'இந்த ஸ்டாலின் சொல்கிறார், பழனிசாமி செய்கிறார்' என ரஜினி பாணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.13) காலை, கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் - பெரியார் நகர், கலைஞர் திடலில் நடைபெற்ற, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"இன்றைக்கு தமிழ்நாட்டில் முதல்வர் ஒருவர் இருக்கிறார். அவரை இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவர் இன்றைக்கு தேர்தல் நெருங்க நெருங்க புதிது புதிதாக அறிவிப்புகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முன்பு நான் என்ன சொல்கிறேனோ அதை எல்லாம் மறுத்தார். ஆனால், தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் நான் என்ன சொல்கிறேனோ அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
» சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 18 பேர் அடையாளம் தெரிந்தது; ஆண் சடலம் ஒன்று அடையாளம் காணப்படவில்லை
» டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 20 சதவீதம் உயர்வு; கோவை லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
உடனே அவர் என்ன சொல்கிறார் என்றால், 'நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதை ஸ்டாலின் முன்கூட்டியே சொல்லி விடுகிறார்' என்று அவர் சொல்கிறார். அப்படியென்றால் நீங்கள் அரசை வழி நடத்தாதீர்கள். என்னிடம் விட்டு விட்டுச் செல்லுங்கள், இதுதான் நான் சொல்வது.
'என் மனதில் என்ன இருக்கிறதோ அதைத் தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்' என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். அப்படி எந்த மாயமந்திரமும் எனக்குத் தெரியாது.
கரோனா பரவுகிறது என்று முதன்முதலில் சட்டப்பேரவையில் சொன்னவன் இந்த ஸ்டாலின். முதலில் மறுத்த அவர், பிறகு அவையை ஒத்திவைத்தார். முதலில் சொன்னார், வயதானவர்களுக்குதான் அது வரும், நீங்கள் எல்லாம் கவலைப்படாதீர்கள் என்றார்கள். பொதுச்செயலாளர் துரைமுருகன், முகக்கவசம் கொடுங்கள், எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னார். அதைக்கூட கிண்டல் செய்தார்கள். அதெல்லாம் நீரிழிவு நோயாளிகளுக்குதான் வரும். நீங்கள் பயப்படாதீர்கள் என்றார்கள். அனைவருக்கும் பரிசோதனை செய்யச் சொன்னோம். அதெல்லாம் தேவை இல்லை, அது யாருக்கும் வராது, எந்த சாவும் வராது, இது ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொன்னார்கள். இப்போது அதிகம் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடுதான்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதெல்லாம் முடியாது, நிதியில்லை என்று சொன்னார்கள். இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் பொங்கலை முன்னிட்டு 2,500 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். அதையும் முடியாது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு தேர்வுக்கான தேதியை முடிவு செய்து, அதற்குப் பிறகு அதை ரத்து செய்துவிட்டார்கள்.
இ-பாஸ் முறையை ரத்து செய்யச் சொன்னேன். நான் சொன்னதற்குப் பிறகுதான் அவர்கள் ரத்து செய்தார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நான் ஆளுநர் மாளிகையின் முன் போராட்டம் நடத்தினேன்.
விவசாயக் கடன் ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி அன்றைக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி - பொன்னேரி பகுதியில் நான் சொன்னேன். அதற்குப் பிறகு இப்போது தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தினால் இப்போது அதைச் செய்திருக்கிறார்.
ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அதை இப்போது பழனிசாமி செய்திருக்கிறார்.
மக்கள் குறைகளை ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்ப்பேன் என்று சொன்னேன். உடனே அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செல்போனில் தீர்ப்போம் என்று சொல்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செல்போன் கொடுப்பேன் என்று சொன்னார்கள், அதிமுக இதுவரைக்கும் யாருக்காவது செல்போன் கொடுத்து இருக்கிறார்களா? இல்லை. செல்போன் கொடுத்து தீர்த்து வைப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தருமபுரி மாவட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்றபோது, அங்கு அலியாளம் அணைக்கட்டில் இருந்து தூள் செட்டி ஏரி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரும் திட்டம் 4 வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினேன். இப்போது முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அந்தத் திட்டத்தைத் தொடங்கப் போகிறார் என்று இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது.
இப்படி நான் சொல்வதைத்தான் பழனிசாமி செய்கிறார். ஒரு படத்தில் ரஜினிகாந்த், 'ஆண்டவன் சொல்றான், இந்த அருணாச்சலம் செய்றான்' என்று சொல்வார். அதேபோல, இப்போது, 'இந்த ஸ்டாலின் சொல்கிறார், பழனிசாமி செய்கிறார்'. இதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.
விவசாயிகளுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்பது திமுகதான். இன்றும் 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து ஓட்டுப் போட்டது திமுகதான். இன்றைக்கு அதை எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பது திமுக தான்.
பச்சைத் துண்டு போட்டுக்கொண்டால் விவசாயியா? பச்சைத் துரோகிதான் இன்றைக்கு இருக்கும் முதல்வர் பழனிசாமி. விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர். அவர், 'என் குடும்பமே விவசாயக் குடும்பம், நானும் ஒரு விவசாயி' என்று சொல்லுவார். ஒரு ரவுடி தான், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடிதான்' என்று சொல்லிக்கொண்டே இருப்பான். அதேபோல இன்றைக்கு அவர் 'நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
திமுக ஐந்து முறை தமிழகத்தை ஆண்டுள்ளது. அப்போதெல்லாம் மக்களுக்கு என்ன தேவை, மக்களின் கோரிக்கைகள் என்ன, தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை ஏற்படுத்துபவை எவை என்பதை எல்லாம் யோசித்து முடிவுகள் எடுத்தோம். அதை நிறைவேற்றிக் கொடுத்தோம்.
