தமிழக மீனவர்கள் படுகொலை; இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - வைகோ கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. இலங்கைக் கடற்படைக் கப்பல் மோதித் தகர்த்த மீனவர்களின் படகில், எத்தனை பேர் இறந்தனர்?

2. அதற்கு, இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன? கடுமையான எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்தீர்களா?

3. திட்டமிட்டு, தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த அவர்களிடம் இருந்து, இழப்பீட்டுத் தொகை ஏதும் கோரி இருக்கின்றீர்களா?

4. அவ்வாறு இருந்தால், அதுகுறித்த தகவல்கள்;

5. இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நேராவண்ணம் தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள், இந்திய மீனவர்களைக் கைது செய்வது, பிடித்துக் கொண்டுபோய் சித்திரவதைகள் செய்வதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக".

ஆகிய 5 கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (பிப்.11) அளித்த விளக்கம்:

"நமக்குக் கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி, 2021 ஜனவரி 18ஆம் நாள், இலங்கைக் கடற்படைக் கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுக்கும் இடையே நடந்த மோதலில், நான்கு மீனவர்கள் இறந்தனர்.

இது தொடர்பாக, நமது கடுமையான கண்டனத்தை, இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்திருக்கின்றார். அதேபோல, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றோம்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்: கோப்புப் படம்.

உயிர்களை இழந்தது குறித்த நமது வேதனையைத் தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றோம். இதுகுறித்து, இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே, இதற்கு முன்பு பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளை நினைவூட்டி, அவற்றைக் கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காதவண்ணம் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து, அரசு ஆகக்கூடுதலான அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் யாரேனும் சிறை பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்தால், உடனடியாக அதுகுறித்து, இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்; தூதரகங்களின் வழியாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இலங்கைப் பிரதமருடன், இந்தியப் பிரதமர் நடத்திய இருதரப்புக் காணொலி சந்திப்பின்போது, இந்தப் பிரச்சினையை எழுப்பியிருக்கின்றோம்.

2021 ஜனவரி 5, 6, 7 ஆகிய மூன்று நாள்கள், நான் இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது, இலங்கை அரசின் மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து மிக விரிவாகப் பேசினேன்.

இரண்டுக்கு இரண்டு (2+2) என்ற அடிப்படையில், 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் விளைவாக, இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள், டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினர். இரு தரப்பினரும் இணைந்து செயல்படுகின்ற வகையில், ஒரு கூட்டுப் பணிக்குழு (Joint Working Group) அமைத்து, மீனவர்களின் பிரச்சினைகளை விரிவாக அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அந்தப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம், 2020 டிசம்பர் 30ஆம் நாள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கடல் எல்லை குறித்த மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டது".

இவ்வாறு, அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

இதனிடையே இந்தக் கேள்வி தொடர்பாக, நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, அண்மையில் கொல்லப்பட்ட நான்கு பேரைத் தவிர்த்து, அதற்கு முன்பு, இலங்கைக் கடற்படை, 245 மீனவர்களைக் கொன்று விட்டது, இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்டார்.

அதற்கு விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வைகோ கேள்விக்கு எழுத்து மூலம் அளித்திருக்கின்ற விளக்கத்தை எடுத்துக் கூறினார். எந்தக் காரணத்தைக் கொண்டும், இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என, கடுமையாக எச்சரித்து இருப்பதாகக் கூறினார்.

பிஜூ ஜனதா தளம் எம்.பி. சஸ்மித் பத்ரா பேசும்போது, "குழுவின் நான்காவது கூட்டம், டிசம்பர் மாதம் 30ஆம் நாள் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றதாக, உங்கள் விளக்கத்தில் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்; ஆனால், உறுப்பினர் வைகோ எழுப்பி இருக்கின்ற கேள்வியில், 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்காக, எடுத்த நடவடிக்கைகளைக் கேட்டு இருக்கின்றார். அதுகுறித்து, விளக்குங்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அமைச்சர் ஜெய்சங்கர், "கடலோரக் காவல்படையினர் பேசி வருகின்றார்கள். தூதரகங்களின் வழியாகவும் தொடர்ந்து பேசி வருகின்றோம். நடவடிக்கை எடுப்பதற்குப் பல கட்டுப்பாடுகள், வரையறைகள் உள்ளன. அதற்கு உட்பட்டுத்தான் நாம் செயல்பட முடியும்" என்றார்.

தொடர்ந்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், "இது எதிர்பாராமல் நடந்த படகுகள் மோதல் என இலங்கை கூறுகின்றது. ஆனால், இது முதன்முறை நடந்த நிகழ்வு அல்ல. இதற்கு முன்பு, எண்ணற்ற முறை, இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. வழக்கமாகத் தொடர்ந்து நடக்கின்றது. இலங்கைக் கடற்படை, நமது மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி இருக்கின்றது; சுட்டுக்கொன்று இருக்கின்றது. படகுகளைப் பறித்துக்கொண்டார்கள். வெயிலிலும், மழையிலும் மீனவர்களை நிற்கவைத்துக் கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள். என்னுடைய கேள்வி, பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, இலங்கை அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், "இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும், ஆகக் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றோம். கடைசியாக ஒன்பது மீனவர்கள் அவர்களுடைய பிடியில் இருந்தார்கள். அவர்களை விடுவித்துவிட்டோம்.

அவர்களுடைய பிடியில், முன்பு 173 படகுகள் இருந்தன. இப்போது 62 படகுகள் உள்ளன. அவற்றுள் 36 படகுகள் விடுவிக்கப்படும். அதுகுறித்த பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, எந்த அளவுக்கு மீட்க முடியுமோ, அவற்றை மீட்போம்; எஞ்சிய படகுகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவோம்" என விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்