திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி: வீட்டு மக்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

By செய்திப்பிரிவு

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி, வீட்டு மக்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 11) திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:

"திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் அரசு மீது வீண் பழி சுமத்தி, அவதூறாகப் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் இந்தத் தொகுதிக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால், எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதாவைத் தொடர்ந்து இன்று வரை இந்தத் தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குத் தேவையான நன்மைகள் கிடைத்து வருகின்றன.

ஸ்டாலின் தற்போது ஊர் ஊராகச் சென்று திண்ணையில் 'பெட்சீட்' போட்டு அமர்ந்து கொண்டு, அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டு, மனுவை வாங்கிப் பெட்டியில் போட்டு, சீல் வைத்து, இவர் முதல்வரான பிறகு, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பாராம்.

திமுக ஆட்சி காலத்தில், ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தார். அப்போதெல்லாம், நாட்டு மக்களின் பிரச்சினைகள் அவருக்குத் தெரியவில்லை, அப்போது, நாட்டு மக்களை மறந்துவிட்டார். தற்போது மக்களை ஏமாற்றும் நாடகத்தை தினந்தோறும் அரங்கேற்றி வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, இதேபோல், ஊர் ஊராகச் சென்று மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்கள் எல்லாம் என்னவாயிற்று? கோரிக்கை மனுக்களை பெற்றால், அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஆட்சியிலே இருக்கின்றீர்களா என்று மக்கள் கேட்கின்றனர்.

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குத் தேவையான குடிநீரை 100 நாட்களில் கொடுக்க முடியுமா? ஒரு திட்டத்தை நிறைவேற்ற படிப்படியாக பல்வேறு நிலைகளை சரியாகத் திட்டமிட்டுத்தான் நிறைவேற்ற முடியும். ஒரு திரைப்படம் வெளியானால் 100 நாள் ஓடுவதைப்போல் நினைத்துக் கொண்டு, ஸ்டாலின் 100 நாளில் நிறைவேற்றுவாராம். அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை, அந்தப் பெட்டியை உடைக்கப் போவதுமில்லை. ஸ்டாலின், எப்படி நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு, பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். அதற்கு உதவி மையம் எண் 1100 வழங்கியிருக்கிறோம். இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியும். அதன் பிறகு மனு கொடுக்கும் வேலையே மக்களுக்கு இருக்காது. தற்போது யூடியூப், ட்விட்டர், வாட்ஸ் அப், முகநூல் என விஞ்ஞானமயமாகியுள்ள உலகத்தில், ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதுபோல் பெட்டியில் மனு போட்டு பரிகாரம் செய்வதை தொடங்குகிறார்.

ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் எந்தத் திட்டத்தையும் உங்களால் நிறைவேற்றவே முடியாது. நீங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்க முடியும். ஆனால், செயல்படுத்துகின்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம். 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட திமுக கூட்டணியினர், நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினைக்காக ஏதாவது குரல் கொடுத்தீர்களா? திருப்பூர் தொகுதிக்கு புதிய, புதிய தொழில் வருவதற்கு குரல் கொடுத்தீர்களா? ஒன்றும் கிடையாது. ஆனால், நாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் வைத்துக் கொண்டே அத்முக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்திருக்கிறோம். மேலும், ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்த அரசு அதிமுக அரசு.

மத்திய அரசின் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தேவையான நிதிகளை பெற்று தமிழகத்தில் புதிய சாலைகளை நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் சிறப்பான சாலைகளை அமைத்த முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான். உங்களுடைய ஆட்சியில் அப்படி இருந்ததா? உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான் தொழிற்சாலைகள் வரும், தொழிற்சாலைகள் அதிகமாக வந்தால்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே, உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதற்கு அதிமுக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நான் என் தலைமையில் நடத்தினேன். அதில் 3 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, இன்றைக்கு 27 சதவிகித திட்டங்கள் அதாவது, 81 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த 304 தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரும்போது, நேரடியாக 5.5 லட்சம் நபர்களுக்கு வேலை கிடைக்கும், 5 லட்சம் நபர்களுக்கு மறைமுகமாக வேலை கிடைக்கும். உங்கள் ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தீர்களா? இல்லையே.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று ஒரு தவறான, அவதூறான செய்தியை ஸ்டாலின் பரப்பிக் கொண்டு வருகிறார். திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். ஒரு அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று. அதிமுக அரசு மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, மக்கள் அன்பைப் பெற்று மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது. சீர்மிகு திட்டத்தின் கீழ் ரூபாய் 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நொய்யல் நதியில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 18 அணைக்கட்டுகள், 28 குளங்களை புதுப்பித்து நவீனப்படுத்துவதற்குண்டான பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.

அதிமுக அரசாங்கத்தைப் பொறுத்தவரை மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற அரசு, இது உங்களுடைய அரசு, எங்களுடைய அரசு அல்ல, உங்களுடைய அரசு. நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அந்த உத்தரவை நிறைவேற்றுகின்ற அரசு தான் அதிமுக அரசாங்கம். ஆனால், ஸ்டாலின் அப்படியில்லை. மூன்று மாதத்தில் நான் 'சி.எம்.' ஆகிவிடுவேன் என்று ஸ்டாலின் போகிற பக்கமெல்லாம் பேசுகிறார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்று மாதத்தில் எப்படி 'சி.எம்.' ஆகமுடியும்? மக்கள் ஓட்டு போட்டால்தானே 'சி.எம்.' ஆக முடியும். தேர்தல் வர வேண்டும், தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும், அந்த வாக்கை எண்ண வேண்டும், அதில் எந்தக் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிதான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், கடையில் விற்கும் பொருள் மாதிரி போனவுடன் பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு போகலாமென்று ஸ்டாலின் பார்க்கிறார். இந்த ஏமாற்று வேலையெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. ஏனென்றால், அதிமுக அரசு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

கரோனா தொற்று ஏற்பட்ட கடுமையான சோதனையான காலகட்டத்தில் கூட, அதிமுக அரசு , தொழிலாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 8 மாதகாலமாக விலையில்லா அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு கொடுத்து வாழ வைத்த அரசு அதிமுக அரசு. அந்த குடும்பங்களுக்கு 1,000 ரூபாயும் கொடுத்தோம். சென்ற தைப்பொங்கலன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பும் கொடுத்தோம். இந்த தைப்பொங்கலன்று, எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் கொடுத்து, முழு கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பு அதிமுக அரசு கொடுத்தது. உங்களுடைய ஆட்சியில் ஒரு 100 ரூபாய் கொடுத்திருப்பீர்களா? எம்ஜிஆர் இருக்கும்போது விலையில்லா வேட்டி, சேலை கொடுத்தார். ஜெயலலிதா பொங்கல் தொகுப்பை அறிமுகப்படுத்தினார். அந்த இருபெரும் தலைவர்களின் வழியில் வந்த எங்களுடைய அரசு ஒரே ஆண்டில் 4,500 ரூபாய் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசு. துன்பம் வருகின்றபோதெல்லாம் மக்களுக்கு துணை நின்று காப்பாற்றுகின்ற ஒரே அரசாங்கம் அதிமுக அரசாங்கம்தான்.

இவையெல்லாம் சாதனையில்லையா? இது ஸ்டாலினுக்கு தெரியவில்லை,. நாட்டில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஏனென்றால், அந்தக் கட்சி ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்கு இல்லை, வீட்டு மக்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக. ஆகவே, அந்தக் கட்சியைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதிமுக உங்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. எம்ஜிஆர் தனக்காக வாழவில்லை. நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவரால் உருவாக்கபட்ட கட்சி அதிமுக. ஜெயலலிதா நாட்டு மக்களுக்காக உழைத்து தன் இறுதி மூச்சு வரை மக்களுக்கு பணியாற்றியவர். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தெய்வங்கள் நமக்கு கிடைத்த கொடை. அந்த இருபெரும் தெய்வங்களுடைய கனவை எங்களுடைய அரசு நனவாக்கிக் கொண்டிருக்கிறது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்