ஆனால், இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கிறது. இது மக்களை மறந்த ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி. மக்களைத் தண்டிக்கும் ஆட்சி. இந்த அதிமுக ஆட்சியை மக்கள் தண்டித்தாக வேண்டும். அதற்காக காலமும் சூழலும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. 'உழைப்பின் கஷ்டம் ஸ்டாலினுக்குப் புரிவதற்கு வாய்ப்பில்லை' என்று பழனிசாமி பேசி இருக்கிறார்.
கருணாநிதி எனக்கு உழைக்கக் கற்றுக் கொடுத்தார். போராட்டம் நடத்தக் கற்றுக் கொடுத்தார். அஞ்சாமல் சிறைக்குச் செல்லக் கற்றுக் கொடுத்தார். சித்ரவதைக்கு பயப்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்தார். மக்கள் எப்போது, எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று பார்க்க வேண்டும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். மக்களின் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும் உங்களில் ஒருவனாக இருக்கக் கற்றுக் கொடுத்தார்.
புயலா, மழையா, வெள்ளமா, நிலச்சரிவா? எங்கே மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்தாலும் முதல் ஆளாக நான் போயிருக்கிறேன். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை இந்த எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் துள்ளத்துடிக்கக் கொன்ற போதும் உடனடியாக நான் சென்றேன். கலவர பூமிக்குச் சென்றேன்.
நீட் தேர்வு காரணமாக தங்களது மருத்துவக் கல்லூரிக் கனவு சிதைந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் இல்லம் சென்றேன். அதிமுகவினர் வைத்த பேனர்களால் விபத்துக்கு உள்ளாகி இறந்துபோன மாணவி வீட்டுக்கு உடனடியாகச் சென்று உதவினேன்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வீதியில் இறங்கி கையெழுத்து வாங்கினேன். வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தினேன். மின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடினோம். காவிரி உரிமை மீட்புக்காக நடைபயணம் சென்றோம். இவை அனைத்துக்கும் மேலாக, கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு உதவி செய்த கரம்தான் இந்த ஸ்டாலினின் கரங்கள். மக்களோடு மக்களாக இருந்தவன்தான் இந்த ஸ்டாலின்.
இந்த ஸ்டாலினுக்கு உழைப்பைப் பற்றி பழனிசாமி கற்றுத் தரவேண்டிய அவசியம் இல்லை. அந்த நிலைமையில் நான் இல்லை.
மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து விளம்பரம் கொடுக்கிறீர்களா? நாளிதழ்களின் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுப்பதால் தலைவராகி விடமுடியுமா?
கோவிட் காலத்தில் கோபுரமாய் உயர்ந்து நின்றோம் என்று விளம்பரம் செய்துள்ளார் பழனிசாமி. தமிழ்நாட்டில் மொத்தம் 8 லட்சத்திற்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டார்கள். 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். இதுதான் கோபுரமாய் உயர்ந்து நிற்பதா?
கோவிட் காலத்திலும் கொள்ளையடித்து கோபுரமாய் உயர்ந்தது முதல்வர் பழனிசாமியாகவோ, அமைச்சர்கள் வேலுமணியோ, விஜயபாஸ்கராகவோ இருக்கலாமே தவிர பொதுமக்கள் அல்ல.
பொதுமக்கள் வாழ்க்கை தரை தாழ்ந்துவிட்டது. தரையை விட ஆழமாகத் தாழ்ந்துவிட்டது. அதுதான் உண்மை. சிறு, குறு தொழில் செய்பவர்கள் வாழ்வாதாரம் இழந்தார்கள். பலருக்கும் வேலை போனது. சிறு தொழில்கள் நடத்தியவர்கள் மூடிவிட்டார்கள். தொழிலை நிறுத்தியவர்களால் தொடங்க முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினர்கள், வாழ்க்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 5,000 கொடுக்க நான் சொன்னேன். காது கேட்காதது போல முதல்வர் இருந்தார். பணமில்லை என்று சொன்னார். ஆனால், கோடிக்கணக்கான பணத்தை கான்ட்ராக்டர்களுக்கு கொட்டிக் கொடுத்துள்ளார். கரோனா காலத்திலும் டெண்டர் முறைகேடுகளைச் செய்தார்கள். கரோனா காலத்தில் வாங்கப்பட்ட அனைத்து மருந்துப் பொருள்களிலும் ஊழல் செய்தார்கள்.
மருந்து தொடங்கி பிளீச்சிங் பவுடர் வரை கொள்ளை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்தார்கள் அல்லவா? அதிலும் ஊழல். அந்தப் பணத்தைக் கூட முழுமையாக விநியோகம் செய்யவில்லை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் சொல்லி இருக்கிறார்கள். இப்படிக் கரோனாவை விட கொடூரமான கொள்ளை அரசாகத்தான் அதிமுக அரசு செயல்பட்டது. இந்தக் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்தை முடித்தாக வேண்டும்.
கொள்ளைக் கூட்டத்தின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதன் பிறகு அமையும் திமுக ஆட்சி, உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக அமையும்".
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago