திருப்பத்தூர் அருகே கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘சித்திரமேழி’ கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் கள ஆய்வு நடத்தியபோது, சோழர் காலத்தைச் சேர்ந்த இடங்கைத்தள சித்திரமேழி கல்வெட்டைக் கண்டெடுத்தனர்.
இதுகுறித்துப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு கூறியதாவது:
''திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கம் அருகே விவசாய நிலத்தில் கள ஆய்வு நடத்தியபோது அங்கு நிலத்தில் புதைந்த நிலையில், ‘சித்திரமேழி’ கல்வெட்டு இருப்பதைக் கண்டெடுத்தோம். இக்கல்வெட்டானது 3 அடி அகலமும், ஆறரை அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் மேற்புறம் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டு, பக்கவாட்டில் 2 முழு உருவ யானைகள் துதிக்கையில் கலச நீரைத் திருமகள் மீது பொழிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யானைகள் கார்மேகங்களாகவும், திருமகள் பூமாதேவியாகவும் கருதப்படுகிறது. இவை வளமைக் குறியீடுகளாகும். யானைகளுக்கு மேல் 2 பக்கங்களிலும் சாமரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கரண்ட மகுடம் அணிந்த பாத பீடத்தின் மீது இடது காலை மடித்து வைத்து, வலது காலைத் தொங்கவிட்டப்படி திருமகள் காட்சியளிப்பதுபோல் இக்கல்வெட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருமகளின் பாதத்துக்கு கீழே 2 முக்காலிகள் மீது பூரண கும்பக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே 2 அழகிய குத்துவிளக்குகளும், அதற்கு கீழே ஒரு யானை அங்குசம், முரசு, குரடு, ‘வளரி’ (பூமராங்) உழு கலப்பை, கொடிக் கம்பம் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் போர்ப்படை, உழு படை, தொழில்படை ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாணிபம் செய்யும் குழுவினர் இந்த 3 படைகளையும் வைத்திருக்க அரசால் அனுமதிக்கப்பட்டனர். சிற்ப வேலைப்பாடுகளுக்குக் கீழே 10 வரிகள் கொண்ட எழுத்துப் பொறிப்புகளும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது.
தனியார் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டானது கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனின் 24-வது ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070-ம் ஆண்டு முதல் கி.பி. 1120-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அந்த வகையில் இக்கல்வெட்டானது கி.பி.1094-ம் ஆண்டில் பொறிக்கப்பட்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.
அக்காலங்களில் தமிழகத்தில் ‘இடங்கை’ மற்றும் ‘வலங்கை’ என 2 பிரிவுகள் இருந்தன. வலங்கைப்பிரிவு என்பது, எண்ணிக்கையின் அடிப்படையில் இடங்கைப்பிரிவினரைவிட உயர்ந்து நிலையில் இருந்தனர். இடங்கைப்பிரிவில் 6 உட்பிரிவுகளும், வலங்கைப்பிரிவில் 60 உட்பிரிவுகளும் இருந்துள்ளன. வலங்கையில் இருந்த பிரிவுகள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பணிகளைச் செய்து வந்தனர். இடங்கையைச் சேர்ந்தவர்கள் வேளாண்மையை ஒட்டியுள்ள தொழில்கள், அதாவது உலோகம் தயாரித்தல், நெசவு உள்ளிட்ட கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் கிடைத்துள்ள இந்தக் கல்வெட்டு, தமிழக வரலாற்றில் மிக முக்கியமான கல்வெட்டாகும். எனவே, திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றுத் தடயங்களில் குறிப்பிடத்தக்க இந்த கல்வெட்டினைத் தமிழகத் தொல்லியல் துறையினர் மீட்டு உரிய முறையில் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்''.
இவ்வாறு பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago