திமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 10) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
"தலைவர் கருணாநிதியுடன் உலகளாவிய தலைவர்கள் உரையாடிய கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் நின்று, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர்த் தியாகிகள் நினைவு நாளன்று, 'மு.க.ஸ்டாலின் எனும் நான்...' என்கிற உறுதிமொழியுடன், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய பயணம் தொடர்பான, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத் திட்டத்தை ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிட்டேன்.
இந்தப் பயணத்தில், ஒவ்வொரு தொகுதி மக்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளை மனுக்களாகப் பெற்று, திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் அந்தக் குறைகளுக்கு, பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்பதையும், இதற்காக ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு, அது நேரடியாக என் பொறுப்பில் இருக்கும் என்பதையும் 25.01.2021 அன்று உறுதிமொழியாக வழங்கினேன்.
'நான்' அளித்த இந்த உறுதிமொழி, 'நாம்' அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கையில்தான்! அதனை 'உங்களில் ஒருவன்' கடிதம் வாயிலாகவும் தலைவர் கருணாநிதியின் தொண்டர்களாம் உங்களிடம் தெரிவித்தேன். 'வெட்டி வா என்றால் கட்டி வருகிற பட்டாளம்' என்று தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதுபோல, திமுகவின் தீரமிகு செயல்வீரர்களான நீங்கள் அளித்த ஒத்துழைப்பால், ஒருங்கிணைப்பால், சிறப்பான ஏற்பாடுகளால் இரண்டு கட்டங்களாக இதுவரை 71 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.
முதல் கட்டத்தில் முதன்முதலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். அதற்கான ஒப்புகைச் சீட்டும் திமுகவின் சார்பில் வழங்கப்பட்டது. அந்த மனுக்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, அதன் சாவியை நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என்பதை மக்கள் முன், பெருத்த ஆரவாரத்திற்கிடையே அறிவித்தேன். ஆட்சிக்கு வந்ததும், பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல் 100 நாட்களில் இந்தக் குறைகள் தீர்க்கப்படும் என்ற உறுதியினை உளமார வழங்கினேன்.
அதனை வரவேற்று அனைவரும் கையொலி எழுப்பி ஆர்ப்பரித்த போது, அந்த மக்களில் சிலர், தங்கள் குறைகளை நேரடியாக விளக்கிடும் வகையில் பேசினர். பட்டா, ஓய்வூதியம், அரசுத் திட்டங்கள் வழியிலான உதவித்தொகை, நிவாரணத் தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, மருத்துவமனை வசதி என அவர்கள் வைத்த கோரிக்கைகள் பெரும்பாலானவை அடிப்படைக் கோரிக்கைகளே. அவற்றைக்கூட பத்தாண்டுகால அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பது அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது. அடுத்து வரும் திமுக ஆட்சி நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் அந்த மக்களிடம் வெளிப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியைக் கண்டு அதிர்ந்தது ஆளுந்தரப்பு. எதிர்க்கட்சியிடம் இத்தனை கோரிக்கை மனுக்களா? ஆட்சி மாற்றத்தை மக்கள் உறுதி செய்துவிட்டார்களா என்ற பதைபதைப்பில் முதல்வர் பழனிசாமி என் மீது அநாகரிகமான பாய்ச்சலைத் தொடங்கினார்.
4 ஆண்டுகாலம் அடிமை ஆட்சி நடத்தி, மக்களைப் பற்றிக் கவலைப்படாத பழனிசாமி அரசு, திமுக தொகுதிவாரியாகக் குறை கேட்கிறது என்றதும், செல்போனில் குறைகளைத் தெரிவித்தால் நிவர்த்தி செய்யப்படும் என ஆளுநர் உரை வாயிலாக வெளிப்படுத்தியது.
2016 தேர்தலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்ப அட்டைக்கு ஒரு செல்போன் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. செல்போனே கொடுக்காமல், செல்போன் வழியே குறை சொல்லுங்கள் என்று சொல்பவர் பழனிசாமிதான்.
திமுக எப்போதுமே தலைவர் கருணாநிதி வழியில், 'சொன்னதைச் செய்வோம்-செய்வதைச் சொல்வோம்' என்பதில் உறுதியாக இருக்கின்ற மக்கள் இயக்கம். அதனால்தான் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.எழிலரசி என்ற பெண் தன் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் வெடிப்பினால் தனது வீடு சிதிலமடைந்து, தனது தாயார் இறந்துவிட்டதை எடுத்துக்கூறி, அரசாங்கத்திடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், திமுகவை நம்பி இங்கே மனு அளித்துள்ளேன் என்றார். அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற, ஆட்சிக்கு வந்து 100 நாள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. மாவட்ட திமுக நிர்வாகிகள் மூலம் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தேன்.
நான் அளித்த உறுதிமொழியை நேரலை வாயிலாகவும், செய்தித்தாள்கள் வாயிலாகவும் அறிந்த பிறகு, அதிமுக அரசு அவசர அவசரமாக அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு நிவாரண உதவியை வழங்கியது. திமுகவிடம் சொன்னால்தான் அதிமுக செய்யும் என்பதைத் தமிழக மக்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். அதை வெளிப்படையாகவும் பேசி வருகிறார்கள்.
இதனைப் பொறுக்க முடியாத அதிமுக, தனது ஐ.டி. விங் மூலமாக பொய்ப் பரப்புரை செய்தது. ஏற்கெனவே நிவாரணம் பெற்றுவிட்ட பிறகு, மனு கொடுக்கச் செய்து திமுக அரசியல் செய்கிறது என்பதாக அவர்கள் பொய்யை அவிழ்த்துவிட்டனர். நான், அடுத்து நடந்த நிகழ்விலேயே, அந்தப் பெண் எப்போது மனு அளித்தார் என்பதையும், திமுகவிடம் மனு அளித்தபோது, உறுதிமொழி வழங்கியதையும் அதன் பிறகே அதிமுக அரசு நிவாரணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறது என்பதையும் தேதிவாரியாக வெளியிட்டு, சவாலுக்கு அழைத்தேன். அதன்பிறகு, அதிமுகவினர் வேறு பக்கம் போய்விட்டார்கள்.
நிவாரணம் கோரிய அந்தப் பெண்ணின் தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால் அதற்கான ஓய்வூதியத்தை அவரது தாயார் பெற்று வந்தார். அதனால், நிராதரவான அந்தக் குடும்பத்திற்கு ராணுவத்தின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு.
அதுபோலவே, கேஸ் சிலிண்டர் வெடிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பதால் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடமும் நேரில் கடிதம் வழங்கி, உரிய இழப்பீட்டினை அந்தக் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, மனுக்கள் மீதான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது திமுக என்பதற்கு இவை சான்றாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளை உள்ளடக்கிய நிகழ்வின்போது, குமரி மகாசபை அமைப்பினர் கன்னியாகுமரியில் பசுமைத்தட விமான நிலையத்தை அமைத்திட வலியுறுத்தி 2012 முதல் மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும், இதுவரை பரிசீலிக்கப்படாத இந்தக் கோரிக்கையை திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும் மனு அளித்தனர்.
அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் வாயிலாக உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் எதிர்பார்ப்பது தங்களின் குறைகளை முதலில் அக்கறையுடன் காது கொடுத்து கேட்பதற்கான ஆட்களைத்தான். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கேளாக் காதினராக, பாரா முகத்துடன் இருந்து வருவதால், மக்களின் நம்பிக்கைக்குரியதாக திமுக இருக்கிறது. அதனால்தான், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புடன் கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்கள். அவற்றில், ஆவன செய்யக் கூடியவற்றை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே செயல்படுத்திட முயல்கிறோம்.
விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் ஆனையூரைச் சேர்ந்த ஆதரவற்ற கைம்பெண் பாண்டிதேவி தனது மாற்றுத்திறனாளி மகனுடன் நேரில் வந்து, தனக்கு உதவி செய்திடுமாறு கோரிக்கை மனு அளித்து, தன் நிலை குறித்து வேதனையும் கண்ணீருமாக விளக்கிப் பேசினார்.
அவர் குரலைக் கேட்டு கலங்கிய நான், '100 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனடி உதவி செய்யப்படும்' என உறுதி அளித்தேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நமது நடைமுறை. அதன்படி, அடுத்த இரண்டு நாட்களில் அதாவது, பிப்ரவரி 9-ம் தேதியன்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, என்னுடைய அன்பான ஆணையினை ஏற்று, திமுகவின் சார்பில் பாண்டிதேவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை நேரில் வழங்கினார்.
'ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் பெட்டியில் போட்டு பூட்டி வைத்துக் கொள்கிறார். ஏமாற்றுகிறார்' என்று அப்பட்டமாகப் பொய் சொல்லும் முதல்வர் பழனிசாமி தன் கண் போன போக்கிலே கால் போக அலையட்டும். நாம் என்றும் போல மக்களுடன் தொடர்ந்து கவனமாகப் பயணிப்போம். நாம் எதைச் சொல்கிறோமோ அதைத்தான் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
கரோனா காலத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியதிலிருந்து, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததிலிருந்து ஒவ்வொன்றிலும் திமுக சொன்னபோது மறுத்து, எகத்தாளம் பேசி ஏளனம் செய்த பழனிசாமி அரசு, பிறகு ஒவ்வொன்றையும் நாம் சொன்னபடியே நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானது.
விவசாயிகளின் பெருஞ்சுமையான கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நாமும் தோழமைக் கட்சியினரும் கூறியபோது மறுத்தவர்தான் பழனிசாமி. நீதிமன்றம் சொன்னபோதும் ஏற்கவில்லை. இப்போது தேர்தல் வருகிறது என்றதும் கூட்டுறவுக் கடன் ரத்து என அறிவிக்கிறார். இது யாரால் நிகழ்ந்தது என்பது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரியும். நாம் ஆட்சிக்கு வந்ததும்தான், விவசாயிகளின் துயர் முழுமையாகத் துடைக்கப்படும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
தங்கள் உரிமைக்காகப் போராடிய ஆசிரியர்கள், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்திப் போராடிய இளைஞர்கள் மீது அபாண்டமான வழக்குகளைப் போட்ட அரசுதான் அதிமுக அரசு. இத்தனை ஆண்டுகள் அவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கி, காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலையவிட்டு, இப்போது தேர்தல் பயத்தால் வழக்குகள் வாபஸ் என அறிவிக்கிறது அரசு.
ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்குகள் இன்னமும் நீடிக்கின்றன என்பதை நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற பொதுமக்கள் வேதனையுடன் எடுத்துக் கூறினார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர்களைப் பறித்துவிட்டு, டி.வி. பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற நவீன நீரோ மன்னன் பழனிசாமி அறிவிப்பது அனைத்துமே மோசடி நாடகம்.
அதிமுகவின் மோசடிகள் அனைத்தையும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் பொதுமக்கள் வேதனையுடன் எடுத்துரைக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கதர் துறைக்குப் பொறுப்பு வகித்தும் அங்கு கதர்-கிராம கைத்தொழில் செய்வோர் பெருந்துயரத்தில் இருப்பதைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொன்னார்கள்.
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அதிகரித்து வரும் அதிமுக ஆட்சியை அகற்றி, திமுக ஆட்சி அமையும்போது தங்கள் பகுதிக்கு மகளிர் கல்லூரி அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் ஒலித்தன. நெசவாளர்களின் துயர் துடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பழனிசாமி அரசிடம் முறையிட முடியாத நிலையில், அதனை என்னிடம் கோரிக்கை மனுவாகக் கொடுத்திருக்கிறார்கள். விவசாயிகள் பலர் தங்கள் விளைச்சலுக்குரிய பலன் கிடைக்காததை எடுத்துரைத்தனர்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட்டவனான என்னிடம், அதன் விரிவாக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் எடுத்துரைத்தனர். உரிய அறிவிப்பு இன்றி, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழைகளின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி வீடற்றவர்களாக்கிவிட்ட இந்த ஆட்சியாளர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் எனக் கைக்குழந்தைகளோடு நிகழ்வுக்கு வந்து கண்ணீருடன் நிலைமையைச் சொன்ன பெண்மணிகளின் குரல் இன்னமும் பதற வைக்கிறது.
ஆயிரமாயிரம் பிரச்சினைகள், லட்சக்கணக்கான கோரிக்கைகள் இவற்றை முன்வைத்த கோடிக்கணக்கான மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கிறது திமுக. அந்த நம்பிக்கையை நிறைவேற்றிட நாம் மேலும் கடுமையாக உழைத்திட வேண்டும். கவனமாக உழைத்திட வேண்டும். ஒன்றிணைந்து உழைத்திட வேண்டும். ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும்.
இரண்டு கட்டப் பயணங்கள் நிறைவுற்ற நிலையில், மூன்றாவது கட்டமாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பயணத்தை நாளை மறுநாள் (பிப். 12) அன்று தொடங்குகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கிறேன். அவர்களின் குரல் கேட்டு, குறை அறிந்து, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றுவதற்கான பயணம் இது.
தலைவர் கருணாநிதியின் இல்லத்தின் முன் அறிவிக்கப்பட்ட இந்த செயல்திட்டம், வெற்றிக்கனியாக விளைந்து, அமையவிருக்கும் திமுக ஆட்சியைத் தலைவர் கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை இந்தப் பயணம் ஓயாது.
உங்களில் ஒருவனான நான், தொண்டர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையால் மூன்றாம் கட்டப் பயணத்தைத் தொடங்குகிறேன். தமிழக மக்கள் திமுகவின் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக!".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago