மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் நேரடிநியமனம்: வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பாணையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 08) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பாணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; மூன்று இணைச் செயலாளர்கள் (Joint Secretary) மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் பணியாற்றிய பயிற்சி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று யூபிஎஸ்சி குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய்த்துறை மற்றும் மத்திய நிதித்துறை, வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களாக தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 315-ன்படி பொதுப்பணித் தேர்வு ஆணையம் (Public Service Commission) அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே மத்திய அரசுப் பணிகள் மற்றும் மாநில அரசுப் பணிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கியப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

அதன்படிதான், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்ற முதன்மைப் பணிகளுக்கு அந்தந்தத் தேர்வு ஆணையங்கள் தனியே தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி, அதன்பின்னர் பயிற்சி அளித்து, மத்திய அரசுப் பணிகளுக்குச் சேர்க்கப்படுவர். பின்னர், மத்திய அரசின் துணைச் செயலாளர்கள் தொடங்கி பல அரசுத் துறைச் செயலாளர்கள் என பதவி உயர்வு பெறுவர்.

மத்தியப் பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி பின்பற்றப்படுகின்றது. இதனால், மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயலகப் பணி இடங்களில், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 23 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மத்திய பாஜக அரசு, சமூக நீதிக்கு முடிவு கட்டும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாகப் பிறப்பித்து வருகின்றது.

மத்திய அரசின் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள் குழாமைச் சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்திட பாஜக அரசு முனைந்து வருகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பாணையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்