திமுகவை எதிர்க்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சசிகலா அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை கண்காணிப்பு வளையத்தில் அதிமுக தலைமை கொண்டு வந்துள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து சசிகலா சிறைக்கு செல்ல, 2017 ஆகஸ்டில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அப்போது ஓபிஎஸ் தரப்பின் பிரதான நிபந்தனையே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பது தான்.
இதை முதல்வர் தரப்பு ஏற்றுக் கொண்டதாலேயே, தினகரன் ஓரங்கட்டப்பட்டார். அதன்பின் நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் ஆகியோர் பதவிகள் பறிக்கப்பட்டன. அதிமுகவை நிர்வகிக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் தற்போது கட்சி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், அமமுகவை தொடங்கிய தினகரனால், ஆர்.கே.நகரில் வெற்றி பெற முடிந்ததே தவிர, அதன்பின் நடைபெற்ற தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால், அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு திரும்பினர். சிலர் திமுகவுக்கு சென்று, அங்கு எம்எல்ஏவாகவும் ஆகிவிட்டனர். குறிப்பிட்ட சிலரே தற்போது தினகரனுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் தான், சிறையில் இருந்து கடந்த ஜன.27-ம் தேதி சசிகலா விடுதலையானார். கரோனா காரணமாக தனிமைப்படுத்திக் கொண்ட அவர், பிப்.8-ம் தேதி சென்னை திரும்பினார். அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக தரப்பில் காவல்துறையில் புகார் அளித்திருந்த போதும், சென்னை வரும்வரை அதிமுக கொடியை பயன்படுத்தினார். இடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
அத்துடன், அவர் சென்னை வந்ததும் அதிமுகவை கைப்பற்ற முயற்சி எடுப்பார் என்றும் கூறப்பட்டது. இதுதவிர, திமுகவை எதிர்க்க இணைந்து செயல்பட வரவேண்டும் என்று சசிகலாவும், தினகரனும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், சசிகலா வருகையின் போது இணைந்த ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் யாரும் இதுவரை சசிகலாவையோ, தினகரனையோ சந்திக்கவில்லை. அவ்வாறு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களும், இணைந்தவர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர்.
ஏற்கெனவே, சசிகலா அதிமுகவில் இணைக்கப்படமாட்டார் என்று உறுதியாக தெரிவித்துவரும் முதல்வர் பழனிசாமி, தினகரனை நம்பிச் சென்ற 18 எம்எல்ஏக்கள் என்ன ஆனார்கள் என்பதை தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டு வருகிறார். இருப்பினும், அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை இழுக்க தினகரன் தரப்பு முயற்சி எடுத்து வருவதாக அதிமுக தலைமைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்தே, தற்போது அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக தலைமையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சசிகலா தரப்பை இணைப்பதற்கு வாயப்பே இல்லை என்று கூறி வரும் முதல்வர் பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதால், தற்போது அதிமுக நிர்வாகிகள் தரப்பிலும் அமைதி தொடர்கிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘ நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புவது நல்ல தலைமையை தான். தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சசிகலா தரப்பை இணைப்பதன் மூலம் அடுத்த முறை ஆட்சியமைக்க இருக்கும் வாய்ப்பையும் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான், தொண்டர்கள் விருப்பமும் கூட. இதை தலைமையும் உணர்ந்துள்ளது. இருப்பினும், சசிகலா தரப்பினரின் ஆசை வார்த்தைக்கு யாரும் மயங்கிவிடக்கூடாது என்பதில் அதிமுக தலைமை மிகவும் உறுதியாக இருக்கிறது. எனவே, நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அத்துடன்,சசிகலா குறித்து யாரும் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago