செயற்கைக்கோள், ஜிபிஎஸ் கருவி என நவீன வசதிகளுடன் மீன்பிடிக்கும் காலத்தில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்றி பாரம்பரியத்தை மறக்காமல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சிலர் கூடு வைத்து மீன்பிடிக்கின்றனர்.
ஆயிரம் கிலோ மீட்டர் நீள கடற்கரையைக் கொண்டது தமிழகம். அதனால் மாநிலத்தில் மீன்பிடி தொழில் முக்கிய இடம் பிடித்துள்ளது. மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் அன்னியச் செலாவணி கிடைக்க தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் தோற்றுவிக்கப்பட்ட முதல் தேசிய காப்பகம் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினக் காப்பகம். மன்னார் வளைகுடா கடல் பகுதி ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 10,500 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளது. இதில் பவளப்பாறைகள் கொண்ட 21 தீவுகள் சுமார் 560 சதுர கி.மீ. பகுதி மட்டும் தேசிய காப்பகமாக உள்ளது. இதில் பெரும் பகுதி ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் அடங்கியுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிப்பு, பாசி எடுப்பு, சங்கு குளிப்பு, முத்துக்குளிப்பு அதிக அளவில் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் வல்லம், வத்தை எனப்படும் நாட்டுப் படகுகள், இன்ஜின் பொருத்திய நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க டிஸ்கோ, விளைமீன் வலையை பயன்படுத்தி மீன், நண்டு பிடிக்க நண்டு வலையும், சிங்கி இறால் பிடிக்க தனி வலையும், கணவாய் மீன் பிடிக்க தூண்டில்களும் பயன் படுத்துகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கோ, மீன் இனப் பெருக்கத்துக்கோ பாதிப்பில்லை.
நாட்டுப்படகு மீனவர்கள் வலைகளை கண்டுபிடிப்பதற்கு முன் கூடு வைத்து மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக் கணக் கான மீனவர்கள் தற்போதும் கூடு வைத்து மீன்பிடிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக் கரை, ஏர்வாடி அருகே மாரியம்மன் நகர், சடையன் முனியன்வலசை, பி.எம்.வலசை, எம்.கே.வலசை உட்பட சில கடற்கரை கிராமங்களில் மட்டும் கூடு வைத்து மீன் பிடிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
கூடு வைத்து மீன்பிடிப்பு
பனைவேர், பனை ஈக்கி, நாட்டு உடை மர குச்சி, இரும்புக்கம்பி கொண்டு செவ்வக வடிவில் 3 அடி நீளம் முதல் 6 அடி நீளம் வரை உள்ள கூடுகள் செய்யப்படுகிறது. இதில் ஒரு முகம், 2 முகம், 3 முகம் என்ற அளவில் கூடுகள் செய்யப்படுகின்றன. முகம் என்றால் மீன் உள்ளே செல்லும் வழி. இதன் வழியாக உள்ளே செல்லும் மீன் வெளியே வரமுடியாது.
மீனவர்கள் வந்து எடுக்கும் வரை அந்த மீன் அந்தக் கூட்டி லேயே உயிருடன் இருக்கும். ஒரு கூடு தயாரிக்க ரூ.2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை செலவாகிறது. இக்கூடை படகில் சென்று தீவுப்பகுதிகள், ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் பவளப்பாறைகளுக்கு இடையே வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். அடுத்த நாள் சென்று அதில் உள்ள மீனை எடுத்து வருகின்றனர்.
கூட்டில் ஓரா, கிலா மீன், நகரை, களவாய், விளை மீன் ஆகியவை அதிகளவில் மாட்டிக் கொள்ளும். இதில் சிறிய மீன் முதல் அதிகபட்சம் 750 கிராம் எடை யுள்ள மீன்கள் சிக்கும். பெரிய எடையுள்ள மீன்கள் சிக்காது. இந்த மீன்பிடிப்பில் ஒரு மீனவருக்கு ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது.
இது குறித்து ஏர்வாடி மாரியம்மன் நகர் மீனவர் குமார் கூறியதாவது:
நூல் வலை, நைலான் வலை கண்டுபிடிப்பதற்கு முன் பல நூற் றாண்டுகளுக்கு முன்பு கூடுவைத்து மீன்பிடிப்பது முக்கிய தொழிலாக இருந்துள்ளது. இதன் மூலம் மீன் இனத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இந்த தொழிலில் குறைந்த வருமானம் கிடைத்தாலும், பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago