விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மதுரையில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று 2-ம் நாள் தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அதில் செல்லூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் புதூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:
''மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. ஆனால், 10 ஆண்டுகளாக மதுரையில் சாலைகளே போடப்படவில்லை என்பது தெரிகிறது. மதுரையில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களைக் கனிமொழி பார்க்க வேண்டும் என செல்லூர் ராஜூ அழைத்தார். இதை நம்பி வந்து பார்த்த போதுதான் எந்தத் திட்டமும் செயல்படவில்லை எனத் தெரிந்தது. எதையும் செயல்படுத்தாத ஆட்சிதான் இங்கு நடக்கிறது. ரூ.1,500 கோடியில் பல மேம்பாலங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம் மதுரை அரசு மருத்துவமனை மேம்பாடு எனப் பல திட்டங்களை நிறைவேற்றியது திமுக.
» தமிழகத்தில் மேலும் 246 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர் உதயகுமார் தகவல்
» டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியானது: 3,752 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி
ஜம்மு, மங்கள்புரி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி. எந்தப் பணியும் நடக்கவில்லை. இதனால்தான் தமிழக முதல்வர் கே.பழனிசாமியை அடிக்கல் நாயகன் என்று அழைக்கிறேன். இதைக் கேட்டு அவர் வருத்தப்படுகிறார். எனது பிரச்சாரப் பயணத்தை முதல்வர் தொகுதியான எடப்பாடியில்தான் தொடங்கினேன். அங்கு எதுவும் செய்யவில்லை என்றேன். உடனே இந்தந்தத் திட்டங்களுக்கெல்லாம் அடிக்கல் நாட்டியுள்ளேன் என முதல்வர் பட்டியல் கொடுத்தார். அடிக்கல் மட்டும்தான் நாட்டுகிறீர்கள், எதையும் செய்து முடிப்பதில்லை என்றுதான் நானும் கூறுகிறேன்.
மதுரையில் தமிழ்த் தாய்க்குச் சிலை அமைப்பதாகக் கூறினர். இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. ஆனால், திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் சொன்னபடி சிலை அமைத்தவர் கருணாநிதி. இதுதான் திமுகவுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் சொல்வதைச் செய்வோம். அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதையும் செய்ய மாட்டார்கள்.
வண்ணத் தொலைக்காட்சியைக் கருணாநிதி வழங்கினார். இன்றுவரை வேலை செய்கிறது. இதன் பின்னர் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டரை மக்கள் தூக்கிப் போட்டுவிட்டனர். ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனைச் சொன்னபடி தள்ளுபடி செய்து சாதித்தார் கருணாநிதி. கல்விக் கடனை ரத்து செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி வழியில் அனைத்து வாக்குறுதிகளையும் ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டுவார். மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது திமுக ஆட்சி வந்ததும் 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறும் ஸ்டாலின் அதை நிச்சயம் செய்து காட்டுவார் என நான் உறுதியளிக்கிறேன்.
ரூ.1000 கோடி செலவிட்டு தமிழகம் வெற்றி நடைபோடுவதாக அதிமுக விளம்பரம் செய்கிறது. தமிழகத்தை நடக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டீர்கள். வேலைவாய்ப்பு முற்றிலும் இல்லை. புதிய தொழிற்கூடங்கள் இல்லை. அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றித் தரவில்லை. பாதி ஊதியத்தைக் குடிநீருக்கே செலவிடும் நிலை. நியாயவிலைக் கடைகளில் நியாயமாக எதுவும் வழங்கப்படுவதில்லை. வசதியானவர்களுக்கே எல்லாம் கிடைக்கிறது.
தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறார்கள். இவ்வளவு முதலீடு வந்திருந்தால் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்?. நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நான் சந்தித்தவர்களோ, அவர்களுக்குத் தெரிந்தவர்களோ என யாருமே வேலை கிடைத்ததாகக் கூறவில்லை. அப்படி ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை.
செல்லூர் கண்மாயைச் சீரமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் இக்கண்மாயைப் பார்த்தபோது ஆகாயத் தாமரை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. தூர் வாரியிருந்தால் தண்ணீர் நிறைந்திருக்கும். ஆகாயத் தாமரை இருந்திருக்காது. அதற்கு ஒதுக்கிய பணம் என்ன ஆனது? இதேபோலத்தான் தமிழகத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படும் தொழில் முதலீடுகளும். அந்தப் பணம் எங்கே போனது எனத் தெரியவில்லை. பெண் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.81 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்தப் பணமும் எங்கே போனது எனத் தெரியவில்லை. கணக்கு மட்டுமே எழுதப்படுகிறது.
கரோனாவின்போது முகக்கவசம், மருந்து, கிட் வாங்க எனக் கணக்கு எழுதினர். தனக்கு என்ன வருமானம் என ஆட்சியாளர்கள் கணக்குப் போடுகிறார்களே தவிர, மக்களுக்கு என எதையும் செய்வதில்லை.
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம், விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர், பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார். தனது கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையிலும், இந்த ஆட்சி துரோகம் இழைத்து வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் கற்றுத்தர வேண்டும்''.
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago