பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திராவிடன் அறக்கட்டளை, திராவிடன் சமூக பணியின் இயக்கம், திராவிடன் இதழ் ஆகியவை சார்பில், கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுகவுடன் இணைந்து, 'விடியலை நோக்கி ஓராயிரம் இளைஞர்கள்' திமுகவில் இணையும் விழா, திமுகவுக்கு வாக்களிப்பது ஏன் என்னும் நூல் வெளியீட்டு விழா, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா கோவை அவிநாசி சாலை, கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று (பிப். 13) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலினை வெளியிட்டார். அதை திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஆ.ராசா எம்.பி. பேசும்போது, "இன்றைக்கு இருக்கிற அரசியல் கட்சிகளில் சமூக நீதியை காப்பாற்றக்கூடிய கட்சி திமுக தான். அதிமுக இந்துத்துவா-வுக்கு துணை போகிறது.
மக்களவையில் முன்பு சபாநாயகர் உள்ளே நுழைந்தால், உறுப்பினர்கள் 'வணக்கம்' என்று கூறுவது வழக்கம். ஆனால், தற்போது 'ஜெய் ஸ்ரீராம்' என சபாநாயகரை வரவேற்று கோஷமிடுகின்றனர். அதனால், நாங்கள் 'பெரியார் வாழ்க' என கோஷமிடுகின்றோம்.
நாடு முழுவதும் உள்ள தொகுதிகளை பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி கைப்பற்றினாலும், தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. இதற்கு பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் தான் காரணம்.
ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்று சொல்லி, நமது அடையாளத்தை தவிர்க்கும் வகையில், இந்துத்துவத்தின் பெயரால் மிகப்பெரிய சூழ்ச்சியை இங்கே நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
ஆரியத்துக்கும் திராவிடத்துக்கும் இடையிலான போர் இன்னமும் தொடர்கிறது. திராவிடத்திற்கு ஆதரவு குரல் என்றுமே கொடுப்போம். அனைவருக்கும் கல்வியும், அறிவும் பெற்று தந்த இயக்கமாக திமுக உள்ளது. 1932-ம் ஆண்டுக்கு முன்பு வரை மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்றால், அவர்கள் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும். அதனை மாற்றி அமைத்தது திராவிடம். தற்போது சமஸ்கிருதம் போல் நீட் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. இதனை மாற்றியமைக்க இந்திய துணைக்கண்டத்திலேயே தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும்.
மத்திய அரசு கொள்கையை மாநில அரசிடம் திணிக்க முயல்கிறது. இதனை தடுக்க திமுகவால் மட்டுமே முடியும்" என்றார்.
முன்னதாக, சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேசும்போது, "சமூக நீதி என்பது இப்போது காணாமல் போய்விட்டது. பெரியாரும் அண்ணாவும், கருணாநிதியும் தான் படிக்க வைத்தார்கள் என்பதை மறந்து விட்டார்கள். சாதிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், இன்று மருத்துவர் வீடு, பொறியாளர் வீடு என்று சொல்லும் அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆதிக்க இந்துத்துவத்தை எதிர்த்து, முன்னேற்ற பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டும் தான் முடியும்" என்றார்.
ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், திராவிடன் வெளியீட்டாளர் கோவை பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆயிரம் இளைஞர்கள் ஆ.ராசா எம்.பி. முன்பு, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, "விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, முதல்வர் பழனிசாமியின் அரசு, கடனை ரத்து செய்ய சாத்தியம் இல்லை என பதில் மனுவை தாக்கல் செய்த நிலையில், திடீரென தேர்தல் நேரத்தில் விவசாய கடனை ரத்து செய்துள்ளனர். இதற்கு முழுக் காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் தான். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடனை ரத்து செய்வோம்' என ஸ்டாலின் அறிவித்ததால், முதல்வர் பழனிசாமி ரத்து செய்துள்ளார். விவசாய கடன் ரத்து செய்யப்பட்டதற்கான முழு நன்மையும் திமுகவுக்கே.
தவிர, கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும், திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கை தான். திமுக தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, திமுகவினர் எதை கேட்கிறார்களோ, அவற்றை செய்யக்கூடிய அரசாக, இந்த அதிமுக அரசு உள்ளது. தன் சொந்த புத்தி அடிப்படையில் முதல்வர் பழனிசாமி எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்
கோவையில் 65 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோவை - சத்தி சாலை, 54 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேற்கு புறவழிச்சாலை, 114 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோவை - கரூர் சாலை, 28 கிலோ மீட்டர் தூரம் கொண்ட எல் அன்ட் டி சாலை ஆகிய 4 சாலை மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற அண்மையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் தொகுதி எம்.பி. என்ற அடிப்படையில் நான் வைத்த கோரிக்கைக்கு அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். விரைவில் பணிகள் தொடங்கும்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய சாலை பணிகள் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. பழைய திட்டங்களை கவர்ச்சிக்காக அறிவித்துள்ளனர். வழக்கம் போல், தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட் தான்.
பிரதமர் நரேந்திரமோடியும், பாஜகவும் என்ன கூறினாலும், எதை செய்தாலும், அதை வரவேற்று, நல்ல திட்டம் என பேசக்கூடிய அடிமை அரசாக, முதல்வர் பழனிசாமி செயல்படுகின்றார் என்பதற்கு உதாரணமாக அவர்கள் பட்ஜெட்டுக்கு வரவேற்பு அளித்ததை எடுத்துக் கூறலாம்.
பொதுவாழ்வில் ஈடுபடும் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவது என்பது வேறு. அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமாவது என்பது வேறு. 2ஜி வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனால், ஊழல் குற்றத்துக்காக ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அந்த ஊழலுக்கு இன்னும் பதில் கூற முடியாமல், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்கின்றனர்.
வேலுமணி மீது குற்றச்சாட்டு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதை சிபிசிஐடி விசாரித்து அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறினர். சிபிசிஐடி-யின் அந்த விசாரணை அறிக்கையை நாங்கள் கேட்டாலும், நீதிமன்றம் உத்தரவிட்டாலும் ஓராண்டாக தராமல் சிபிசிஐடி போலீஸார் தாமதப்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகை எந்த விதத்திலும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
சட்டப்பேரவையில் நீட் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட மாட்டாது என பிரதமர் அறிவித்தால், நாங்கள் அவருக்கு பாராட்டு தெரிவிப்போம்.
அதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் விரட்டி அடிப்பார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
எழுவர் விடுதலை தொடர்பான வழக்கில் சட்டப்படி ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதில் அக்கறை இல்லாமல், அதிமுக - பாஜக அரசு ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago