மேரி கட்டிடம் திறப்பு விழாவைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்நோக்கத்துடன் நிறுத்தியுள்ளார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் இன்று (பிப்.12 ) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடற்கரைச் சாலையில் இருந்த நம்முடைய 'மேரி கட்டிடம்' சுனாமியால் பாதித்த காரணத்தால் பராமரிப்புப் பணியின்போது இடிந்து விழுந்தது. உலக வங்கி நிதி உதவியுடன் புதிய மேரி கட்டிடம் கட்ட எங்களுடைய ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது பணிகள் முடிந்து இன்றைய தேதி கட்டிடத்தைத் திறக்க முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இதில் எனது பெயர், அனைத்து அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் பெயர்கள் போடப்பட்டன. எல்லா மாநிலங்களிலும் கட்டிடங்கள், சாலைகள் திறப்பு விழாவுக்கு யாரை அழைப்பது என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் முடிவாகும். யாரும் தங்களை அழைக்க வேண்டும் என்று கூறமுடியாது.
திடீரென நேற்று (பிப். 11) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, கடற்கரை பாதுகாப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியில் மேரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி அவர்களின் ஒப்புதலோடு விழாவை நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். இதில், மத்திய அரசின் நிதி இல்லை. மாநில அரசு கேட்டதன் அடிப்படையில், மத்திய அரசு பரிந்துரை செய்து உலக வங்கி கொடுத்த நிதி மூலமாக மேரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் மானியம் கொடுக்கிறது. அதேபோல், உலக வங்கியும் எல்லா மாநிலங்களுக்கும் நிதி வழங்குகிறது.
இதன் மூலம் திட்டத்தை நடைமுறைப்படுத்தி திறப்பு விழா நடத்தும்போது மத்திய அரசு அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ எந்த மாநிலத்திலும் அழைப்பதில்லை. ஆனால், தன்னை அழைக்கவில்லை என்று வேண்டுமென்றே உள்நோக்கத்தோடும், காழ்ப்புணர்ச்சியோடும் திறப்பு விழாவை நிறுத்தியுள்ளார். இதில், மத்திய அரசின் நிதி எங்கு உள்ளது என்பதை மக்களுக்கு கிரண்பேடி விளக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். அதில், மத்திய அரசின் மானியமும் வருகிறது. அப்படி என்றால், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் அதிகாரிகள் வந்துதான் ஊதியம் கொடுக்க வேண்டுமா? இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆளுநர் திட்டமிட்டுச் செயல்படுகிறார். அவர் கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை.
ஆளுநரின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல. ஆளுநர் விரும்பினால் இவ்விழாவில் பங்கேற்கலாம் என்று நானும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளரும் கூறியுள்ளோம். ஆனால், தேர்தல் வரும் சமயத்தில், காலதாமதம் செய்து திறப்பு விழாவை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். மத்திய அரசுக்குச் சம்பந்தமில்லாத ஒரு திட்டத்துக்கு அதிகாரிகளை அழைக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.
ஆகவே, ஆளுநரின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் திட்டத்துக்கு மத்தியிலிருந்து எந்த நிதி வந்துள்ளது என்பதை கிரண்பேடி சொல்ல வேண்டும். இதில், மத்திய அரசின் நிதி ஒரு பைசா கூட கிடையாது. இந்தத் திட்டத்துக்கு ஆளுநர் தடை போட எவ்வித உரிமையும் இல்லை".
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
அப்போது, முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விசாரணை நடத்த தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர் நாராயணசாமி, "யார் விசாரித்தாலும் எனக்குப் பிரச்சினை கிடையாது. கடந்த ஆட்சி மாதிரி எங்களுடைய ஆட்சி கிடையாது. சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்களிடம் காசோலை கொடுக்கப்படுகிறது. இது சம்பந்தமாக எந்தவொரு விசாரணையும் வைக்கலாம்.
ஆளுநர் மாளிகைக்கு ரூ.7.8 கோடி ஒதுக்கியுள்ளோம். அந்த நிதியில் என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து முதலில் பகிரங்க விசாரணை நடத்துவோம். அதன் பிறகு, மற்ற விசாரணைக்கு ஆளுநர் வரட்டும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago