நீட் தேர்வு முறைகேடு; சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

By ஆர்.பாலசரவணக்குமார்

நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடர்ந்துள்ள வழக்கை சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வு நடந்து முடிந்தபின் அக்டோபர் மாதம் 5-ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது.

இதில், அக்டோபர் 8-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 700-க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17-ம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆகக் குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகள் மற்றும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 594 மதிப்பெண் எனக் காட்டிய 'ஸ்க்ரீன் ஷாட்' புகைப்படங்களும் மாணவர் தரப்பில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (பிப். 09) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணைத் திரிக்க முடியும் என வாதத்திற்காகக் கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றார். தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம் எனத் தெரிவித்த அவர், தவறை ஒப்புக்கொள்வதற்கு மாறாக தேர்வு முகமையின் கவுரவத்தைக் காப்பாற்ற மத்திய அரசு முயல்வதாகவும், மாணவர் மீது தவறு உள்ளதோ தேசிய தேர்வு முகமை மீது தவறு உள்ளதோ எதுவாயினும், இது மாணவர்கள் மற்றும் அவர்களது மருத்துவக் கனவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

அப்போது இந்த வழக்கில், சைபர் குற்றங்களைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுப் பிரிவை (Special investigation team) அமைக்கலாமா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அதற்கான அவசியம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தார். பின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்கக் கோருவர் எனவும், தேசிய தகவலியம் மையம் (National informatics centre) இந்த விவாகரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும் எனவும், அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது எனவும், மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதெனவும் அவர் வாதிட்டார்.

தேசிய தேர்வு முகமை (National testing agency )சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும், இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை எனவும் வாதிட்டார்.

மேலும், ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் தாளின் திருத்தம் செய்யவோ, ஏற்கெனவே எழுதியவற்றை அழிக்கவோ முடியாதெனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்டமைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு மற்றும் மனுதாரர் சார்பில் எழுத்துபூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 18-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்