கிருபானந்த வாரியார் இறந்தபோது மரியாதை செலுத்தாத அதிமுகவினர், அவருக்கு அரசு விழா என்று அறிவித்தால் மக்கள் ஏமாந்து ஓட்டு போடுவார்கள் என நினைப்பதாகத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் காட்பாடி தொகுதி வடக்கு திமுக தேர்தல் பணிக்குழுக் கூட்டம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
''கிருபானந்த வாரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுதான் முதல்வருக்கு யாரோ ஒருவர் சொல்லி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்கள்.
கிருபானந்த வாரியார் மறைந்தபோது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் வந்ததும் திமுக தலைவர் கருணாநிதி சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் ‘ஞானப்பழம் ஒன்று முதிர்ந்து, உதிர்ந்து விட்டது’ என்று அறிக்கை வெளியிட்டார்.
அப்போது, நான் எம்எல்ஏ இல்லை. என்னை அழைத்த தலைவர் கருணாநிதி, காங்கேயநல்லூரில் வாரியாரின் உடல் அடக்கம் செய்வதால் உடன் இருக்கும்படி தெரிவித்தார்.
காங்கேயநல்லூரில் வாரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முக்கியமான நபர்கள் என்றால் அது குமரிஅனந்தன், கமலா திரையரங்க உரிமையாளர் சிதம்பரம்தான். அடுத்தது நான். வாரியார் உடலுக்கு அதிமுக சார்பில் சென்னையிலும், வேலூரிலும் யாரும் வந்து மரியாதை செலுத்தவில்லை. அப்போது, காட்பாடி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவரோ ஏன் ஒரு அதிமுக பிரமுகர் கூட வாரியார் உடலுக்கு மரியாதை செலுத்தவில்லை.
அவரது உடலை நான்கு தெருவிலும் சுமந்து சென்றோம். உடலைக் குழியில் இறக்கி மண்ணைப் போட்டு மூடும் வரை ஒரு மகனாக உடன் இருந்தேன். சமாதி கட்டிய பிறகு கருணாநிதியை அழைத்து வந்து வாரியாரின் சமாதியைத் திறக்க வைத்து மரியாதை செலுத்தினேன். அதன் பிறகு எத்தனையோ தேர்தல் வந்தும் அதிமுகவினர் மரியாதை செலுத்தவில்லை. இப்போது, அரசு விழா என்று அறிவித்தால் மக்கள் ஏமாந்து ஓட்டு போடுவார்கள் என யாரோ முதல்வருக்குச் சொல்லி இருப்பார்கள். அவருக்கு உரிய மரியாதை செலுத்தாதது அதிமுக அரசுதான்.
நான் படித்த வரலாற்றில், நானறிந்த அரசியலில் இதுவரை தண்டனை பெற்று உள்ளே இருந்து வெளியே வர ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டு வெளியே வருபவருக்கு வரலாறு காணாத வரவேற்பு தருவது இங்குதான். நாளைய தினம் தியாகத்துக்கும் கொள்ளைக் கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாது. ஊழல் புரிந்து சேர்த்த சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பதில் எனக்கோ என் கட்சிக்கோ எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. அந்த வகையில் வரவேற்கத்தக்கதுதான்.
7 பேர் விடுதலை தொடர்பாக எங்களது கேபினெட் கூட்டத்தில் நடந்ததை முதல்வர் காட்டி இருக்கலாமே. அதைச் சென்னையில் சொல்லாமல் ஏன் இங்கு வந்து சொல்கிறார். எடப்பாடியார் இருக்கும் அதிமுகவுக்கு நாங்கள் எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் வீட்டுக்குள் உட்கார்ந்து எந்தக் கருத்தும் சொல்லாமல் தவ வாழ்க்கை மேற்கொள்ளும் ஓபிஎஸ் ஏதாவது சதி செய்கிறாரா? என்பதைக் காவல் துறையை விட்டு முதல்வர்தான் பார்க்க வேண்டும்.
பீஞ்சமந்தை மலைப்பாதை அமைக்க எங்கள் மாவட்டச் செயலாளர் நந்தகுமார், பெரும் தவம் இருக்கிறார். அதே வேலையாக ஒவ்வொரு அதிகாரியாக எத்தனை அலுவலகங்களில் ஏறி இறங்கி இருப்பார் என்று எனக்குத் தெரியும்.''
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago