சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்; திமுக உறுப்பினர்களுக்கு எதிரான உரிமைக்குழு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் ரத்து

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் குட்கா பொருட்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் பேரவை உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

2013-ம் ஆண்டிலேயே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெளிப்படையாகச் சந்தையில் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரும் வகையில், அவற்றை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

தடை செய்யப்பட்ட பொருட்களைப் பேரவைக்குள் கொண்டுவந்தது பேரவையின் உரிமையை மீறிய செயல் என்பதால் பேரவை உரிமைக் குழுவிற்குப் பேரவைத் தலைவர் தனபால் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையில் விசாரணை நடத்துவதற்காக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான பேரவை உரிமைக் குழு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 23 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாகக் கூறி அதன் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. எனினும் தவறுகளைக் களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக் குழு கூடி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் புதிதாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்த நிலையில், இடைக்காலத் தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.

அப்போது நடந்த வாத, பிரதிவாத விவரம் வருமாறு:

சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் அரசின் மூத்த சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி ஆஜராகி, “சட்டப்பேரவைக்கு என்று ஒரு மரபு உள்ள நிலையில், முன் அனுமதி எதுவும் பெறாமல், திமுக எம்எல்ஏக்கள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை உள்ளே கொண்டுவந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்குக் குறைவு ஏற்பட்டது இல்லை. எனவே, பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ள உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியதாக திமுக உறுப்பினர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல” என்று வாதிட்டார்.

உரிமைக் குழு சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கெனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமைக் குழு சார்பில் புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிமைக் குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட குட்கா பொருளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியதற்கு எனச் சுட்டிக்காட்டி இருந்து.

தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளைக் காண்பித்ததற்காக எனத் திருத்தப்பட்டுள்ளது. பேரவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக் குழுவை விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரிலேயே தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்தப் பொருட்களை கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு பதிலளித்த பேரவை உரிமைக் குழு தரப்பு, “உரிமை எது? உரிமை மீறல் என்பதற்கு ஏதும் நாடாளுமன்றத்தாலோ, சட்டப்பேரவையாலோ வரையறை செய்யப்படவில்லை. மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுகின்றன.

வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்பொழுது புகை பிடிக்கக் கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல்தான் சட்டப்பேரவை நடவடிக்கையும் பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர். இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்.

சபாநாயகர் உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக் குழு அதன் முடிவைப் பேரவையில் தாக்கல் செய்யும். அதன் பின்னர் பேரவைதான் இதில் இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிவித்து, பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்குத் தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும். தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை” என வாதிடப்பட்டது.

திமுக தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தரப்பில் “உரிமைக் குழு அனுப்பிய முதல் நோட்டீஸைத் தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தது. தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை பொருத்திப் பார்க்க வேண்டும்.

உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக் குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிமைக் குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு அது உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் எனப் பெயருக்குத் திருத்தம் செய்துள்ளனர்.

உரிமைக் குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக தலைவர் ஸ்டாலின் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமைக் குழுவில் இருந்து தாங்களாகவே ஓபிஎஸ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிசம்பர் 4-ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்குகளில் இன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என நேற்று அறிவித்திருந்த நிலையில், நீதிபதி அளித்த தீர்ப்பில், இரண்டாவது நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்