சிங்கம்புணரியில் கரோனாவால் முடங்கிய தென்னை நார் கயிறு தயாரிப்புப் பணி: ஓராண்டிற்குப் பிறகு தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கரோனா ஊரடங்கால் முடங்கிய கயிறு தயாரிப்புப் பணியை ஓராண்டிற்குப் பிறகு தொழிலாளர்கள் தொடங்கினர்.

சிங்கம்புணரி, பிரான்மலை, வேங்கைப்பட்டி, சுக்காம்பட்டி, சேவல்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தென்னை நார் கயிறு தயாரிப்பு தொழில் செய்து வருகின்றனர்.

இதற்கு தேவையான தென்னை நாரை சிங்கம்புணரி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.

இங்கு 2 பிரி முதல் 4 பிரி கயிறு வரையும், தேர் வடக்கயிறுயும் தயாராகிறது. அதை நெற்கதிர் கட்டுவது முதல் கப்பல் கட்டுவது வரை பயன்படுத்துகின்றனர். அவை மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. சிங்கம்புணரியில் 10 ஆண்டுகளுக்கு முன், 100-க்கும் மேற்பட்ட கயிறு தயாரிப்பு நிலையங்கள் இருந்தன.

பிளாஸ்டிக் கயிறு வருகை, ஏற்றுமதி அனுமதியால் தென்னை நார்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் கயிறு தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. இதனால் படிப்படியாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

பாரம்பரியமாக குடிசைத் தொழிலாக செய்தவர்கள் மட்டுமே தொடர்ந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் தினமும் 3 டன் அளவிற்கு கயிறுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கரோனாவால் கயிறு தயாரிப்பு பணி முடங்கியது.

பலரும் வேலைவாய்ப்பின்றி வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் ஓராண்டிற்கு பிறகு மீண்டும் சிங்கம்புணரியல் கயிறு தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கம்புணரி நல்லதம்பி கூறியதாவது: கரோனாவால் முடங்கிய இத்தொழிலை மீண்டும் தற்போது தான் தொடங்கியுள்ளோம். முதலில் தேர் வடம் தயாரிக்க ஆர்டர் வந்துள்ளது. 62 அடி நீளம், ஒரு அடி சுற்றளவில் தயாரிக்கிறோம். தென்னை நார் விலை உயர்வு, வேலையாட்களின் கூலி உயர்வால் வடம் தயாரிப்பில் பெரிதாக லாபம் இல்லை. இருந்தாலும் தேர் வடம் என்பதால் லாபத்தை பார்க்காமல் தயாரித்து கொடுக்கிறோம். கயிறு தயாரிப்பு தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE