ஐஐடி பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இதற்காகப் பொதுத் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்தும், நடைமுறைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
“சென்னை ஐஐடி உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற ஐந்து ஐஐடிக்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைப் புறக்கணித்துவிட்டு, பொதுப் பிரிவினரைக் கொண்டு 72.10% இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னை, டெல்லி, மும்பை, கரக்பூர், கான்பூர் ஆகிய 5 நகரங்களில் உள்ள ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் சிவில், எந்திரவியல், மின்னியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், அவர்கள் தேர்வு செய்யப்பட்ட முறை ஆகியவற்றைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று ஆய்வு செய்ததில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
இந்தக் காலத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 19.50% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இது அந்தப் பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டிய 27% இட ஒதுக்கீட்டில் மூன்றில் இரு பங்கு மட்டுமே ஆகும்.
அதேபோல் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட வேண்டிய 15% இட ஒதுக்கீட்டில் பாதிக்கும் குறைவாக 7.30% இடங்களும், பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய 7.50% இட ஒதுக்கீட்டில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவாக 1.20% இடங்களும்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பப்பட வேண்டிய 50.50% இடங்களுக்குப் பதிலாக 72.10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களும் கூட தகுதியின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினரையும் கொண்டு நிரப்பப்படுவதற்கு மாற்றாக, எந்த வரைமுறையும் இல்லாமல் முழுக்க முழுக்க உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்பட்டிருக்கின்றன. இதை விட மோசமான சமூக நீதி சூறையாடல் இருக்க முடியாது.
வழக்கமாக ஐஐடி மாணவர் சேர்க்கையாக இருந்தாலும், ஆசிரியர்கள் நியமனங்களாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததற்கு ஐஐடி நிர்வாகங்கள் சார்பில் கூறப்படும் காரணம் தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்பதே ஆகும். இது அப்பட்டமான பொய் என்பது முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை விவகாரத்தில் உறுதி ஆகியுள்ளது.
முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 27% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமானால், 885 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்க வேண்டும். முனைவர் பட்ட ஆய்வுக்கு 885 பேர் விண்ணப்பித்திருந்தால் அவர்கள் அனைவருக்குமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் மட்டுமே, முனைவர் ஆய்வுக்குத் தகுதியான மாணவர்கள் இல்லை என்ற காரணம் எழ வேண்டும்.
ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட 885 இடங்களுக்கு கிட்டத்தட்ட அதைவிட 30 மடங்கு அதிகமாக 23,549 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களைக் கொண்டு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பொதுப்போட்டிப் பிரிவிலும் கணிசமான இடங்களை வழங்கியிருக்க முடியும். முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நிச்சயமாக அப்படித்தான் நடந்திருக்க முடியும்.
ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் கூடத் தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றால், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கைக்கு அடிப்படைத் தகுதியாகவும், அளவுகோலாகவும் எது இருந்திருக்கக் கூடும் என்பதை எளிதாக யூகித்து விடலாம். பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான மாணவர் சேர்க்கையிலும் இதே அநீதிதான் நடந்திருக்கிறது.
ஐஐடிகளில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை போட்டித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளிப்படையாக நடைபெறுகிறது என்பதால், அதில் மட்டும்தான் ஓரளவு இட ஒதுக்கீடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதைத் தவிர்த்து ஐஐடி பேராசிரியர்கள் நியமனமாக இருந்தாலும், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் அது நான்கு சுவர்களுக்குள், தேர்வுக்குழு என்ற பெயரில் நியமிக்கப்படும் ஒரு சிலரின் விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதால், அதில் இட ஒதுக்கீட்டுக்குச் சிறிதும் மதிப்பளிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
இந்தியா முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் முதல் இப்போது வரை ஒட்டுமொத்தமாக வழங்கப்பட வேண்டிய 49.50% இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக வெறும் 12% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குக் கிடைக்க வேண்டிய சமூக நீதியில் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு ஆகும். பேராசிரியர் நியமனமாக இருந்தாலும், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் அதில் வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால், இவை போன்ற சமூக அநீதிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
எனவே, ஐஐடி பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்; இதற்காக பொதுத் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவை குறித்தும், அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு ஐஐடி நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.
ஐஐடிகளில் நடைபெற்ற சமூக அநீதிகள் குறித்து விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago