களத்தில் ஒற்றுமையாக நின்று திமுகவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும்: தொண்டர்களுக்கு தினகரன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சசிகலாவின் வரவேற்பை தமிழகத்தின் பெருவிழாவாக மாற்றியவர்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் எனவும், களத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று திமுகவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும் எனவும், அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (பிப். 10) தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"இந்திய அரசியல் வரலாறு இதுவரை காணாத வரவேற்பை சசிகலாவுக்கு வழங்கிய நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்குப் போய்ச் சேர்ந்த நிம்மதியோடும் மனநிறைவோடும் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

பிப்ரவரி 8 ஆம் தேதி முதலே பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்தபடியே இருக்கின்றன. 'வழிநெடுக தொடர்ந்து இவ்வளவு நேரம் ஓரிடத்தில் கூட உற்சாகம் குறையாத உணர்வுப்பூர்வமான வரவேற்பை வரலாறு பார்த்ததேயில்லை', 'ஆளும்தரப்பில் இருந்து அத்தனை முனைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களையும், போடப்பட்ட தடைகளையும் மீறி இந்த வரலாற்றுச் சாதனை எவ்வாறு நிகழ்ந்தது?', 'லட்சக்கணக்கானோர் திரண்டும் சிறு வன்முறை கூட இல்லாமல் ராணுவக்கட்டுப்பாட்டோடு இருந்ததெல்லாம் எப்படி சாத்தியம்?', 'கூட்டம் கூட்டுவதே தொண்டர்களைத் தூண்டிவிட்டு, வன்முறையை நிகழ்த்தி, பொதுச்சொத்துகளைச் சூறையாடி, மக்களை அச்சுறுத்தி, பலத்தைக் காண்பிக்கத்தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தினீர்கள்?' என்றெல்லாம் மாற்றுமுகாம்களில் இருப்பவர்கள், ஊடகத்துறையினர், உயர் அதிகாரிகள் எனப் பலரும் வியப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அத்தனைக்கும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களான நீங்கள்தான் காரணம் என்பதையும், இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உங்களைத்தான் சேர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு பதிலாக கூறி வருகிறேன்.

ஆமாம்…'திருவிழா கோலம் பூண்டு சசிகலாவை வரவேற்போம்' என்ற அன்பு வேண்டுகோளை அட்சரம் பிசகாமல் மெய்ப்பித்து, 'வெறும் திருவிழா அல்ல; தமிழகத்தின் பெருவிழா' என்று நடத்தி காண்பித்தவர்கள் நீங்கள்தானே! ஆறேழு மணி நேரத்தில் பயணித்து வரவேண்டிய தூரத்தைக் கடப்பதற்கு ஒரு நாள் முழுக்க ஆகிவிடும் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில், மணிக்கணக்கில் காத்திருந்த சோர்வு எந்த இடத்திலும் உங்கள் முகத்தில் கொஞ்சமும் இல்லையே!

அதிலும் பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து, தமிழகத்தின் மூலை, முடுக்கில் இருந்தெல்லாம் திரண்டு வந்து, பழங்காலத்தில் படைகள் முகாமிடுவதைப் போல முதல் நாளிலிருந்து தங்கி, டீக்கடைகள் கூட இல்லாத இடங்களில் கட்டுச்சோற்றைச் சாப்பிட்டும், சாலையோரங்களில் அடுப்பு மூட்டி உப்புமா, கிச்சடி செய்து பசியாறிவிட்டும் இரண்டு நாட்களாக காத்திருந்த தங்களின் உண்மையான அன்பினை வழிநெடுக பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனேன்.

உலக வரலாற்றில் எதனோடும் ஒப்பிட முடியாத பாசத்தை உங்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ட போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கித்தான் போயின.

எண்ணிலடங்காத இடையூறுகளுக்கும், அதிகாரம் கொண்டு உருவாக்கப்பட்ட தடைகளுக்கும் இடையில் சசிகலாவைக் கண்டவுடன் உங்களின் முகங்களில் ஏற்பட்ட மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் காண கண் கோடி வேண்டியிருந்தது.

'நாங்கெளல்லாம் உண்மையின் பக்கமும், தியாகத்தின் பக்கமும் நிற்கிற ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள்' என்று எத்தனையோ முறை நெஞ்சு நிமிர்த்தி பேசியிருக்கிறேன். அது, துளியும் பிசகாத உண்மையிலும் உண்மை என்பதை ஒவ்வொரு கணமும் நீங்கள் நிரூபித்துக் காட்டியதை எண்ணியெண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

லட்சக்கணக்கில் கூடிய உங்களை எல்லாம் ஒவ்வோர் இடத்திலும் தளபதிகளைப் போல வழிநடத்திய என் பேரன்புக்குரிய தலைமைக்கழக நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வார்டு, வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளில் இருக்கும் சார்பு அணிகளின் நிர்வாகிகளையும் பாராட்டி மகிழ்கிறேன்.

பல இடங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர், சிறுமிகள் என மகிழ்ச்சி பொங்க சசிகலாவை வரவேற்ற அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. அதே நேரத்தில், எந்த இடத்திலாவது பொதுமக்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிகாரத்தில் இருப்போரின் ஆட்டத்திற்கு ஏற்றபடி ஆடிய ஒரு சில அதிகாரிகளைத்தவிர, வெயிலிலும், குளிரிலும் நின்று நமக்கு பாதுகாப்பு அளித்து, போக்குவரத்தை ஒழுங்கு செய்து தந்து, நம்முடைய உண்மையான உணர்வுகளைப் புரிந்து நடந்து கொண்ட அனைத்து காவல்துறை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'இது தொடக்கம்தான்; இதே உணர்வை களத்தில் காண்பித்து, நாம் அனைவரும் ஒற்றுமையோடு நின்று, ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சிலரின் சுயநலத்தால், குறுகிய புத்தியால் திமுக எனும் தீயசக்தி மீண்டும் எழுந்துவிடுவதைத் தடுப்பதிலும், ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்திற்கு அளித்திடுவதிலும் மட்டுமே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்காக அளவிட முடியாத தியாகங்களைப் புரிந்த சசிகலாவையும், உண்மைத் தொண்டர்களோடு நிற்பதால் என்னையும், உச்சக்கட்ட பதற்றத்திலுள்ள ஒரு சிலர் மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பேசுவதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, நம் எதிரியை, தமிழ்நாட்டு மக்களின் எதிரியை, களத்தில் வீழ்த்துவதே உங்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

சத்தியப்போராட்டத்தில் நமது வெற்றியை நாளைய சரித்திரம் பேசட்டும்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்