97 பக்க ஊழல் புகார் ஆளுநரிடம் ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறோம். இது முதல் பட்டியல் தான். இரண்டாவது பட்டியல் தயாராகி வருகிறது. இன்றைக்கு இந்தியாவிலேயே ஊழல் கட்சி - ஊழல் ஆட்சி என்றால் அது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி தான். ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுக தான்.
இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டே போடலாம். தனது சுயநலத்துக்கான ஆட்சி இது. தங்களது குடும்பத்துக்காக, உறவினர்களுக்காக, பினாமிகளுக்காக அவர்கள் ஆட்சி நடத்துகிறார்களே தவிர மக்களுக்காக நடத்தவில்லை.
திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்துள்ளேன். தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இதனை நான் குறிப்பிட்டேன். இதுபற்றி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டுள்ளார்கள்.
முதல்வர் என்ன சொல்லி இருக்க வேண்டும்? நான் ஊழல் எதுவும் செய்யாதவன், என் மடியில் கனமில்லை, அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும்.
ஸ்டாலின் அமைக்கும் தனி நீதிமன்றத்தால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் பழனிசாமி அப்படிச் சொல்லவில்லை. என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
''ஏற்கெனவே இது பற்றி விசாரிக்க மத்திய அரசே ஒரு தனிநீதிமன்றம் அமைத்துவிட்டதே? ஸ்டாலின் எதற்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்?” என்று கேட்டுள்ளார் பழனிசாமி.
இப்போது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றம் என்பது, இப்போது பதவியில் இருப்பவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மன்றம். தேர்தல் முடிந்தால் பழனிசாமிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகக் கூட இருக்க மாட்டார்கள்.
அதனால் தான் இவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கத்தான் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சொன்னேன். இதுகூட பழனிசாமிக்கு புரியவில்லை. புரியவில்லையா? அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறாரா?”.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago