தொகுதிப் பங்கீடு குறித்து ஆரம்பகட்ட பேச்சைக் கூட தொடங்காததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வியூகம் தெரியாமல் கூட்டணி கட்சிகள் தவித்து வருகின்றன. 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் கடந்த ஜனவரி 29 முதல் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உருவான திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய 10 கட்சிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் பல கட்டப் பேச்சுக்குப் பிறகு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையைக் கூட திமுக தலைமை இன்னும் தொடங்கவில்லை. இதனால் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வியூகம் தெரியாமல் கூட்டணி கட்சிகள் தவித்து வருகின்றன. தமிழக காங்கிரஸ் சார்பில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, முன்னாள் மத்திய அமைச்சர் பள்ளம் ராஜூ, மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ராவத் ஆகியோரை கடந்த ஜனவரி 6-ம் தேதி காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. ஒரு மாதம் கடந்தும் அவர்கள் சென்னை வந்து திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “வழக்கத்துக்கு மாறாக தேர்தல் பங்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். திமுகவையும் சேர்த்து கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. முன்கூட்டியே பேச்சுவார்த்தையை தொடங்கினால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வரும். கடைசி நேரத்தில் என்றால் ஒருசில தொகுதிகள் குறைந்தாலும் கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளும் என்று திமுக நினைக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் மனக்கசப்பு அதிகமானால் தேர்தல் பணிகளைப் பாதிக்கும் என்பதையும் திமுக தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
முந்தைய தேர்தல்களைப்போல தொகுதிப் பங்கீடு பேச்சை தொடங்குவதில் என்ன சிக்கல் என்று திமுக நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, 1971-ல் கருணாநிதி தலைமையில் முதல் முறையாக தேர்தலைச் சந்தித்தபோது 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் வென்றது. அதுபோல தற்போது 203 தொகுதிகளில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்றாலும் 180 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். கூட்டணியில் 10 கட்சிகள் இருப்பதால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது தெரியாமல் திமுக தலைமை தவித்து வருகிறது என்பதே உண்மை" என்றனர்.
காங்கிரஸுக்கு 25, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா 6 தொகுதிகள் என்று 24, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் என்று 4, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என்ற 2 தொகுதிகளை ஒதுக்க முதலில் திமுக திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2016 தேர்தலில் ஒதுக்கிய 41-க்கு குறையக் கூடாது என்று ராகுல் காந்தி உறுதியுடன் கூறிவிட்டதாகவும், அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் மட்டுமல்லாது மற்ற கூட்டணி கட்சிகளும் பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸுக்கு 32, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 7, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா 6, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 2, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 என்று கூட்டணி கட்சிகளுக்கு 64 தொகுதிகளை ஒதுக்கி விட்டு 170 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருப்பதால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக விரும்புவதாகவும் கூறப்படுகிறது. திமுகவுக்காக கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளைச் செய்து வரும் பிரசாந்த் கிஷோரின ஐ-பேக் நிறுவனத்தின் ஆலோசனையின்படி இதனை செயல்படுத்த திமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago