சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் பேரவை உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, 2017-ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், பேரவை உரிமைக் குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்எல்ஏக்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
» மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்; கோரிக்கைகளை நிறைவேற்றுக: தினகரன்
» காங்கிரஸ் பாதையில் வழுவாமல் நடந்த சிவாஜியின் மகன் பாஜகவில் இணையலாமா?- காங்கிரஸ் கலைப்பிரிவு கேள்வி
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு செப்டம்பர் 7-ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்கும் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கிய செப்டம்பர் 14-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த புதிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன் திமுக தரப்பில் செப்.16 அன்று முறையீடு செய்யப்பட்டது. வழக்கு செப்.17 அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆகியோரும், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 4-ல் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து இன்று (பிப். 10) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டப்பேரவைக்குக் கொண்டுசென்று காண்பித்தோம். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள்.
முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம்.
இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது!
குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்!".
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago