காவிரி - குண்டாறு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்பட உள்ள நிலையில், இத்திட்டம் திமுக ஆட்சியில், 2009 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டம் என, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (பிப். 11) வெளியிட்ட அறிக்கை:
"வேறு மாநிலங்களில் ஒடும் ஆற்றின் மிகை நீரை அண்டை மாநிலங்களுடன் இணைப்பை ஏற்படுத்துவது குறித்துதான், பல அரசியல் தலைவர்களும் நீரியல் நிபுணர்களும் பல காலமாக பேசிக் கொண்டு வருகிறார்கள். இந்த கருத்தோட்டம் ஓர் தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது சிந்தனையில் ஓர் கருத்து உருவானது. பல மாநிலங்களிடையே ஓடும் நதிகளை இணைக்கும் திட்டம் வரும்போது வரட்டும். நாம் ஏன், ஓர் மாநிலத்திற்குள் ஓடும் மிகை நீரை கடலுக்குள் கொண்டு செலுத்தும் நதிகளை ஏன் வறண்ட நிலையில்உள்ள ஆற்றுப் படுகைகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என்கின்ற சிந்தனைதான் அது!
» மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவரானார் கமல்ஹாசன்: முதல்வர் வேட்பாளராகவும் பொதுக்குழு தீர்மானம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றுப்படுகை நீரை வெள்ளாற்று படுகைக்கு கொண்டு சென்று, அதன்மூலம் வீராணம் ஏரியை நிரப்பிய சோழ மன்னர்களின் அரிய, பெரிய திட்டத்தையும், முன்மாதிரி திட்டமாகவும் எடுத்துக் காட்டினார்.
பெரும் மழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிவரும் மிகை நீரை வீணாகக் கடலில் கொண்டு சேர்க்கும், மூன்று ஆறுகளை முதல் திட்டத்திற்க எடுத்துக் கொண்டார். இப்படி வீணாகும் நீரைத்தேக்கி, வறண்ட பகுதியில் உள்ள ஆற்றுப்படுகைகளுக்கு திருப்பினால், அந்தப் பகுதிகளுக்கு, குடிநீருக்கும் விவசாயத்திற்கம் பயன்படும் என்பதையும் அன்றைய முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டினார்.
ஒரு மாநிலத்திற்குள் ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டம் குறித்தும், அதற்காக ஆகும் செலவு குறித்தும், தலைவர் கருணாநிதி, 25.9.2007 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 53-வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் விளக்கி உரையாற்றிவிட்டு, இந்த முன்னோடி திட்டத்திற்கு மத்திய அரசின் உதவியையும் கோரினார்.
இதே கருத்iதை 11.2.2008 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 2008-2009-க்கான திட்டக்கமிஷன் கூட்டத்திலும், நிதிஉதவி கோரி உரையாற்றினார்.
இத்திட்டம் குறித்து அன்றைய முதல்வர் கருணாநிதி, அப்போது இருந்த மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சருக்கு இத்திட்டம் குறித்தும் நிதியுதவி கோரியும் கடிதம் எழுதினார்.
22.2.2008 அன்று மத்திய அமைச்சரும் திட்ட கமிஷன் ஒப்புதலோடு, நீர்வள ஆதார அமைச்சரும் ஒப்புதல் தருவதாக முதல்வர் கருணாநிதிக்கு ஓர் கடிதம் எழுதினார்.
இத்தகைய பின்னணிகளை கொண்டதுதான் முதல்வர் கருணாநிதி அறிவித்த மூன்று திட்டங்கள்:
1) தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம்
2) காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்
3) தென்பென்ணை - செய்யாறு இணைப்பு திட்டம்
இந்த மூன்று திட்டங்களில் முதல்கட்டமாக,
1) தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் மற்றும்
2) காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் ஆகிய இவ்விரு திட்டங்களை முதல்கட்டாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக தொடங்கவும் ஆணையிட்டு நிதியும் ஒதுக்கீடு செய்துவிட்டார்.
தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. என்றைக்கோ முடித்திருக்க வேண்டிய அந்தப் பணிகள் அதிமுக ஆட்சியில் சுணக்கம் கண்டுள்ளது.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதல்கட்டமாக, மாயனூர் அருகே காவிரி ஆற்றில் ஓர் புதிய கதவணை அமைக்கும் பணிக்கும் சுமார் 165 கோடி ரூபாயை அன்றைய முதல்வர் கருணாநிதி ஒதுக்கித்தர, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த நான் அந்தப் பணியை செய்து முடித்தேன்.
இந்த கதவணையின் மேற்கு பகுதியிலிருந்து, புதிய கால்வாய் அமைத்து, காவிரி ஆற்றில் வரும் வெள்ள நீரை, அக்கினியாறு - தெற்கு வெள்ளாறு - மணிமுத்தாறு - வைகை ஆறு - குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு திருப்பவும் திட்டமிடப்பட்டது. இதன்மூலம் 20 ஆயிரத்து 250 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும் என்று கணக்கிடப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களும் திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால், என்றைக்கோ முடிந்திருக்கும். தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என்பதால், அதிமுக அரசு இதில் அக்கறை காட்டவில்லை.
ஆனால், திட்டத்தையும் கைவிட முடியாமல், அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதம் வரும்போதெல்லாம், இந்த திட்டம் நிலுவையில் இருப்பதாக,
2011-12-ல் பக்கம்-26
2012-13-ல் பக்கம்-31
2019-20-ல் பக்கம்-135
2020-21-ல் பக்கம்-127
ஆகிய பக்கங்களில் குறிப்பிட்டுவிட்டு, நிலம் கையப்படுத்த 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள்.
காவிரி - குண்டாறு - தாமிரபரணி - கருமேனியாறு திட்டங்கள் பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது, 2009 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டு, நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும், இந்த நீண்ட நெடிய வரலாறு படைத்த திட்டங்களில் ஒன்றான காவிரி - குண்டாறு திட்டத்தை, 'வருகின்ற 14 ஆம் தேதி பிரதமர் மோடி, தொடங்கி வைப்பார்' என்று இன்று பத்திரிகையில் செய்தி வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டேன்.
திமுக ஆட்சியில், 2009 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த திட்டம், ஆட்சி மாற்றத்தால், அதிமுக ஆட்சியிலும் மெத்தனமாக நடைபெற்று வரும் ஒரு திட்டத்தை, இன்று பிரதமர் தொடங்கி வைப்பார் என்று எடப்பாடி பழனிசாமி அரசு ஏற்பாடு செய்வது கடைந்தெடுத்த அரசியல் மோசடி.
தமிழ்நாட்டு மக்களை பத்து ஆண்டுகளாக ஏமாற்றி வரும், அதிமுக அரசு, இன்று பிரதமரையே ஏமாற்றப் பார்க்கிறது.
எடப்பாடி பழனிசாமி அரசு ஏமாற்ற பார்க்கிறது என்றால், பிரதமர் எப்படி ஏமாறுகிறார் என்பதுதான் எனக்கு ஆச்சர்யம்?
பிரதமர் ஏமாறலாமா?".
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago